Wednesday, May 19, 2010

எஸ்.பி.,யாக வேண்டும்: போலீஸ் ஸ்டேஷனை பெற்றோர் வீடாக நினைக்கும் சிறுவன் விருப்பம்


பெரம்பலூர் : போலீஸ் ஸ்டேஷனை பெற்றோர் வீடாக நினைத்து வாழும் சிறுவன் ஒருவன் தான் போலீஸ் எஸ்.பி.,யாக வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளான். விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா, பாலி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜு(50); இவரது மகன் மணிகண்டன்(14).

ராஜு, 2008ம் ஆண்டு, மணிகண்டனை, பெரம்பலூர் மாவட்டம் கொளக்காநத்தம் கிராமத்தில் தங்கி, கூலியாட்கள் வைத்து ஆடுகளை மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராமர்(55) என்பவரிடம் 6,000 ரூபாய்க்கு விற்பனை செய்தார். ராமர், சிறுவன் மணிகண்டனுக்கு கஞ்சி மட்டும் உணவாக தந்து, ஆடு மேய்க்கும் வேலையில் ஈடுபடுத்தி கொடுமைப்படுத்தினார். கடந்தாண்டு ஜூன் 12ம் தேதி கொளக்காநத்தம் கிராமத்திலிருந்து தப்பி வந்து, பெரம்பலூர் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் அடைந்தான். சிறுவன் மணிகண்டனின் சோகக்கதையை கேட்ட பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் சிவசுப்ரமணியன், அவன் படித்த பாலி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் டி.சி., வாங்கி வந்து, பெரம்பலூர் ஆண்டிமுத்து சின்னப்பிள்ளை அறக்கட்டளை உதவியுடன், அவன் படிப்பதற்கு ஏற்பாடு செய்தார். இன்ஸ்பெக்டர் சிவசுப்ரமணியன் உதவியுடன் ஐந்தாம் வகுப்பு முடித்து தேர்வு எழுதி விட்டு, கோடை விடைமுறையை, பெரம்பலூர் போலீஸ் ஸ்டேஷனில் கழித்து வரும் சிறுவன் மணிகண்டனை, இன்ஸ்பெக்டர் சிவசுப்ரமணியன் மற்றும் போலீசார் தங்கள் வீட்டிலும், ஓட்டலிலும் உணவு வாங்கி கொடுத்து பாதுகாத்து வருகின்றனர்.

சிறுவன் மணிகண்டன் கூறியதாவது: என் அப்பா, அம்மா இருவரும் கேரளாவில் இருக்கின்றனர். என் அப்பா, என்னை 6,000ம் ரூபாய்க்கு ஆடு மேய்க்கும் வேலைக்கு விற்று விட்டார். என் முதலாளி அடித்து துன்புறுத்தினார். நான் அங்கிருந்து தப்பி வந்து பெரம்பலூர் ஸ்டேஷனில் தஞ்சமடைந்தேன். என்னை இன்ஸ்பெக்டர் சார் தத்தெடுத்து வளர்த்து வருகிறார். போலீஸ் ஸ்டேஷனுக்கு பின்னால் உள்ள அறையில் தங்கி உள்ளேன். என்னை விற்பனை செய்த என் பெற்றோரை பார்க்க நான் விரும்பவில்லை. நன்றாக படித்து, போலீஸ் எஸ்.பி.,யாக வர வேண்டும் என்பதே என் ஆசை. என் பெற்றோர் வீடாக நினைத்து ஸ்டேஷனுக்கு வந்துள்ளேன். இவ்வாறு மணிகண்டன் கூறினான்.

Monday, May 3, 2010

மும்பை தாக்குதல் வழக்கில் பரபரப்பு தீர்ப்பு : 2 பேர் விடுதலை


மும்பை :மும்பைத் தாக்குதல் வழக்கில் நேற்று பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டது. தாக்குதலின் போது கைதான பாகிஸ்தான் பயங்கரவாதி அஜ்மல் அமீர் கசாப் குற்றவாளி என, சிறப்பு கோர்ட் நீதிபதி அறிவித்தார். அதே நேரத்தில், இந்த வழக்கில் பயங்கரவாதிகளுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்ட  இருவர் விடுவிக்கப்பட்டனர். 166 பேர் பலியாக காரணமாக இருந்த இந்த வழக்கில் 1,522 பக்கங்களில் தீர்ப்பு வழங்கப்பட்டது. கசாப்பிற்கான தண்டனை குறித்து இன்று வக்கீல்களின் வாதம் நடக்கிறது. பயங்கரவாத தாக்குதல் வழக்குகளில் மிக வேகமாக விசாரணை நடந்து, தீர்ப்பு வழங்கப்பட்டது இந்த வழக்கே ஆகும்.

கடந்த 2008 நவம்பர் 26ம் தேதி, பாகிஸ்தானிலிருந்து வந்த 10 பயங்கரவாதிகள், மும்பையில் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், காமா மருத்துவமனை, தாஜ் ஓட்டல் உட்பட பல இடங்களில் தாக்குதல் நடத்தினர். இந்தக் கொடூர தாக்குதலில், வெளிநாட்டவர்கள் உட்பட 166 பேர் கொல்லப்பட்டனர்; ஏராளமானோர் காயம் அடைந்தனர். பயங்கரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் எடுத்த அதிரடி நடவடிக்கையில், ஒன்பது பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப் என்ற பயங்கரவாதி மட்டும் கைதானான். இவன், பாகிஸ்தானின் பரித்கோட் நகரைச் சேர்ந்தவன். பள்ளிப்படிப்பை பாதியில் கைவிட்டவன்.மேலும், இந்த பயங்கரவாதிகளுக்கு தாக்குதல் நடத்த உதவியதாக, இந்தியாவைச் சேர்ந்த பாஹீம் அன்சாரி மற்றும் சபாபுதீன் அகமது என்ற இருவர் கைது செய்யப்பட்டனர். இந்த மூன்று பேருக்கும் எதிரான வழக்கு, மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அமைக்கப்பட்ட சிறப்பு கோர்ட்டில் நடந்தது. நீதிபதி தகிலியானி வழக்கை விசாரித்தார். அரசு தரப்பு வக்கீலாக உஜ்வால்நிகாம் ஆஜரானார்.

இந்தியாவில் பயங்கரவாத சம்பவங்கள் தொடர்பான வழக்குகளில் மிக வேகமாக முடிவுக்கு வந்த வழக்கு இதுவே.  தவிரவும், அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ., வந்து ஆஜரான வரலாற்று முக்கியத்துவம் பெற்ற வழக்கும் ஆகும். மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. கசாப், குண்டுதுளைக்காத வகையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தான். தீர்ப்பையொட்டி, மும்பை ஆர்தர்ரோடு சிறையைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

தீர்ப்பு:  நீதிபதி தகிலியானி தீர்ப்பை வழங்கினார்.

1,522 பக்கங்கள் கொண்ட தீர்ப்பில் அவர் கூறியுள்ளதாவது:இந்தியாவுக்கு எதிராக போர் தொடுத்ததாக, கசாப் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு உண்மை என நிரூபணமாகியுள்ளது.  அப்பாவி மக்களை கொன்று குவித்துள்ளான். ஆயுதங்கள் சட்டம், சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், வெடிமருந்துகள் சட்டம், ரயில்வே சட்டம் என, 86 சட்டப் பிரிவுகளின் கீழ் கசாப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அனைத்து சட்டப் பிரிவுகளின் கீழும் அவன் குற்றவாளியே.மும்பைத் தாக்குதலை வெறும் படுகொலை என சொல்ல முடியாது. இது இந்தியாவிற்கு எதிராக நடத்தப்பட்ட போரின் ஒரு பகுதி என்றே சொல்ல வேண்டும். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை பாகிஸ்தானில் இருந்து சிலர் இயக்கியுள்ளனர்.மூத்த போலீஸ் அதிகாரிகள்  ஹேமந்த் கர்காரே, அசோக் காம்தே,  விஜய் சலாஸ்கர், உதவி போலீஸ் இன்ஸ்பெக்டர் துக்காராம் ஓம்பாலே ஆகியோரை கொன்ற வழக்கிலும் கசாப் குற்றவாளியே.

அதேநேரத்தில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு இந்தியர்களான பாஹீம் அன்சாரி மற்றும் சபாபுதீன் அகமது ஆகிய இருவருக்கும் எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாததால், அவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்கள் சந்தேகத்திற்கு இடமானதாக இருப்பதால், சந்தேகத்தின் பலனை அவர்களுக்கு சாதகமாக்கி விடுதலை செய்கிறேன்.இந்த வழக்கில், மீடியா போட்டோகிராபர்கள் செபஸ்டியன் டிசவுசா மற்றும் ஸ்ரீராம் வெர்னீகர் (கசாப் சுட்டதை படம் பிடித்தவர்கள்), சத்ரபதி சிவாஜி ரயில் நிலைய அறிவிப்பாளர் விஷ்ணு ஜெண்டே, 11 வயது சிறுமி தேவிகா ரோதவான் ஆகியோர் அளித்த சாட்சியங்கள் கோர்ட்டிற்கு மிகவும் உதவியாக இருந்தன. மேலும், இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையில், தலைமறைவு குற்றவாளிகள் என, குறிப்பிடப்பட்டுள்ள 35 பேரில், 20 பேர் குற்றவாளிகள் என்பதையும்  கோர்ட் கண்டறிந்துள்ளது.இவ்வாறு நீதிபதி தகிலியானி கூறினார்.

குற்றவாளி  கசாப் என்று  நீதிபதி அறிவித்த போது, அவன் ஏதும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தவில்லை. ஆனால், மற்ற இருவரும் தண்டனையின்றி  விடுவிக்கப்பட்ட போது, அவர்கள் புன்முறுவல் பூத்து மகிழ்ச்சி தெரிவித்தனர். கசாப் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால், அவனுக்கான தண்டனை குறித்து இன்று வக்கீல்களின் வாதம் நடக்கிறது. மரண தண்டனை வழங்க வேண்டும் என, அரசு தரப்பில் வாதிடப்படும் வாய்ப்பு அதிகம்.

தீர்ப்பு பற்றி கருத்து தெரிவித்த அரசு சிறப்பு வக்கீல் உஜ்வால் நிகாம், ''பாஹீம் அன்சாரி, சபாபுதீன் அகமது விடுதலையை எதிர்த்து, ஐகோர்ட்டில் அப்பீல் செய்யும்படி அரசுக்கு பரிந்துரை செய்வேன். கசாப்பை குற்றவாளி என, அறிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது,'' என்றார்.