Monday, April 12, 2010

விகிர்தி' புது வருடம் 2010



இந்துக்களின் தமிழ்ப் புதுவருடம் சித்திரை மாதத்தில்தான் ஆரம்பமாகிறது. அதாவது மேஷ ராசியில் இருந்து மீன ராசி வரை பன்னிரண்டு ராசிகள் சூரியன் செல்லுகின்ற கதியை நிர்ணயிக்கின்றன.

ஒவ்வொரு ராசியிலும் சூரியன் வரும்போது தமிழ் மாதம் பிறக்கின்றது. சூரியன் சஞ்சரிக்கும் காலங்களே ஒவ்வொரு சூரிய மாதமாகக் கணக்கிடப்படுகிறது.

சித்திரை முதல் பங்குனி வரை 12 மாதங்களைக் கொண்டதே ஒரு தமிழ் வருடமெனக் கொள்வது எம்முடைய மரபாகும்.

புதுவருடத்தை கணக்கிடும்போது சூரியனை முதலாகக் கொண்ட காரணத்தால் 'சௌரமானம்'' என்ற பெயரும் வழங்கப்படுகிறது.

அதுபோல சந்திரனைக் கொண்டு புது வருடத்தைக் கணக்கிடும் முறைக்கு 'சாந்தரமானம்'' என்ற பெயர் வழங்கப்படுகின்றது.

'சாந்தரமானம்'' முறை மூலம் புது வருடத்தைக் கணிப்பவர்கள் பெரும்பாலும் ஆந்திர தேசத்தைச் சேர்ந்த தெலுங்கர்களாவர். ஆனால் தமிழர்களின் புதுவருடமானது 'சௌரமானம்' எனப்படுகிறது. அதாவது சூரிய தேவனை முழு முதலாகக் கொண்டு புது வருடத்தைக் கணிப்பதாகும்.

ஆண்டுகளைக் கணக்கிடுகின்ற முறை இடத்துக்கு இடம் இனத்திற்கு இனம் வேறுபாடு கொண்டு காணப்படுகிறது.

சர்வதேச ரீதியில் ஜனவரி முதல் டிசம்பர் வரையான 12 மாத காலப் பகுதியை ஆங்கில ஆண்டாகக் கணிக்கிறார்கள். இம்முறையைத் தான் அனைத்துலக மக்களும் பொதுத் தொடர்பு ஆண்டாகக் கைக்கொள்கிறார்கள்.

தெலுங்கு தேசத்தவர்கள் 'சாந்தரமானம்' முறையை கடைப்பிடிக்கிறார்கள். கேரள தேசத்தவர்கள் தமது ஆண்டு முறைமையை 'கொல்லம்' என்று கூறுகிறார்கள்.

இவ்வாறு இனத்திற்கு இனம் புது வருடப் பிறப்பு வேறுபட்டாலும் அனைத்து இன மக்களும் தமது புதுவருடப் பிறப்பை சம்பிரதாயபூர்வமாகக் கொண்டாடுவதற்கு மிகவும் விருப்பு உடையவர்களாக உள்ளார்கள்.

ஏப்ரல் மாத நடுப்பகுதியில் வருகின்ற சித்திரை மாதப் பிறப்புடன் பாரம்பரியமாக ஆரம்பமாகிறது 'தமிழ்ப் புதுவருடம்'.

இதைத்தான் சிங்கள பௌத்த மககளும் தமது வருடப் பிறப்பாகக் கொண்டாடும் மரபு உண்டு. இது இரண்டு இன மக்களிடையே காணப்படுகின்ற மிக முக்கியமான ஒற்றுமையாகும். இச்சித்திரைப் புதுவருடம்தான் தமிழ் - சிங்கள மக்களினது வருடத் தொடக்கமாகக் கைக்கொள்ளப்படுகிறது.

எந்த ஒரு காரியத்திற்கும் அல்லது செயலுக்கும் தொடக்கமும் முடிவும் கட்டாயமாக உண்டு. அதை நம் ஆன்றோர்கள் மரபு வழியாக பேணி வருகிறார்கள்.

அதே போலத்தான் புது வருடத்தையும் காலங் காலமாக நாம் கொண்டாடி வருகிறோம். 'நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்' எனக் கருதி சித்திரையை மகிழ்வுடன் வரவேற்கும் மரபு நம்மிடம் உண்டு.

இதன் காரணமாக தமது மனதில் உள்ள துன்பங்கள், துயரங்கள், கோபதாபங்கள், பழைய பகைமை உணர்வுகள் ஆகியவற்றை மறந்து, மன்னித்து ஒரு புதிய நினைவுடன், புதிய உறவுடன் புதுவருடத்தை நாம் வரவேற்கும் விதத்தில் நம் பெரியவர்கள் கொண்டாட்டங்களை அமைத்துள்ளார்கள்.

'சித்திரைப் புதுவருடம்' எப்பொழுது தொடக்கம் கொண்டாடப்படுகிறது? இக்கேள்விக்குப் பதில் கூறுவது அவ்வளவு எளிதல்ல. காரணம் என்னவெனில் எழுத்து மூலமான எந்த ஆவணமும் இது தொடர்பாகக் கிடையாதென்பர்.

நம் முன்னோர்கள் வழி வழியாக, மொழி வழியாக செய்தவற்றை நல்ல நோக்கத்துடன் நாமும் பின்பற்றுகிறோம். ஆனாலும் முற்காலங்களில் 'வேங்கை' மரம் பூத்து புது வருடத்தை அறிவித்ததாகவும் அறியக் கிடக்கிறது.

இதன்மூலம் இளவேனிற் கால தொடக்கமான சித்திரையிலேயே புது வருடத்தை கொண்டாடும் வழக்கம் நம் முன்னோர்களிடம் இருந்துள்ளது என்பது புலனாகிறது. காலங்காலமாக சித்திரைப் புது வருடத்தை நாம் சில நடைமுறைகளுடன் கொண்டாடுகிறோம்.

அதிகாலையில் எழுந்து மருத்து நீர் தேய்த்து நீராடுவது நாம் பழங்காலந் தொட்டு செய்து வரும் மரபாகும். இம்மருத்து நீரில் சேர்க்கப்படும் பொருட்கள் உடல் நலத்திற்கு ஏற்றனவாக உள்ளன.

சித்திரை மாதம் என்பது பனி முடிந்து இளவேனிற் காலம் தொடங்கும் காலமாகும். இப்பருவ மாற்ற காலத்தில் எமது உடலை மருந்துகள் மற்றும் சடங்குகள் மூலமாக நம் பெரியோர்கள் காத்தார்கள். இதனால் தான் பல மூலிகைப் பயன்பாடு கொண்ட மருத்து நீர் தயாரிக்கப்பட்டு ஆலயங்களில் வழங்கப்படுகின்றது.

ஆலயங்களுக்குச் சென்று அதை வாங்கி வந்து வீடுகளில் உள்ள பெரியவர்களிடம் கொடுத்து அதிகாலையில் கிழக்கு நோக்கி நின்று அதை தலையில் வைப்பது பாரம்பரியமான ஒரு நடைமுறையாகும்.

தாழம்பூ, தாமரைப்பூ, மாதுளம்பூ, துளசி, விஷ்ணு கிரந்தி, சீதேவியார் செங்கழுநீர், வில்வம், அறுகு, பீர்க்கு, பால், கோசலம், கோமயம், கோரோசனை, மஞ்சள், மிளகு, திப்பிலி, சுக்கு போன்றவற்றை தூய்மையான நீரில் சேர்த்து காய்ச்சி மருத்து நீர் பெறப்படுகிறது.

தமிழ் வருடக் கணக்கில் 60 ஆண்டு சுழற்சியில் 'விரோதி' வருடம் சென்று 'விகிர்தி' வருடம் இவ்வாண்டு பிறக்கிறது. இவ்விகிர்தி வருடம் 14.04.2010 அன்று (தமிழுக்கு சித்திரை முதலாம் திகதி) பிறக்கிறது.

இப்புண்ணிய காலத்தில் சிரசில் விளா இலையும் காலில் கடப்ப இலையும் வைத்து மருத்து நீர் கொண்டு நீராடி பொன்னிற பட்டு ஆடை அல்லது வெள்ளை, சிகப்புக் கரை அமைந்த பட்டாடை அணிந்து பவளம், முத்து, வைரம், புஸ்பராகம் இழைத்த ஆபரணம் அணிந்து சுகந்த சந்தணம் பூசி, நறுமலர்கள் சூடி மகிழ வேண்டும்.

அத்துடன் குல தெய்வங்களை வணங்கி சூரியனுக்குப் பொங்கலிட்டு புது வருடத்தைக் கொண்டாட வேண்டும்.

சித்திரைப் புது வருடத்தன்று எம்மால் ஆன அறங்களைச் செய்ய வேண்டும். தான தர்மங்களைச் செய்தல் மாத்திரமின்றி தெய்வம், குரு, பெற்றோர் ஆகியோரை வணங்கி ஆசி பெற்று ஊரும் உறவும் சூழ நண்பர்களுடன் அறுசுவை உணவுகளை உண்டு மகிழ்தல் பொதுவான கொண்டாட்டமாகும்.

புது வருடத்தன்று 'வேப்பம்பூ பச்சடி' சிறப்பானதாகும். வேப்ப மரம் மருத்துவப் பயன் கொண்டது. சித்திரை பிறந்து விட்டால் வேம்பு பூக்க ஆரம்பித்து விடும்.

யாழ்ப்பாணத்து மக்கள் வேப்பம் பூ கொண்டு செய்யப்படும் வடகத்தை ஆண்டு முழுவதற்கும் பயன்படுத்துவார்கள். வாழ்க்கையில் இரவும் - பகலும், இன்பமும் - துன்பமும் ஒரு நாணயத்தில் இரண்டு பக்கங்களாகும்.

இதை உணர்த்துவதற்காக துவர்ப்பு சுவை கொண்ட வேப்பம் பூவுடன் இனிப்பு சுவை சேர்த்து புது வருடத்தன்று வேப்பம் பூ பச்சடி தயாரிக்கப்படுவது வழக்கமாகும்.

அறுசுவை உணவுடன் மற்றவர்களுக்கு தானமும் தர்மமும் செய்து புது வருடத்தை கொண்டாடுவதன் மூலம் ஆண்டு முழுவதும் நிறைவான வாழ்க்கையைப் பெற முடியும் என்பது நம் பெரியோர்களின் நம்பிக்கையாகும்.

சித்திரைப் புது வருடத்தில் காலையில் ஆலய தரிசனம் செய்த பின் குருமார்கள், ஆசிரியர்கள், பெரியோர்களை சென்று தரிசித்து ஆசி பெற்றுக் கொள்வதுடன் கைவிசேஷம் பெறுவதும் வழக்கமாகும்.

புத்தாண்டு தினத்தில் பெரியவர்களுடைய கரங்களில் இருந்து பெற்றுக் கொள்கின்ற எந்தப் பொருட்களும் வளரும் அல்லது பெருகும் என்ற நம்பிக்கை எம்மிடையே உண்டு.

பெரியவர்கள் என்றால் வயதில் பெரியவர்கள் மட்டுமல்ல, எண்ணத்திலும் பெரியவர்களாக இருக்க வேண்டும்.

அப்படிப்பட்டவர்களிடம் இருந்து நாம் பெறுகின்ற ஒரு ரூபா கூட பல்கிப் பெருகும். வாழ்க்கையிலே செல்வச் செழிப்பைக் கொடுக்கும். பஞ்சாங்கங்களில் கூறப்பட்டிருக்கின்ற கைவிசேஷத்துக்குரிய நேரங்களில் பெரியவர்களிடம் இருந்தோ அல்லது இறைவன் பாதத்தில் வைத்தோ கைவிசேஷத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

அது தவிர புதுவருடம் பிறந்த பின்னர் வேலை, வியாபாரம், புதுக்கணக்குப் பதிதல், ஏர் பூட்டுதல், புது விதைப்பு, புதுநெல் எடுத்தல், வித்தியாரம்பம், பொங்கலிடுதல், உறவினர்கள் வீடுகளுக்குச் செல்லுதல் போன்றவற்றை நல்ல நேரம் பார்த்து தொடங்கும் பழக்கம் தொன்று தொட்டு தமிழர்களிடையே இருந்து வருகிறது.

புது வருடத்தன்று மாலை நேரம் மகிழ்ச்சியான விளையாட்டுக்குரிய நேரமாக வகுக்கப்பட்டிருந்தது. மாலை நேரத்தில் மாட்டு வண்டிச் சவாரிப் போட்டி மிக முக்கிய விளையாட்டாக தமிழர்களிடையே இருந்து வந்துள்ளது.

இது தவிர போர்த் தேங்காய் உடைத்தல், ஊஞ்சல், கிட்டிப்புள், கிளித்தட்டு, எட்டுக்கோடு, கொக்கான் வெட்டுதல், பட்டம் விடுதல், கயிறு இழுத்தல் போன்ற விளையாட்டுகளையும் விளையாடினார்கள்.

இவ்விளையாட்டுகளை விளையாடுவதன் மூலம் தோல்வி ஏற்பட்டாலும் அதை வெற்றியாகக் கருதக்கூடிய மனப்பாங்கை பெரியவர்கள் வளர்த்தார்கள். மனதிலே பொறாமை உணர்வைக் களைந்து நட்பை வலுப்பெறச் செய்வதற்காக தமிழர் விளையாட்டுகள் உருவாக்கப்பட்டன.

எனவே பிறக்கின்ற புதுவருடத்தை வரவேற்று கொண்டாடுவோமாக.

No comments:

Post a Comment