Saturday, April 24, 2010

தேவடியா பசங்க……

இந்த கொளுத்தும் வெயிலில், எல்லோரும் ஏ.சி காரில் செல்லதான் ஆசைப்படுவார்கள், சந்தர்ப்பம் கிடைத்தால். எனக்கு என் பல்சர் பைக்தான் ஏ.சி கார். என்னுடைய உற்ற தோழன் என்று கூட சொல்லலாம். நான் நினைத்த மாத்திரத்துக்கு என்னை கொண்டு சேர்த்து விடும். அதுவும் பத்திரமாக..நான் என்ன சொன்னாலும் கேட்கும். என் பயணம் முழுவதும், என் மேல் ஒட்டிக்கொண்டு எப்போதும் நேசத்துடன்.
நம்மை மாதிரி நடுத்தர வர்க்கத்தின் செலவீனங்களைப் புரிந்து கொண்டு இதுவரை ஒருமுறை கூட எனக்கு செலவு வைத்ததில்லை. சைடு ஸ்டாண்ட் போட்டு அது நிற்கும் அழகைப் பார்த்து கொண்டே இருக்கலாம் போல இருக்கும். ஒரு மாதிரி கர்வத்துடன் நிற்பது போல் இருக்கும். காலை ஆறு மணி போல பைக்கை எடுத்துக் கொண்டு கொஞ்சம் ஆள் நடமாட்டமில்லா இடங்களில், தென்றலை அனுபவித்துக் கொண்டு ஓட்டிப்பாருங்கள். அனைத்தையும் மறந்து விடுவீர்கள்…காலை பேப்பர், பால் பாக்கெட், மாத சம்பளம், அப்ரைசல், ஹிட்ஸ், பின்னூட்டம் எல்லாம் தூசி போல இருக்கும்.
அப்படிப்பட்ட என் தோழனுக்கு நேற்று என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. மக்கர் செய்தான். ஆபிஸிலிருந்து கிளம்ப முடியவில்லை. நான் என்றும் அவனை உதைத்து ஸ்டார்ட் பண்ணியதில்லை, அவனுக்கு வலிக்கும் என்பதால். எப்போதும் பட்டன் ஸ்டார்ட்தான். முதல் முறையாக அவனை உதைத்தேன், மனதைக் கல்லாக்கிக் கொண்டு. அப்படியும் அமைதியாக இருந்தான்.
எனக்கு எப்போதும் பிடிக்காத சென்னையின் நெரிசல் நிறைந்த பஸ் பயணத்திற்கு ரெடியானேன். வேளச்சேரி வழியாக செல்லும் பஸ்ஸில் ஏறினேன். எனக்கு எப்போதும் நெரிசல் நிறைந்த பஸ் பயணம் பிடிப்பதில்லை. ஆண்களையே கற்பழித்து சக்கையாக தூக்கி எறிந்து விடும் நீங்கள் இறங்க வேண்டிய பஸ் நிறுத்தத்தில். அதனால், ஒரு ஓரமாக நின்று கொண்டேன்.
அப்போதுதான் அவளைப் பார்த்தேன். ஒரு 22 வயது இருக்கும். மாநிறம். சென்னை வெயிலின் கொடுமை அவள் முகத்தில் தெரிந்தது. வியர்த்து வழிந்து கொண்டிருந்தாள். அவளுடைய அழுக்கேறிய உடை அவள் ஏழ்மை நிலைமையைக் காட்டியது. கலைந்த முடி அவள் வேலைக் கொடுமையைக் காட்டியது. தலை முழுக்க தூசி. கண்டிப்பாக ஏதோ தொழிற்சாலையில் வேலை பார்க்க வேண்டும். வேலை முடித்து வீடு செல்கிறாள் போலும்.
கையில் சற்று கிழிந்து போன மலிவு விலை ஹேண்ட்பேக் வைத்திருந்தாள். கண்டக்டரிடம் டிக்கெட் வாங்க ஹேண்ட்பேக்கை திறந்தாள். ஹேண்ட்பேக் சற்று சரியவே , அதில் உள்ள அனைத்து சில்லறைகளும் சிதறின. கதறி விட்டாள்..”அய்யோ..என் காசு..” பாவம், அந்தக் காசை சம்பாதிப்பதற்கு எவ்வளவு கஷ்டப்படிருப்பாள். வேலையில் எவ்வளவு அவமானங்களை தாங்கிக்கொண்டு…ஒரு கணம் பெண் என்பதை மறந்து, எல்லோரையும் கை வைத்து தள்ளினாள். குனிந்து எல்லாவற்றையும் பொறுக்க ஆரம்பித்தாள், ஆடை விலகுவதை கூட மறந்து. எல்லாக் கழுகு பார்வைகளும் அவள் மேலேயே இருந்தன சில பேர் உதவ முயற்சி செய்தார்கள். சில பேர்,மனசாட்சியை அடகு வைத்துக் கொண்டு, சாக்காக அவளை தொட முயற்சித்தார்கள். அவளுக்கு அதெல்லாம் பெரியதாக தெரியவில்லை. எப்படியாவது எல்லாக் காசுகளையும் எடுத்து விடவேண்டுமென்பதே அவள் நோக்கமாக இருந்தது. கண்டிப்பாக அந்தக் காசுதான் அவள் குடும்பத்திற்கு இரவு சாப்பாட்டுக்கு என்று தெரிந்தது.
ஒரு வழியாக எல்லாக் காசுகளையும் எடுத்த பின்புதான் நிம்மதியானாள். எதையோ சாதித்த திருப்தி தெரிந்தது. அவள் ஆடைகளை சரி செய்து கொண்டாள். “1 பாரிஸ் கார்னர்” என்று டிக்கெட் வாங்கும்போது அவள் குரலில் ஒரு உற்சாகம் தெரிந்தது. திடிரென்று அவள் முகம் ஒரு மாதிரியானது. சற்று நெளிந்தாள். முன்னே வர முயற்சித்தாள். ஆனால் கூட்டம் அவளை விடவில்லை. அப்போதுதான் கவனித்தேன். அவள் பின்னால் நின்று கொண்டு ஒரு மனித மிருகம் அவளை உரசிக் கொண்டு இருந்தது. அந்த மிருகத்திற்கு ஒரு 40 வ்யது இருக்கும். அவனுக்கு அவள் வயதில் கண்டிப்பாக ஒரு பெண் இருக்க வேண்டும். முகத்தில் கேவலமான ஒரு புன்னகை. அவளை உரசுவதன் மூலம் அப்படி என்ன சாதித்தானோ என்று தெரியவில்லை., அவன் அம்மாவிற்கும் தங்கச்சிக்கும் இருப்பதுதான் இவளுக்கும் இருக்கும் என்பதை மறந்து.
அவளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. பல்லைக் கடித்துக் கொண்டாள். முடிந்த வரை தள்ளிப்போக முயற்சித்தாள். ஆனால் இருக்கும் கூட்டத்தில் முடியவில்லை. அவனும் இதையே சாக்காக எடுத்துக் கொண்டு மேலும் உரசினான். ஒரு கட்டத்தில் வெறுத்துப் போனாள். திரும்பி அவனை ஒரு முறை முறைத்தாள். அவன் தள்ளிப்போனான். ஆனால் திரும்பவும் அவளருகிலேயே வந்தான். எனக்கு அவனை அடிக்க வேண்டும் போல இருந்தது. ஆனால் நான் ஏதாவது சொன்னால் திரும்ப கிடைக்க போகும் பதில்,”அப்படி சொகுசா வரணும்னா ஏ.சி காரில் வரவேண்டியதுதான..பஸ்ஸுனா அப்படிதான்பா இருக்கும்..” அதற்குள் என் ஸ்டாப் வந்ததால் அவசரமாக இறங்கினேன், என் கையாலாகதனத்தை நொந்து கொண்டு..
இறங்கி திரும்பி பார்த்தால், அவளும் என் ஸ்டாப்பில் இறங்கியிருந்தாள். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. “பாரிஸ் கார்னர்” என்றல்லவா டிக்கெட் எடுத்திருந்தாள். யோசனையுடன் நான் கிளம்ப எத்தனித்த போது அவள் என்னை நோக்கி வருவது தெரிந்தது….நான் நின்றேன்..
“அண்ணா..ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா..”
அப்போதுதான் அவள் கண்களைக் கவனித்தேன். கண்கள் கலங்கியிருந்தன. முகம் பஸ்ஸில் நடந்த அவமானத்தை காட்டியது. சரியாக சொல்ல வேண்டுமென்றால் கூனி குறுகி போயிருந்தாள்..எனக்கு ஒரு தங்கை இல்லை. ஆனால் அவளை பார்க்கும்போது என் தங்கையாக நினைக்க தோன்றியது..
“சொல்லுமா…”
“நான் பாரிஸ் கார்னர் போகணும்..இந்த ஸ்டாப்புல பாரிஸ் கார்னர் பஸ் நிக்குமான்னு தெரியுமா..”
“நம்ம வந்த பஸ்ஸே பாரிஸ் கார்னர் போகுமே..தெரியாம இறங்கிட்டியா..”
“இல்லைண்ணே..பஸ்ஸில கூட்டம் அதிகம்...ரொம்ப இடிக்கிறாயிங்க..இடுப்பில கை…”
அதற்கு மேல் அவளால் பேச முடியவில்லை. அதுவரை அவள் கண்ணில் அடங்கியிருந்த கண்ணிர் அவளை அறியாமல் வெளியே வந்தது..அவசரமாக துடைத்துக் கொண்டு அந்த வார்த்தையை சொன்னாள்…
“தேவடியா பசங்க…”

No comments:

Post a Comment