தேனி :தேனி அருகே கொடுவிலார்பட்டி ஊராட்சி தலைவர் சின்னவரதன் சுடுகாட்டில் வெட்டியான் வேலை செய்து வருகிறார்.
தேனி அருகே கொடுவிலார்பட்டி ஊராட்சி தலைவராக இருப்பவர் சின்னவரதன். சுடுகாட்டில் வெட்டியான் வேலை செய்த இவர், தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். இவர் தலைவரானால் வெட்டியான் வேலைக்கு ஆள் இல்லாமல் போய் விடுமே என ஊர் மக்கள் கருதினர். எனவே சின்னவரதன், "நான் வெற்றி பெற்று தலைவராக வந்தாலும் வெட்டியான் வேலையை தொடர்ந்து செய்வேன்' என தேர்தல் வாக்குறுதி கொடுத்தார்.தேர்தலில் வெற்றி பெற்று தலைவர் பதவியை கைப்பற்றிய சின்னவரதன் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றும் வகையில் தற்போது வரை வெட்டியான் வேலை பார்த்து வருகிறார்.
இது குறித்து சின்னவரதன் கூறுகையில், "இந்த ஊரில் யார் இறந்தாலும் முதலில் எனக்கு தகவல் சொல்வார்கள். நான் முதல் மாலை போட்டு விட்டு, அடுத்து ஆக வேண்டிய காரியங்களை பார்ப்பேன். தலைவரான பின்னரும் சுடுகாட்டில் நானே குழி வெட்டினேன். பெரியோர்கள் சிலர் என்னிடம் வந்து நீங்கள் இறங்கி குழி வெட்ட வேண்டாம். உங்கள் மேற்பார்வையில் ஆள் வைத்து குழி வெட்டுங்கள் எனக்கூறினர். எனவே அப்போது முதல் குழிவெட்டவும், தேர் இழுக்கவும் நான்கு பேரை வேலைக்கு வைத்து இந்த பணிகளை செய்து வருகிறேன்.இங்குள்ள தொண்டு நிறுவனத்தில் இறந்த இரண்டு அனாதை பிணங்களை நானே புதைத்தேன்.
இதே கர்ப்பிணி ஒருவர் குழந்தை பிறந்ததும் இறந்தார். அவர் உடலை நானே புதைத்தேன். இதனால் என் மீது மக்களுக்கு மரியாதை கூடி விட்டது.தற்போது வகிக்கும் பதவிக்காலம் முடியவும், நானே இறங்கி மீண்டும் குழி வெட்டுவேன். அதுவே என் தொழில். கடைசி வரை இத்தொழிலை கை விடப்போவதில்லை. நான் ஆரம்பம் முதலே துண்டு, செருப்பு அணிவதில்லை. தலைவரான பின்னரும் துண்டு, செருப்பு இல்லாமல் மக்களுக்கு பணியாற்றுகிறேன்.இதற்கு முன் தலைவராக இருந்தவர்கள் சுடுகாட்டு பிரச்னை பற்றி கண்டுகொள்ளவில்லை. நான் தலைவரானதும் ஊருக்குள் ஏராளமான பணிகளை செய்துள்ளேன். சுடுகாட்டில் சுற்றுச்சுவர் வசதி, தண்ணீர் வசதி, பிணத்துடன் செல்பவர்கள் அமரும் வசதி உட்பட அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளேன்' என்றார்