Wednesday, May 19, 2010

எஸ்.பி.,யாக வேண்டும்: போலீஸ் ஸ்டேஷனை பெற்றோர் வீடாக நினைக்கும் சிறுவன் விருப்பம்


பெரம்பலூர் : போலீஸ் ஸ்டேஷனை பெற்றோர் வீடாக நினைத்து வாழும் சிறுவன் ஒருவன் தான் போலீஸ் எஸ்.பி.,யாக வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளான். விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா, பாலி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜு(50); இவரது மகன் மணிகண்டன்(14).

ராஜு, 2008ம் ஆண்டு, மணிகண்டனை, பெரம்பலூர் மாவட்டம் கொளக்காநத்தம் கிராமத்தில் தங்கி, கூலியாட்கள் வைத்து ஆடுகளை மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராமர்(55) என்பவரிடம் 6,000 ரூபாய்க்கு விற்பனை செய்தார். ராமர், சிறுவன் மணிகண்டனுக்கு கஞ்சி மட்டும் உணவாக தந்து, ஆடு மேய்க்கும் வேலையில் ஈடுபடுத்தி கொடுமைப்படுத்தினார். கடந்தாண்டு ஜூன் 12ம் தேதி கொளக்காநத்தம் கிராமத்திலிருந்து தப்பி வந்து, பெரம்பலூர் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் அடைந்தான். சிறுவன் மணிகண்டனின் சோகக்கதையை கேட்ட பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் சிவசுப்ரமணியன், அவன் படித்த பாலி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் டி.சி., வாங்கி வந்து, பெரம்பலூர் ஆண்டிமுத்து சின்னப்பிள்ளை அறக்கட்டளை உதவியுடன், அவன் படிப்பதற்கு ஏற்பாடு செய்தார். இன்ஸ்பெக்டர் சிவசுப்ரமணியன் உதவியுடன் ஐந்தாம் வகுப்பு முடித்து தேர்வு எழுதி விட்டு, கோடை விடைமுறையை, பெரம்பலூர் போலீஸ் ஸ்டேஷனில் கழித்து வரும் சிறுவன் மணிகண்டனை, இன்ஸ்பெக்டர் சிவசுப்ரமணியன் மற்றும் போலீசார் தங்கள் வீட்டிலும், ஓட்டலிலும் உணவு வாங்கி கொடுத்து பாதுகாத்து வருகின்றனர்.

சிறுவன் மணிகண்டன் கூறியதாவது: என் அப்பா, அம்மா இருவரும் கேரளாவில் இருக்கின்றனர். என் அப்பா, என்னை 6,000ம் ரூபாய்க்கு ஆடு மேய்க்கும் வேலைக்கு விற்று விட்டார். என் முதலாளி அடித்து துன்புறுத்தினார். நான் அங்கிருந்து தப்பி வந்து பெரம்பலூர் ஸ்டேஷனில் தஞ்சமடைந்தேன். என்னை இன்ஸ்பெக்டர் சார் தத்தெடுத்து வளர்த்து வருகிறார். போலீஸ் ஸ்டேஷனுக்கு பின்னால் உள்ள அறையில் தங்கி உள்ளேன். என்னை விற்பனை செய்த என் பெற்றோரை பார்க்க நான் விரும்பவில்லை. நன்றாக படித்து, போலீஸ் எஸ்.பி.,யாக வர வேண்டும் என்பதே என் ஆசை. என் பெற்றோர் வீடாக நினைத்து ஸ்டேஷனுக்கு வந்துள்ளேன். இவ்வாறு மணிகண்டன் கூறினான்.

No comments:

Post a Comment