Showing posts with label மோசடி. Show all posts
Showing posts with label மோசடி. Show all posts

Monday, February 15, 2010

வேலை தருவதாகக் கூறி இளம்பெண்ணிடம் மோசடி : ஈரோட்டில் மாஜி அமைச்சர் வீடு முற்றுகை

ஈரோடு : அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர், தனது பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடத்துக்கு பணியமர்த்த, இரண்டு லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டு ஏமாற்றி விட்டதாகக் கூறி பாதிக்கப்பட்ட பெண், அவரது வீட்டை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டையில் அரசு உதவி பெறும் பெரியசாமி நடுநிலைப்பள்ளி உள்ளது. அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஈஸ்வரமூர்த்தி, இப்பள்ளி தாளாளராக உள்ளார்.
பள்ளியின் நிர்வாக மேலாளர் கலைச்செல்வி. இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாடம் நடத்த ஆசிரியர் பணியிடம் ஒன்று காலியாக இருந்தது.  அரசு உதவி பெறும் பள்ளி என்பதால் அவர்களே ஆசிரியர் நியமனம் செய்து கொள்ளும் அதிகாரம் உள்ளது. பவானி அருகே காலிங்கராயன் பாளையத்தைச் சேர்ந்த யுவராஜ் மனைவி கற்பகம், ஆசிரியர் பணி பெற முயற்சித்தார்.
ஆசிரியர் பணியை தனக்கு வழங்கக் கோரி கற்பகம், கலைச்செல்வியிடம் விண்ணப்பித்தார். கலைச்செல்வி, கற்பகத்தை ஈஸ்வரமூர்த்தியிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். ஈஸ்வரமூர்த்தி, ""நான்கு லட்சம் ரூபாய் கொடுத்தால் வேலை நிச்சயம். முதலில் இரண்டு லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும்; வேலை கிடைத்த பிறகு மீதித் தொகையை கொடுத்தால் போதும்,'' என்று பேரம் பேசியுள்ளார்.
அதற்கு சம்மதித்த கற்பகம், வட்டிக்கு கடன் வாங்கி பணத்தைக் கொடுத்தார். ஆனால், நீண்ட நாட்களாக வேலை தராமல் இழுத்தடித்தனர். ஒரு கட்டத்தில் ஈஸ்வரமூர்த்திக்கும், கலைச்செல்விக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
அதனால், "பணம் கிடைத்தால் போதும்' என்ற நிலைக்கு வந்த கற்பகம், பணத்தை தரும்படி கலைச்செல்வியிடம் கேட்டார். அதற்கு அவர், ""ஈஸ்வரமூர்த்தியிடம் தானே பணத்தைக் கொடுத்தீங்க, அவரிடமே போய் வாங்கிக் கொள்ளுங்கள்,'' என்றார். பணத்தைக் கேட்டு ஆறு மாதமாக ஈஸ்வரமூர்த்தி வீட்டுக்கு நடையாய் நடந்து கற்பகம் ஓய்ந்து போனார்.
வட்டிக்கு பணம் கொடுத்தவர்கள் ஒருபுறம் நெருக்கியதால், கணவன், மனைவியான யுவராஜ் - கற்பகம் இடையே தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் கற்பகம், பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். அக்கம் பக்கத்தினர் கற்பகத்தை காப்பாற்றினர். "இப்படியே விட்டால் பணம் வராது' என்று அஞ்சிய கற்பகம், தனது கணவர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் பணத்தை தரக்கோரி, ஈரோடு தீயணைப்புத் துறை அலுவலகம் பின்புறம் உள்ள ஈஸ்வரமூர்த்தி வீட்டை நேற்று காலை முற்றுகையிட்டார்.
இது குறித்து கற்பகம் கூறுகையில், ""ஆசிரியர் வேலை தருவதாகக் கூறி என்னிடம் இரண்டு லட்சம் ரூபாய் வாங்கினார். வேலை கிடைத்த பிறகு இரண்டு லட்சம் கொடுத்தால் போதும் என்றார். இதேபோல், 10க்கும் மேற்பட்டோரிடம் பணம் வசூலித்திருப்பதாக தகவல் கிடைத்தது. அதையடுத்து, "எனக்கு வேலை வேண்டாம்; பணம் கொடுங்கள்' என்றேன். ஆனால், தராமல் இழுத்தடிக்கிறார். மூன்று மாதத்துக்கு முன், தலா ஒரு லட்சம் வீதம் இரண்டு "செக்' கொடுத்தார். "செக்'கை வங்கியில் செலுத்திய போது, பணமில்லை என்று திரும்பியது.
நீதிமன்றத்தில் வழக்கு தொடருவதாகக் கூறியபோது, "வேண்டாம், பணத்தை தருகிறேன்' என்றார். ஆனால், ஆறு மாதமாகியும் பணம் வரவில்லை. எங்கள் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்னை வருகிறது. பணம் தரவில்லை என்றால், தற்கொலை செய்வதைத் தவிர வேறு வழியில்லை,'' என்றார்.
அ.தி.மு.க., முன்னாள் நகர செயலர் பெரியார் நகர் மனோகரன், காங்கிரசை சேர்ந்த பிரகாஷ் ஜெயின் மற்றும் பலர் வந்திருந்தனர். சூரம்பட்டி எஸ்.ஐ., முருகேசன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு சமாதானம் செய்து வைத்தார். சில நாட்களில் பணம் வாங்கித் தருவதாக எஸ்.ஐ., முருகேசன் கொடுத்த வாக்குறுதியின் பேரில், அவர்கள் கலைந்து சென்றனர்.


"மாஜி'க்கு திடீர் பிரஷர் : இது பற்றி ஈஸ்வரமூர்த்தி கருத்தை அறிய பத்திரிகையாளர்கள் அவரது வீட்டுக்கு சென்றபோது, பத்திரிகையாளர்களை சந்திப்பதை அவர் தவிர்த்தார். அவரது அக்கா தமிழ்ச்செல்வி மட்டும் வெளியே வந்தார். "தம்பிக்கு "பிரஷர்' அதிகமாகியுள்ளது; இப்போது, பேட்டி கொடுக்கும் நிலையில் அவர் இல்லை. கடனாகத் தான் பணம் வாங்கியுள்ளார். மற்றபடி வேலை தருவதாகக் கூறி அவர் யாரையும் ஏமாற்றவில்லை' என்றார்.

Monday, February 8, 2010

தலையங்கம்: அரசாங்க மோசடி!

தொன்றுதொட்டு ஓர் அரசின் அடிப்படைக் கடமை என்று கருதப்படுபவை,​​ தேசத்தின் பாதுகாப்பு,​​ சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது,​​ சாலைகள் அமைத்தல்,​​ சுகாதாரம் மற்றும் கல்வி போன்றவைதான்.​ கடந்த 20 ஆண்டுகளாக இந்திய அரசு பொருளாதார தாராளமயமாக்கல் என்கிற கொள்கையை ஏற்றுக்கொண்டது முதல் இந்த அடிப்படைக் கடமையைக்கூடத் தனியாருக்குத் தாரை வார்த்துவிடத் தொடங்கி இருக்கிறது என்பதுதான் வேதனைக்குரியது.சாலைகளை அமைப்பது என்பது நிச்சயமாக வளர்ச்சியின் அறிகுறி என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை.​ தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சிக்காலத்தில் நெடுஞ்சாலைத் துறை முன்வைத்த தங்க நாற்கரச் சாலைத் திட்டம் என்பது சுதந்திர இந்திய சரித்திரத்தில் குறிப்பிடப்பட வேண்டிய ஒரு நிகழ்வு.நெடுஞ்சாலைகள் ஒருபுறம் வளர்ச்சியின் அடையாளங்களாகத் தென்பட்டாலும் இன்னொருபுறத்தில் பல்லாயிரம் ஏக்கர் விவசாய சாகுபடி நிலங்களைக் கபளீகரம் செய்பவை.​ கார் மற்றும் கனரக லாரி உற்பத்தி நிறுவனங்களுக்கும்,​​ ஏற்றுமதியாளர்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் வரப்பிரசாதமாக இந்த நெடுஞ்சாலைகள் ஒருபுறம் அமைவதும்,​​ மறுபுறம் லட்சக்கணக்கான சிறு விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து நடுத்தெருவில் நிற்பதும் ஒரே நாணயத்தின் இருவேறு முகங்கள்.சாலைகள் உலகத் தரத்தில் இருக்கின்றன,​​ நாங்கள் விரைவாகச் செல்ல முடிகிறது என்று காரிலும் பஸ்ஸிலும் பயணிப்பவர்கள் மகிழ்ச்சி அடையும் அதேவேளையில்,​​ இந்த ​ மலைப்பைப் பயன்படுத்தி மிகப்பெரிய வசூல் மோசடி நடைபெறுவது அவர்கள் கண்ணுக்குத் தெரிவதில்லை.​ "கண்கட்டு வித்தை' என்பார்களே அதை நிஜமாகவே நடத்திக் காட்டுவது தனிநபர்கூட அல்ல,​​ இந்திய அரசு.​ சுரண்டப்படுவது வேறு யாரோ அல்ல,​​ அந்த இந்திய அரசுக்கு ஆதாரமாக இருக்கும் இந்தியக் குடிமகன்.விற்பனை வரி,​​ வருமான வரி,​​ சுங்க வரி,​​ சேவை வரி,​​ கலால் வரி என்று எதிலெல்லாம் வரி வசூலிக்க முடியுமோ அதிலெல்லாம் அரசாங்கம் வரி விதித்துத் தனது வருவாயைப் பெருக்கிக் கொள்வது எதற்காக?​ மக்களின் வசதிக்காக சாலைகள் அமைக்கவும்,​​ கல்விச் சாலைகள் மற்றும் மருத்துவமனைகள் அமைக்கவும்தானே வரிப்பணமே வசூலிக்கப்படுகிறது.​ பிறகு,​​ நாங்கள் உலகத் தரத்தில் சாலைகள் அமைக்கிறோம் என்கிற பெயரில் சாலையில் பயணிக்க ஆங்காங்கே சுங்கம் வசூலிப்பது என்ன நியாயம்?​ புதிதாக மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சகம் ஒரு தீர்மானம் எடுக்க இருக்கிறது.​ அதன்படி ஒப்பிட்டு 60 கி.மீ.​ தூரத்துக்கு ஒரு சுங்கச்சாவடி அமைத்துக் கட்டணம் வசூலிக்க இருக்கிறது.​ 1997-ல் இதேபோல தேசிய நெடுஞ்சாலை ​(கட்டண விதிப்பு மற்றும் வசூல்)​ விதி கொண்டு வரப்பட்டபோது,​​ பொதுநல அமைப்புகளின் எதிர்ப்புக்கு இணங்கி கிலோமீட்டருக்கு மூன்று கோடி ரூபாய்க்கு மேல் செலவானால் மட்டுமே சுங்கம் வசூலிக்கப்படும் என்கிற நிபந்தனையை அரசு ஏற்றது.​ இப்போது அந்த நிபந்தனையை ஒரு கோடி ரூபாயாக அரசு குறைக்க இருக்கிறது.​ அதாவது இனிமேல் எந்த தேசிய நெடுஞ்சாலையில் நாம் பயணித்தாலும் 60 கி.மீ.​ தூரத்துக்கு ஒருமுறை சுங்கம் வசூலிக்கப்படும்.உலகத் தரமான சாலையை உபயோகிக்கும்போது அதற்கான கட்டணத்தை வசூலிப்பதில் என்ன தவறு என்று கேட்கலாம்.​ சேவைக்குக் கட்டணம் வசூலித்தால் என்ன தவறு என்று கேட்பவர்கள் இனிமேல் அமைச்சர்கள்,​​ அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் மக்களுக்குச் செய்யும் சேவைக்குப் பிரதிபலனாக அன்பளிப்பும் லஞ்சமும் பெறுவதுகூடத் தவறில்லை என்று கூறுவார்களோ என்னவோ?இரண்டு பாதைகள் இருந்து,​​ உலகத் தரமான கட்டணச் சாலை இருந்தால்கூடத் தவறில்லை.​ இருப்பது ஒரே சாலை,​​ அதுவும் கட்டணச் சாலை மட்டுமே என்றால் அது என்ன நியாயம்?​ சாலை போட என்ன செலவானது,​​ அன்றாடம் எவ்வளவு வசூலானது,​​ இந்தச் சுங்கம் எப்போது நிறுத்தப்படும் என்கிற வரைமுறை உண்டா என்றால் அதுவும் கிடையாது.​ சென்னையில் வசிப்பவர்கள் சுங்கம் செலுத்தாமல் மகாபலிபுரத்துக்கு வாடகைக் காரில் பயணிக்க முடியாது என்பது தெரியுமா?இந்த நெடுஞ்சாலைகள் அமைக்க நமது அரசு வெளிநாடுகளிலிருந்தோ தனியாரிடமிருந்தோ கடன் வாங்குகிறதா என்றால் இல்லை.​ நமது வரிப்பணத்தில்தான் நெடுஞ்சாலைகள் போடப்படுகின்றன.​ இந்திய அரசின் அன்னியச் செலாவணி இருப்பு 235 பில்லியன் டாலர்கள்.​ நமது தேசிய சேமிப்பு விகிதம் 35 சதவிகிதம்.​ இந்த அரசாங்க மோசடியை எதிர்த்துக் குரல் எழுப்ப ஏன் யாரும் முன்வரவில்லை?