சென்னை : அண்ணாநகரைச் சேர்ந்த பள்ளி மாணவன் கடத்தப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் இருவரும் பிடிபட்டது எப்படி என்ற பின்னணி தகவல்கள் தெரியவந்துள்ளன.
சென்னை, அண்ணாநகர், "இசட் பிளாக்' 7வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ்; கிரானைட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு இரண்டு குழந்தைகள். மகன் கீர்த்திவாசன் (13); முகப்பேர் பகுதியில் உள்ள டி.ஏ.வி., பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த திங்கள் கிழமையன்று பள்ளிக்கு சென்ற கீர்த்திவாசன், மாலை 3 மணிக்கு காரில் வீடு திரும்பினான். காரை, டிரைவர் கோவிந்தராஜ் என்பவர் ஓட்டினார். கார் பள்ளி அருகில் இருந்து கிளம்பிய போது, கண்ணிமைக்கும் நேரத்தில் அதில் ஏறிய இரு வாலிபர்கள், கத்தியைக் காட்டி டிரைவர் கோவிந்தராஜை கீழே தள்ளிவிட்டு கீர்த்திவாசனை காரில் கடத்திச் சென்றனர். டிரைவர் கோவிந்தராஜ் உடனடியாக தனது முதலாளி ரமேஷிடம் தகவல் தெரிவித்தார். ரமேஷ், இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்தார். இதற்கிடையில் கடத்தியவர்கள், ரமேஷை தொடர்பு கொண்டு, "போலீசை அணுகினால் மகனை உயிருடன் பார்க்க முடியாது' என்று மிரட்டினர். இந்த சம்பவத்தால் சென்னை போலீசில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கோவையில் அக்கா, தம்பி இருவரும் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்கு முன்பே, இந்த சம்பவம் நடந்துள்ளதால் சென்னை போலீசார் உடனடியாக நடவடிக்கையில் இறங்கினர். சம்பவம் குறித்த தகவல் வந்த போது, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கூடுதல் கமிஷனர்கள், இணை கமிஷனர்கள் உள்ளிட்ட போலீசார் ஆலோசனை கூட்டத்தில் இருந்தனர். தகவல் கேள்விப்பட்டதும் கூட்டத்தை முடித்துக் கொண்டு, கூடுதல் கமிஷனர் ஷகீல் அக்தர், இணை கமிஷனர் தாமரைக்கண்ணன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர். கார் டிரைவர் கோவிந்தராஜ், கீர்த்திவாசனின் பெற்றோர் உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. உடனடியாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போலீசார் உஷார் படுத்தப்பட்டு வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதற்கிடையில், மாணவன் கடத்தப்பட்ட, "செவர்லெட் டவேரா' கார், பாடியில் உள்ள குறுங்காலீஸ்வரர் கோவில் அருகில் நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று பார்த்த போது, கீர்த்திவாசனின் புத்தகப்பை, கடத்த பயன்படுத்திய கத்தி ஆகியவை கைப்பற்றப்பட்டன. பள்ளியில் இருந்து மாணவனை கடத்திய இருவரும், மற்றொரு காரில் கீர்த்திவாசனை மாற்றி விட்டு, இந்த காரை அப்படியே விட்டுச் சென்றது தெரியவந்தது. இதற்கிடையில், அன்று இரவே கீர்த்திவாசனின் தந்தையை தொடர்பு கொண்ட கடத்தல்காரர்கள், மூன்று கோடி ரூபாய் தரவேண்டும் என நிபந்தனை விதித்தனர். மொபைல் போன், அண்ணாநகரில் இருந்து பயன்படுத்தியது தெரிந்தாலும், அந்த போன் சிக்கவில்லை. தொடர்ந்து பல முறை கடத்தல்காரர்கள் தங்கள் மொபைலில் இருந்து ரமேஷை தொடர்பு கொண்டனர். ஆனால், மொபைல் போன் குறித்த விவரங்கள் போலீசிற்கு சிக்கவில்லை; இந்த விஷயம் சிறிய பின்னடைவை ஏற்படுத்தியது.
சம்பவம் தொடர்பாக 40 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, அண்ணாநகர் முழுவதும் "சீல்' செய்யப்பட்டது. தொடர்ந்து போலீசார், ரமேஷ் மூலம் கடத்தல்காரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு 1.5 கோடி ரூபாயாக தொகையை குறைத்தனர். இரவு முழுவதும் தேடியும் கிடைக்காத நிலையில், நேற்று முன்தினம் காலை மீண்டும் கடத்தல்காரர்கள் இருவரும் ரமேஷை தொடர்பு கொண்டனர். அப்போது பணம் எடுத்து வர வேண்டிய இடம் முடிவெடுக்கப்பட்டது. தொடர்ந்து அந்த இடத்திற்கு சென்று கடத்தல்காரர்களிடம் பணத்தை கொடுத்த ரமேஷ், காரில் இருந்த கீர்த்திவாசனை மீட்டு வந்தார். இருவரும் ஹெல்மெட் அணிந்திருந்ததால் அவர்களை அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டது. இருந்தாலும் அவர்கள் பணத்துடன் வேறு எங்கும் சென்றிருக்க வாய்ப்பில்லை என்பதால் திருமங்கலம், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகள் அனைத்தும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து, நேற்று மாலை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், "மாணவனை மீட்டுவிட்டோம். கடத்தல்காரர்கள் குறித்த விவரங்கள் கிடைக்கவில்லை. பிடித்து விடுவோம்' என்றார். தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் நேற்று முன்தினம் நள்ளிரவு கடத்தல்காரர்கள், போலீசிடம் சிக்கினர்.
துப்பு துலங்கியது எப்படி?: நேற்று முன்தினம் பிற்பகல் 1:30 மணியளவில் கீர்த்திவாசனின் தந்தை ரமேஷை தொடர்பு கொண்ட கடத்தல்காரர்கள் இடத்தை முடிவு செய்ததும், ரமேஷ் வீட்டிற்கு அடுத்த இரண்டு தெருக்கள் தாண்டி ஒரு இடத்தை ரமேஷ், கடத்தல்காரர்களிடம் கூறியுள்ளார். போலீசார், ஆலோசனைப்படி பணத்தை எடுத்துக் கொண்டு அங்கு சென்ற ரமேஷ், கடத்தல்காரர்களிடம் பணத்தை கொடுத்துள்ளார். டூவீலரில் வந்த கடத்தல்காரர்கள் இருவரும் ஹெல்மெட் போட்டிருந்ததால் ரமேஷால் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. டூவீலர், "நம்பர் பிளேட்'டும், "கர்சீப்'பால் மூடப்பட்டிருந்தது. இதை போலீசார் குறிப்பிட்ட தூரத்தில் இருந்து கண்காணித்துக் கொண்டிருந்தனர். ஆனால், கீர்த்திவாசனை மீட்க வேண்டும் என்பதால் போலீசார் தங்கள் அதிரடி நடவடிக்கையை நிறுத்தி வைத்திருந்தனர்.
கடத்தல்காரர்கள் பணத்தை வாங்கிக் கொண்டு தப்பிச் செல்லும் போது அருகில் நின்றிருந்த மாருதி ஸ்விப்ட் டிசையர் ரக காரின் சாவியை ரமேஷிடம் தந்து, " டிக்கியில் பாருங்கள்' என்று கூறிவிட்டு சென்றுள்ளனர். உடனடியாக டிக்கியை திறந்து பார்த்த போது. அதில், கீர்த்திவாசன் இருந்தது கண்டு, உடனடியாக அவனை மீட்டனர். அதற்குள் இருவரும் டூவீலரில் தப்பினர். டூவீலர் வேகமாக சென்ற போது நம்பர் பிளேட்டில் கட்டப்பட்டிருந்த, "கர்சீப்' விலகியது. அப்போது தெரிந்த வாகனத்தின் எண், போலீசிற்கு துருப்புச் சீட்டாக மாறியது. இதைக் கொண்டு போலீசார் தொடர்ந்து விசாரித்தனர். அடுத்தடுத்து பல மர்மங்கள் விலகின. முதலில் போலீசார், கைதேர்ந்த கும்பலை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று நினைத்தனர். தொடர்ந்து வாகனத்திற்குரியவர் யார் என்பதை விசாரித்த போது தான் போலீசாருக்கு உண்மை பிடிபட்டது. வாகனத்தின் உரிமையாளர் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த விஜய் என்பது தெரியவந்தது.
விஜய் குறித்த விவரங்களை ஆராய்ந்த போது, அவர் ரமேஷின் தூரத்து உறவினர் என்ற விவரமும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நேற்று நள்ளிரவில் விஜய் வீட்டிற்கு சென்று, அவரை பிடித்து விசாரித்ததில், தனது சித்தப்பா மகன் பிரபு குறித்த தகவல்களை கூறியுள்ளார். உடனடியாக இருவரையும் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையின் போது முதலில் மறுத்த இருவரும், போலீசாரின் பிடி இறுகியதும், கீர்த்திவாசனை கடத்தியது நாங்கள் தான் என ஒப்புக் கொண்டனர். தொடர்ந்து, அவர்களிடம் இருந்த பணம் 98 லட்சத்து 73 ஆயிரம் ரூபாயும் மீட்கப்பட்டது. இருவரையும் கைது செய்த போலீசார் நேற்று மாலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பணத்தாசையே கடத்தலுக்கு தூண்டுதல்: கீர்த்திவாசனை கடத்தியதாக பிடிபட்டுள்ள இருவரும் ரமேஷின் தூரத்து உறவினர்கள். திருச்சி மாவட்டம், துறையூரைச் சேர்ந்த ரமேஷ், தனது மேலாளராக கங்காதரன் என்பவரை நியமித்துள்ளார். அவரது நெருங்கிய உறவினர்கள் தான் பிடிபட்ட விஜய் மற்றும் பிரபு என்பது விசாரணையில் தெரியவந்தது. ரமேஷின் மேலாளர் கங்காதரன், தனது முதலாளியின் பிசினஸ், ஆங்காங்கே இடம் வாங்கியது, கோடி கோடியாக நடக்கும் வர்த்தகம் குறித்த விவரங்களை தனது உறவினர்களான விஜய் மற்றும் பிரபுவிடம் தெரிவித்துள்ளார். இருவரும் பணி வாய்ப்பில்லாமல் இருந்த நிலையில், கங்காதரன் அளித்த விவரங்கள் அவர்களை உசுப்பேற்றி விட்டுள்ளது. ரமேஷின் மகனை கடத்தி, அதன் மூலம் கோடிக்கணக்கில் பணம் கறக்க திட்டமிட்டனர். கிடைக்கும் பணத்தை கொண்டு புதிய தொழிலை துவக்கி செட்டிலாகி விடலாம் என நினைத்து, கீர்த்திவாசனை கடத்தியதும், தெரியவந்தது. ஆனால், பணத்தை பெற்ற இருவரும் அதில் இருந்து எதையும் எடுத்து செலவு செய்யவில்லை என கூறப்படுகிறது. கொடுக்கப்பட்ட பணம் முழுவதையும் போலீசார் மீட்டுள்ளனர். கடத்திய இருவரும் நன்கு படித்து, லண்டன் வங்கி மற்றும் சிங்கப்பூரில் உள்ள ஐ.டி., கம்பெனியில் பணியாற்றியிருந்தாலும், உருப்படியாக எந்த வேலையிலும் வெகுநாட்கள் நீடித்ததில்லை என்று கூறப்படுகிறது. அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு, தற்போது கம்பிக்கு பின்னால் நின்று கொண்டிருக்கின்றனர்.
இன்ஜினியரிங், எம்.பி.ஏ., பட்டதாரிகள்: சென்னை அண்ணாநகரில் கிரானைட் அதிபர் மகன் கீர்த்திவாசனை கடத்திய இருவர் இன்ஜினியரிங் பட்டதாரிகள் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஒருவர் அண்ணாநகர் பிரீமியர் காலனியைச் சேர்ந்த, ஓய்வு பெற்ற சுங்க அதிகாரி ராமையாவின் மகன் விஜய்(26) என்பதும், மற்றொருவர் திருமங்கலம், பஞ்சரத்தினம் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் கேசவன் என்பவர் மகன் பிரபு (29) என்பதும் தெரியவந்தது. திருச்சி மாவட்டம், துறையூரைச் சேர்ந்த ராமையாவும், கேசவனும் சகோதரர்கள். இதில் விஜய், சென்னை அருகில் உள்ள தனியார் பொறியியல் பல்கலைக்கழகத்தில் பி.டெக்., படித்துவிட்டு லண்டன் சென்று, அங்குள்ள பெபில் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ., படித்துள்ளார். தொடர்ந்து அங்கேயே ஒரு வங்கியில் பணியாற்றிய விஜய், கடந்தாண்டு சென்னை வந்துள்ளார். விஜயின் சகோதரரான பிரபு, பெரம்பலூரில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் டி.எம்.இ., படித்துவிட்டு, அண்ணா பல்கலைக்கழகத்தில் பகுதி நேர பி.இ., படித்து முடித்து, சிங்கப்பூரில் பணியாற்றியுள்ளார். கீர்த்திவாசனை கடத்துவதற்காகவே இவர் சென்னை வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடத்தல்காரர்கள் பிடிபட்டது குறித்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறியதாவது: கீர்த்திவாசன் மீட்கப்படும் வரை நாங்கள் கடத்தல்காரர்களுடன் பேசிக்கொண்டே தான் இருந்தோம். அனைத்து தரப்பிலும் இதனால், "டென்ஷன்' இருந்து கொண்டே இருந்தது. அவர்கள் வாகனத்தை மாற்றியது எங்களது முயற்சியில் ஏமாற்றத்தை அளித்தது. அவர்களுடன் தொடர்ந்து பேசி, பணத்தை கொடுக்கும் இடத்தை முடிவு செய்த போது கீர்த்திவாசனின் தந்தையிடம் 15லிருந்து 20 லட்சம் வரை மட்டுமே பணத்தை கொடுக்க கூறினோம். ஆனால், அவர் ஒரு கோடி ரூபாய் கொடுத்துள்ளார். இதற்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. கீர்த்திவாசனை பத்திரமாக மீட்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததால் தான் அவர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது. எப்படியும் கடத்தல்காரர்களை பிடித்துவிடலாம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது. அவர்கள் மூன்று கோடி ரூபாய் கேட்டு, கொடுக்கப்பட்ட ஒரு கோடி ரூபாயும் தற்போது மீட்கப்பட்டுள்ளது. கடத்தலில் ஈடுபட்ட இருவரும், ரமேஷிடம் மேலாளராக பணியாற்றியவரின் உறவினர்கள். ரமேஷûக்கும் தூரத்து உறவினர்கள். இவர்கள் அனைவரும், திருச்சி துறையூரைச் சேர்ந்தவர்கள். இவ்வாறு ராஜேந்திரன் கூறினார்.
தொடர்ந்து நிருபர்கள் கேள்விகளுக்கு பதிலளித்து கூறியதாவது:
* கீர்த்திவாசனை கடத்தியவர்களை ஏன் சுட்டுப் பிடிக்கவில்லை?
முதலில் மாணவனை மீட்பதே எங்கள் குறிக்கோளாக இருந்தது. கடத்தப்பட்ட அன்று இரவு, கீர்த்திவாசன் அவர்களுடன் இருக்கிறானா என்பதை நாங்கள் தொடர்ந்து உறுதிபடுத்திக் கொண்டே இருந்தோம். இந்த சம்பவம், கோவை சம்பவத்தை அடுத்து நடந்துள்ளதால் மிகவும் கவனமாக இருந்தோம். பணத்தை கொடுக்கும் இடத்தை முடிவு செய்த நிலையில், தொடர்பு கொண்டபோது மாணவன் அழுதான். எனவே நிலைமை மோசமாகிவிடக் கூடாது என்பதால் அவர்கள், பணத்தை வாங்கிக் கொண்டு தப்பிய போது நாங்கள் எந்த அதிரடி நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒரு வேளை பணத்தையும் பெற்றுக் கொண்டு, கீர்த்திவாசனையும் கொண்டு சென்றுவிட்டால் என்ன செய்வது என்ற எண்ணமும் எங்களுக்கு இருந்தது. இடையில் பணத்திற்கு நாங்களும் ஏற்பாடு செய்து கொண்டிருந்தோம். அவர்கள், கீர்த்திவாசனை விட்டுச்சென்ற இடம் மக்கள் நெருக்கடி அதிகமாக இருந்ததால் சுட்டுப்பிடிப்பது என்பது கடினம். அவர்களை பின்தொடர்ந்தோம். டூவீலரின் பதிவு எண் கிடைத்ததும் அவர்கள் இருக்கும் இடம் தெரிந்து பிடித்தோம்.
* இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா?
இவர்களை தவிர வேறு யாருக்கும் தொடர்பிருப்பதாக தெரியவில்லை. அவர்களிடம் தொடர்ந்து விசாரித்து வருகிறோம். பிடிபட்ட இருவருக்கும் பணம் மட்டும் தான் நோக்கமாக இருந்துள்ளது.
* இனி இது போன்ற கடத்தல் சம்பவங்கள் நிகழாமல் தடுப்பது குறித்து?
தீபாவளி முடிந்த பின், பள்ளி முதல்வர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினருடன் ஆலோசனை நடத்த உள்ளோம். நான் கடந்தாண்டு நடந்த கூட்டத்தில், பள்ளிகளின் முன்பு கேமரா வைக்க வேண்டும் என்று கூறியிருந்தேன். தற்போது தான் பள்ளிக்கல்வித்துறை, பள்ளிகளின் முன்பு கேமரா அமைக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.
போலீசுக்கு நன்றி: தந்தை ரமேஷ் பேட்டி: கமிஷனர் பேட்டியின் போது உடனிருந்த கீர்த்திவாசனின் தந்தை ரமேஷ் பேசும் போது, "எனது மகன் கடத்தப்பட்ட 15 நிமிடத்தில் உயரதிகாரிகள் உடனேயே வந்து விசாரணை நடத்தினர். மீட்பதற்காக குறைந்த அளவு பணத்தை கொடுக்குமாறு போலீசார் கூறினர். ஆனால், கீர்த்திவாசனை மீட்க வேண்டும் என்பதற்காக தான், நான் அதிக பணத்தை கொடுத்தேன். அதிகாரிகள் தனது மகனை மீட்பது போன்று செயல்பட்டு மீட்டுக் கொடுத்தனர். ஒட்டு மொத்த போலீசாரும், மகனை மீட்பதில் ஈடுபட்டிருந்தனர். போலீஸ் கமிஷனர் உள்ளிட்டவர்களுக்கு நன்றி' என்றார்.
புழல் சிறையில் கடத்தல் பட்டதாரிகள்: அண்ணாநகரில் கிரானைட் அதிபர் மகன் கீர்த்திவாசன் கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய விஜய் மற்றும் பிரபு ஆகிய இரு பட்டதாரிகளும், நேற்று மாலை, எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் இருவரையும் கோர்ட் அனுமதியுடன் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment