Showing posts with label Education. Show all posts
Showing posts with label Education. Show all posts

Tuesday, March 23, 2010

வினாத்தாள் குளறுபடி : 10ம் வகுப்பு மாணவர்கள் தவிப்பு

காஞ்சிபுரம் :  தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நேற்று முடிந்ததையடுத்து, 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று துவங்கின. காஞ்சிபுரம் மற்றும் நெல்லையில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் 10ம் வகுப்பு வினாத்தாள் மாற்றிக் கொடுக்கப்பட்டதால் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். காஞ்சிபுரம் எஸ்.எஸ்.கே.வி., மெட்ரிக் பள்ளியில் மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்வு எழுதினர். இந்தப் பள்ளியின் ஒரு அறையில் சிந்தாரிவாக்கம் பகுதியை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் 10 பேரும் , எஸ்.எஸ்.கே.வி., மெட்ரிக் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் 10 பேரும் தேர்வு எழுதினர். தமிழ் முதல் தாள் தேர்வு நடந்தது. தேர்வு மேற்பார்வையாளர் மாணவர்களுக்கு வினாத் தாளை மாற்றி கொடுத்துள்ளார். தமிழ் தேர்வு என்பதால் மாணவர்களும் வினாத்தாள் மாறியது தெரியாமலேயே தேர்வை எழுதி முடித்துள்ளனர். பின்பு வெளியில் வந்த போது வினாத்தாள் மாறிய விவகாரம் தெரிய வந்தது. இது குறித்து மாவட்ட கல்வி அலுவலகத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

இதே போல் நெல்லை மாவட்ட பள்ளியிலும் 10ம் வகுப்பு வினாத்தாள் மாற்றத்தால் குழப்பம் ஏற்பட்டது. நெல்லை மாவட்டம் சாரா டக்கர் பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வு நடந்தது. பள்ளியில் ஒரு அறையில் இருந்த மாணவிகளில் 10 பேர் மெட்ரிக் மாணவிகள், 10 பேர் ஸ்டேட் போர்டு மாணவிகள். இவர்களுக்கான வினாத்தாள் மாற்றிக் கொடுக்கப்பட்டது. தேர்வு முடிந்து மாணவிகள் வெளியில் வந்து சக மாணவிகளுடன் பேசிய போது தான் குளறுபடி நடந்தது தெரிந்தது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியர்களிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. விடைத்தாள்கள் அனைத்தும் சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளன. தேர்வின் முதல் நாளிலேயே இம்மாதிரியான குழப்பம் ஏற்பட்டதால் மாணவ, மாணவிகள் தவிப்புக்குள்ளாகினர்.

10ம் வகுப்பு தேர்வை, 10 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். மொத்தம் 2,791 மையங்களில் மாணவர்கள் தேர்வெழுதுகின்றனர். 'ரெகுலர்' மாணவர்கள் இல்லாமல், தனித்தேர்வு மூலம் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், 10ம் வகுப்பு தேர்வை எழுதுகின்றனர். எஸ்.எஸ்.எல்.சி., - ஓரியண்டல் தேர்வுகள், ஏப்ரல் 7ம் தேதி வரையிலும், மற்ற இரண்டு போர்டு தேர்வுகள், ஏப்ரல் 9ம் தேதி வரையிலும் நடக்கின்றன.

Thursday, February 25, 2010

ஆங்கிலத்தில் அசத்த ஆசையா...

இன்றைய உலகமயமாக்கப்பட்ட காலகட்டத்தில் படிப்பு, வேலை, வியாபாரம் என அனைத்திற்கும் அடிப்படை ஆங்கிலம் என்ற நிலை உருவாகி விட்டது.
ஆங்கிலம் தெரிந்திருப்பது உலகளாவிய நோக்கித்திலான எண்ணங்களையும், தன்னம்பிக்கையும் தரும். எந்த ஒரு மொழியையும் கற்பதில் என்றுமே தவறில்லை. சமுதாயாத்தில் பெரும்பாலும் யாருடன் தொடர்புகொள்ளவும் ஆங்கில மொழி அத்தியாவசியமாக விட்டது. குறிப்பாக, வேலைக்கான நேர்காணலில் இன்றைய இளைய தலைமுறையினரில் பெரும்பாலும் திறமை இருந்தும், ஆங்கில மொழி தெரியாத ஒரே காரணத்தால் குறுகிப் போகின்றனர்.

எந்தமொழியையும் எளிதில் கற்றுவிட முடியும் என்ற நம்பிக்கையுடன் கீழ்கண்ட ஆலோசனைகளை உங்களது வாழ்வில் பயன்படுத்த துவங்குங்கள்... விரைவில் உங்களுக்குள் ஒரு மாற்றம் தெரியும்.

* ஆங்கிலம் ஒரு அன்னிய மொழி; நம்மால் படிக்க முடியாது... போன்ற எதிர்மறையான எண்ணங்களை முதலில் உங்களது மனதில் இருந்து முழுவதுமாக அகற்றிவிடுங்கள்.

* தினமும் குறைந்தது 30 நிமிடங்களாவது ஆங்கிலம் நாளிதழ், சிறுகதை, கவிதை, கட்டுரை போன்றவற்றை வாசியுங்கள்.

* ஆங்கிலத்தில் எழுத பழகுங்கள்... போதுமான வார்த்தை ஞானம் இல்லை என்றால் எந்தமொழியிலும் திறம்பட உங்களது கருத்துக்களை வெளியிட முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே, முடிந்தவரை ஆங்கில வார்த்தைகளின் அர்த்தத்தை கற்றுக்கொள்ளுங்கள்.

* நீங்கள் கேட்ட, வாசித்ததில் புரியாத வார்த்தகளை குறித்துக்கொண்டு அதற்கான அர்த்தங்களை எழுதி வைத்துக்கொள்ளுங்கள். இதை ஒரு பழக்கமாகவே தொடருங்கள்.

* தவறாகப் பேசு விடுவோம்... மற்றவர்கள் ஏளனத்திற்கு ஆளாகிவிடுவோம்... போன்ற எண்ணங்களை அடியோடு தகர்ந்தெரிந்துவிட்டு ஆங்கிலத்தில் பேசப் பழகுங்கள்.

* ஆங்கில டி.வி செய்தி சேனல்களை பாருங்கள். பிரிட்டிஷ் மொழி உச்சரிப்பை அறிந்துகொள்ள பி.பி.சி சேனலையும், அமெரிக்க மொழி உச்சரிப்பை அறிந்துகொள்ள சி.என்.என் சேனலையும், இந்திய ஆங்கில மொழி உச்சரிப்பை அறிந்துகொள்ள என்.டி.டி.வி போன்ற இந்திய ஆங்கில செய்தி சேனல்களையும் பார்க்கலாம்.

* தனிமையில் உங்களது கருத்துக்களை ஆங்கிலத்தில் பேசி, அதை ரெக்கார்டு செய்துகொள்ளுங்கள். பின், அதை நீங்களே கேட்டு வார்த்தை உச்சரிப்பில் உள்ள தவறுகளை அறிந்து, அடுத்தமுறை அதனை தவிர்க்க பயிற்சி பெறுங்கள்.

* எந்த ஒரு மொழிக்கும் இலக்கணம் அவசியம். பேசும்திறன், காலங்கள், வினைச் சொற்கள் போன்றவை ஒரு மொழியில் முக்கியத்துவம் பெறுகின்றன. அவற்றை முழு ஆர்வத்துடன் கற்றுக்கொள்ள முயலுங்கள்.

* ‘டிக்ஸ்னரி’ (அகராதி)யை உங்களது அபிமான நண்பராக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் குறிப்பெடுக்கும் வார்த்தைக்கான விளக்கத்தை டிக்ஸ்னரி உதவியுடன் அறிந்து கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை உங்களது தகவல் தொடர்பில் தொடர்ந்து பயன்படுத்துங்கள்.

* ஆங்கில மொழியில் புலமை பெற்ற ஒருவரை ஆங்கில நாளிதழை சத்தமாக வாசிக்க சொல்லி, அவர் எவ்வாறு உச்சரிக்கிறார் என்பதை கூர்ந்து கவனியுங்கள்.

* டய்ரி எழுவதை உங்களது பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அதனை நீங்கள் மட்டுமே பயன்படுத்துவதால், தவறாக எழுதிவிடுவோமோ என்ற பயம் உங்களுக்கு பெரும்பாலும் இருக்காது. தினமும் நூறு வார்த்தைகளாவது தயக்கமின்றி எழுதுங்கள்.

இவை அனைத்தையும் உங்களது ஆர்வத்தின் அடிப்படையில் மட்டுமே மிகச் சிறப்பாக செயல்படுத்த முடியும் என்பதை அடிமனதில் பதிந்துகொண்டு, பயிற்சி பெறுங்கள். ஆங்கிலம் விரைவில் உங்களது நாக்கில் தவழும்...


Monday, February 22, 2010

"மெட்டீரியல் சயின்சின்' மருத்துவ சாதனை

வேதியியலில் தற்போது, "மெட்டீரியல் சயின்ஸ்' என்ற துறையின் பயன்கள், பரவலாகி வருகின்றன. எந்தவொரு துறையிலும், அதன் உள்கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தும் பொருட்களை, புதிதாக தயாரிப்பதற்கும், ஏற்கனவே உள்ள பொருட்களில் உள்ள குறைகளை நீக்குவதற்கும், "மெட்டீரியல் சயின்ஸ்' துறை பயன்படுகிறது. மருத்துவத்துறையில், உடலின் உள் உறுப்பு களுக்கு மாற்றாக, அதற்கு இணையான பொருட் களை உருவாக்குவதில், "மெட்டீரியல் சயின்ஸ்' முக்கியப் பங்காற்றுகிறது. பிறவியிலேயே இதய நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளின் பிரச்னை களைத் தீர்க்க, செயற்கை இதய வால்வுகள் அவசியமாகும். தற்போது "மெட்டீரியல் சயின்ஸ்' துறையின் ஆராய்ச்சிகளால், இந்தியாவிலேயே செயற்கை இதய வால்வுகள், குறைந்த செலவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவில் 10 லட்சம் குழந்தைகள், இதய வால்வு  பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளதால், இனி வருங்காலத்தில் செயற்கை வால்வுகளின் உற்பத்தியும் அதிகரிக்கக் கூடும்.

Saturday, February 13, 2010

ஆசிரியர் பற்றாக்குறையால் மாணவர்கள் பாதிப்பு : கல்வித் தரம் குறைவதாக பெற்றோர்கள் புகார்


வேடசந்தூர்: போதிய ஆசிரியர்கள் இல்லாததால் ஒன்றிய தொடக்க பள்ளிகளில் மாணவர்களின் கல்வித்தரம் குறைந்து வருவதாக புகார் எழுந்துள்ளது. அரசு சமச்சீர் கல்வி முறையை புகுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாணவர்,ஆசிரியர் விகிதாச்சாரத்தின் படி ஆசிரியர்கள் இல்லாததால் அரசு பள்ளிகளில் தொடக்க கல்வியின் தரம் தாழ்ந்துள் ளதால் மக்கள் கிராமங்களில் கூட தனியார் பள்ளிகளை நாடும் நிலை எழுந் துள்ளது. வேடசந்தூர் ஒன்றியத்தில் தொடக்க பள்ளிகள் 70, நடுநிலைப் பள்ளிகள் 19,அரசு உதவி பெறும் தொடக்க பள்ளிகள் 13 , நடுநிலைப்பள்ளி இரண்டு உள்ளன.அரசு தொடக்க பள்ளிகளில் 70 தலைமை ஆசிரியர்களும்,உதவி ஆசிரியர்கள் 91 பேர் பணியாற்றுகின்றனர்.  நடுநிலைப்பள்ளிகளில் 19 தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் 40 பேர்,இடை நிலை ஆசிரியர்கள் 76 பேர்,தொழில் ஆசிரியர்கள் ஏழு பேர் பணியாற்றுகின்றனர்.தொடக்க பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை நடைபெறுகிறது.
நடுநிலைப்பள்ளியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை நடைபெறும்.இதில் ராஜகோபாலபுரம், ஆர்.எச்.காலனி, காசிபாளையம் உட்பட 10 பள்ளிகளில் மட்டுமே மூன்று ஆசிரியர்களுக்கு மேல் வேலை செய்கின்றனர். பிற பள்ளிகளில் தலைமை ஆசிரியர் ஒருவரும், உதவி ஆசிரியர் ஒருவர் என இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே பணி செய்கின்றனர். அரசு பள்ளியில் 101 மாணவர்களுக்கு மேல் இருந்தால் மூன்று ஆசிரியர்களும்,141 மாணவர்களுக்கு மேல் இருந்தால் ஐந்து ஆசிரியர்களும் நியமிக்கலாம் என விதி உள்ளது.
இரண்டு ஆசிரியர்களில் ஒருவர் விடுமுறை எடுத்தாலும், அலுவல் காரணமாக வெளியே சென்றாலும் ஒரு ஆசிரியரே ஐந்து வகுப்பையும் கவனிக்க வேண்டிய நிலை உள்ளது.   தினசரி ஒரு ஆசிரியர் இரண்டு, மூன்று வகுப்புக்களை கவனிக்க வேண்டிய நிலையில் மாணவர்களின் கல்வித்தரத்தை எப்படி எதிர்பார்க்க முடியும் என்று பெற் றோர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.   தனியார் பள்ளிகளில் இருபது மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரை நியமித்து பாடம் கற்றுத்தரும் நிலையில் அரசு பள்ளிகளில் இரண்டு வகுப்பை ஒரு ஆசிரியர் கவனிப்பதால் கிராம புற மக்கள் கூட தங்களது குழந்தைகளை நகர் புற தனியார் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டிய நிலை ஏற்படுகிறது. போதிய ஆசிரியர்களை நியமிக்காமல் சமச்சீர் கல்வி முறையை கொண்டு வந்தாலும் கல்வித்தரம் உயராது என்பதே பெற்றோர்களின் கருத்தாகும்.

Thursday, February 11, 2010

குழந்தை படிக்கவில்லையா? பெற்றோருக்கு கடும் அபராதம்

ஜெய்ப்பூர் : ராஜஸ்தானில் உள்ள ஒரு கிராமத்தில், பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை எனில், சம்பந்தப்பட்ட குழந்தையின் பெற்றோருக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை பின்பற்றப்படுகிறது.

ராஜஸ்தான், பார்மர் மாவட்டத்தில் உள்ளது துங்கெரோகி தலா என்ற கிராமம். இங்கு மொத்தமே 200 குடும்பங்கள் தான் வசிக்கின்றனர். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன், இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள், தங்கள் பெண் குழந்தைகளை பள்ளிக்கே அனுப்புவது இல்லை. இதனால்,அந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள், பல தலைமுறையாக கல்வியறிவு இல்லாமலே வளர்ந்தனர். காலப் போக்கில் தான், இதன் பாதிப்பு அந்த கிராமத்தை சேர்ந்த பெரியவர்களுக்கு தெரியத் துவங்கியது. இதனால், 20 ஆண்டுகளுக்கு முன், கிராம பெரியவர்கள் ஒன்று கூடினர். அதில் நாட்டாமையாக இருந்தவர் அதிரடியாக ஒரு தீர்ப்பை அறிவித்தார். பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாவிட்டால், சம்பந்தப்பட்ட குழந்தைகளின் பெற்றோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்பது தான், அந்த முடிவு.

இதனால், அபராதத்துக்கு பயந்து கொண்டு, பலரும் தங்களது பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பத் துவங்கினர். தற்போது, இந்த கிராமத்தை சேர்ந்த அனைத்து பெண்களும் கல்வியறிவு பெற்றவர்களாக மாறி விட்டனர். இன்னும் பல பெண் கள் நல்ல வேலை கிடைத்து, நகரங்களுக்கு குடிபெயர்ந்து விட்டனர். இந்த கிராமத்தை சேர்ந்த கேசர் என்பவர் கூறுகையில்,"தற்போது எங்கள் கிராமத்தில் உள்ள பள்ளியில் படிக்கும் ஆண் குழந்தைகளின் எண்ணிக்கை 180 தான். அதே நேரத்தில் 225 பெண் குழந்தைகள் படிக்கின்றன. இருந்தாலும், மேல்நிலை கல்வி படிப்பதற்கு இங்கு பள்ளி இல்லை. ஆறு கி.மீ., தூரம் நடந்து, அருகில் உள்ள கிராமத்து பள்ளிக்கு தான் செல்ல வேண்டும்' என்றார். இந்த கிராமத்தைப் பின்பற்றி, அருகில் உள்ள கிராமங்களிலும், இதேபோல் அபராதம் விதிக்கும் நடைமுறை தற்போது கடை பிடிக்கப்பட்டு வருகிறது.

Wednesday, February 10, 2010

11ம் வகுப்பு பொதுத்தேர்வையும் ரத்து செய்கிறது சி.பி.எஸ்.இ.,

கோல்கட்டா : பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்தது போன்று, 11வது வகுப்பு பொதுத் தேர்வையும் ரத்து செய்து., தேர்வு முறையில் புதிய திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த உள்ளது மத்திய மேல்நிலை கல்வி வாரியம் ( சி.பி.எஸ்.இ.,).

"எல்லாருக்கும் கல்வி அளிக்கும் சட்டம்' நிறைவேற்ற மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இதற்கான நடைமுறை விதிகளை , குறிக்கோள்களை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் இறுதி செய்து வருகிறது. அதற்கேற்ப, சில நடைமுறை மாற்றங்களை எடுக்க சி.பி.எஸ்.இ. திட்டமிட்டு நிறைவேற்றி வருகிறது. இதன்படி, ஏற்கனவே, 10 ம் வகுப்புக்குரிய தேர்வை ரத்து செய்துவிட்டது. இப்போது 11 வது வகுப்பு தேர்வையும் ரத்து செய்யலாம் என்று பரிசீலித்து வருகிறது.

இந்த தேர்வு முறை மாற்றம் குறித்து விரிவான திட்ட வடிவு ஒன்றை தயாரித்து மனித வள அமைச்சக ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. அமைச்சக ஒப்புதல் கிடைத்த உடன் தேர்வு முறையை நடைமுறைப்படுத்த உள்ளது. அதன்படி சி.பி.எஸ்.இ.,தொடர் மற்றும் விரிவான மதிப்பீடு அடிப்படையில் தேர்வு முறையை கொண்டு வருகிறது. தேர்வு முறையை இரண்டு கட்டங்களாக பிரித்து. முதல் கட்டத்தில் குறிப்பிட்ட பாடத்தில் சில அத்தியாயங்களை தேர்வு செய்து, அதில் நான்கு தேர்வுகள் நடத்துகிறது. இரண்டாவது கட்டத் தேர்வில் அந்த பாடத்தின் பாதி அத்தியாயங்களை தேர்வு செய்து அதற்கு தேர்வு நடத்துகிறது. பின்னர் அனைத்து அத்தியாயங்களையும் உள்ளடக்கி செமஸ்டர் முறையில் இறுதி தேர்வு நடத்துகிறது. ஆசிரியர்கள் மாணவர்களின் பொது அறிவுத் திறனை வளர்க்கும் விதத்தில் பகுதியை எழுத்து தேர்வாகவும்; பகுதியை செயல்முறை, வாய்மொழி மற்றும் வகுப்பு சோதனைகளாகவும் நடத்தவும் திட்டமிட்டுள்ளது.

Tuesday, February 9, 2010

காஞ்சீபுரம் அருகே அங்கீகாரம் பெறாத பள்ளிக்கு “சீல்” மேலும் 18 பள்ளிகளுக்கு நோட்டீசு


சென்னை, பிப். 9-
தமிழ்நாட்டில் அரசு அங்கீகாரம் பெறாத பள்ளிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து அங்கீகாரம் பெறாத பள்ளிக்கூடங்கள் எங்கெங்கு செயல்படுகிறது என்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் சோதனை நடத்தி அந்த பள்ளிக்கூடங்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் 20 பள்ளிகள் அங்கீகாரம் இன்றி செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டு அவற்றுக்கு நோட்டீசு அனுப்பினர். அங்கீகாரம் கேட்டு விண்ணப்பிக்குமாறும் அறிவுறுத்தினர்.
ஆனால் 2 பள்ளிக்கூடங்கள் அங்கீகாரம் கேட்டு இதுவரை விண்ணப்பிக்காததால் அந்த பள்ளிக்கூடங்களை இழுத்து மூடி சீல் வைக்க உத்தரவிடப்பட்டது.
காஞ்சீபுரம் அருகே திருப்புகுழியில் செயல்பட்ட தேவி மெட்ரிக் குலேஷன் பள்ளியை கடந்த மாதம் இழுத்து மூடி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இதில் படித்த 200 மாணவ - மாணவிகளை 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இன்னொரு பள்ளியில் சேர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
இதேபோல் நேற்று ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரகடத்தில் செயல்பட்ட அன்னை வேளாங்கண்ணி மெட்ரிக்குலேஷன் பள்ளிக்கு சென்று அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கீகாரம் வாங்காமல் வருடக்கணக்கில் பள்ளி செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையொட்டி இந்த பள்ளிக்கூடத்தை இழுத்து மூடி அதிகாரிகள் சீல் வைத் தனர்.
சீல் வைக்கப்பட்டுள்ள அன்னை வேளாங்கண்ணி மெட்ரிக் பள்ளியில் கடந்த ஆண்டு வரை 68 மாணவ- மாணவிகள் படித்து வந்தனர்.
இந்த பள்ளி அங்கீகாரம் பெறாத பள்ளி என சில பெற்றோர்களுக்கு தெரியவந்ததால் இந்த ஆண்டு நிறைய பேர் குழந்தைகளை இங்கு சேர்க்கவில்லை. அதிகாரிகள் சோதனை நடத்தியபோது 18 பேர்தான் படித்து வந்தனர்.
பள்ளி மூடப்பட்டதால் 18 பேரையும் பக்கத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியிலும், மண்ணிவாக்கத்தில் உள்ள நடேசன் மெட்ரிக் பள்ளியிலும் சேர்க்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மோகன்குமார் தெரிவித்தார்.
அங்கீகாரம் பெறாமல் செயல்பட்டு வரும் 18 பள்ளிக்கூட நிர்வாகிகளும் தற்போது அங்கீகாரம் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். அந்த மனு மீது ஆய்வு நடத்தி அரசுக்கு அனுப்பி வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதுபற்றி காஞ்சீபுரம் கலெக்டர் சந்தோஷ் மிஸ்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
காஞ்சீபுரம் மாவட்டத்தில் அரசு அங்கீகாரம் இன்றி செயல்படுவதாக பல்வேறு பள்ளிகளின் மீது புகார்கள் வந்துள்ளது. மாவட்ட நிர்வாகம் அவற்றை கண்டறிந்து மூடுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இதன்படி முதல் கட்டமாக ஒரகடம் அன்னை வேளாங்கண்ணி மெட்ரிக் பள்ளியை பிப்ரவரி 8 முதல் மூடுவதற்கு காஞ்சீபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரால் ஆணை வழங்கப்பட்டுள்ளது.
இப்பள்ளியில் பயிலும் மாணவர்களை அருகேயுள்ள பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே பொது மக்கள் யாரும் தங்கள் குழந்தைகளை அரசின் அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் சேர்க்கவேண்டாம்.
இவ்வாறு அறிக்கையில் கலெக்டர் கூறியுள்ளார்.

Monday, February 8, 2010

நீடித்த பொருளாதார வளர்ச்சிக்கு உயர்கல்வியின் பங்களிப்பு அவசியம்: வி.ஐ.டி. பல்கலை. வேந்தர் ஜி.விசுவநாதன் வலியுறுத்தல்

மதுரை, பிப். 6: நாட்டின் நீடித்த பொருளாதார வளர்ச்சிக்கு உயர்கல்வியின் பங்களிப்பு மிகவும் அவசியம் என்று வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன் தெரிவித்தார்.  மதுரையில் உள்ள விருதுநகர் டி.எஸ்.எம். மாணிக்க நாடார் ஜானகியம்மாள் மேல்நிலைப் பள்ளியின் 34-வது ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில் அவர் பேசியதாவது:  கல்வியை அரசாங்கம் மட்டுமே வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஒரு காலத்தில் இருந்தது. அதன் பிறகு சமுதாயத்தில் வசதி படைத்த நல்லோர் தங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை கல்விக்கு வழங்கி கல்விச் சேவை அளித்தனர்.  அதற்கு பச்சையப்ப முதலியார், சடையப்ப வள்ளல், அண்ணாமலைச் செட்டியார் போன்றோர் இன்றைக்கும் உதாரணங்களாக உள்ளனர். தற்போதும் வசதி படைத்த சிலர் இதுபோன்று கல்விக்கூடங்களைத் தொடங்கி சேவை செய்து வருகின்றனர்.  ஹார்வேர்டு, யேல், ஸ்டான்போர்டு உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் உள்ள அறக்கட்டளைகளில் மட்டும் ரூ.5 லட்சம் கோடி நிதியுதவி பெறப்பட்டுள்ளது. ÷இவை மூலம் சிறந்த மாணவர்களுக்கு கல்வி உதவி அளிக்கப்பட்டு வருகின்றன. அதேபோன்ற நிலைமையை நிச்சயமாக நம் நாட்டிலும் உருவாக்க முடியும்.  1984-ல் வேலூரில் நான் கல்லூரியைத் தொடங்கியபோது 180 மாணவர்கள் மட்டுமே படித்தனர். இன்று வி.ஐ.டி.யில் 15 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். உலகில் தலைசிறந்த 100 பல்கலை.களில் ஒன்றாக வி.ஐ.டி. வரவேண்டும் என்பதே எனது கனவாகும். ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உயர்கல்வி வளர்ச்சி மிகவும் முக்கியமாகும். உலகப் பொருளாதார வளர்ச்சியிலும் கல்வி முக்கியப் பங்கு வகிக்கிறது. 2020}ல் பொருளாதாரத்தில் வளர்ந்த நாடாக இந்தியா உருவாக வேண்டும் என்று அப்துல் கலாம் போன்றவர்கள் கூறி வருகின்றனர். அந்த நிலையை நாம் அடைய வேண்டும் என்றார்.

புதிய பட்டப்படிப்பு குறித்த சர்ச்சை


இந்தியாவின் தொன்மையான பல்கலைக் கழகங்களில் ஒன்றான
சென்னைப் பல்கலைகக் கழகம், பெரியார் சிந்தனைகள், அண்ணா சிந்தனைகள், கலைஞர் சிந்தனைகள் என்ற பிரிவுகளில் முதுகலைப் பட்டப்படிப்புகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுவருகிறது.
காந்திய சிந்தனைகள் மற்றும் அம்பேத்கார் சிந்தனைகள் ஏற்கனவே பல பல்கலைக் கழகங்களில் எம் ஏ பாட திட்டத்தில் இருப்பதாகவும், அதே போல தற்போது இந்தப் பாடத் திட்டம் அறிமுகப் படுத்தப்படுவதாகவும் சென்னை பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் திருவாசகம் அவர்கள் தெரிவித்தார்.
ஆனால் கலைஞரைப் பற்றிய விமர்சனங்கள் இந்தப் பாடத்திட்டத்தில் இருக்காது என்றும் பிற தலைவர்களின் வாழ்க்கை குறிப்புகளை ஒட்டிய முதுகலைப் பட்டங்கள் வரும் ஆண்டுகளில் துவக்கப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
இது பற்றிய செய்தியை நேயர்கள் இங்கு கேட்கலாம்

Thursday, February 4, 2010

அங்கீகாரம் பெற்ற மெட்ரிக், நர்சரி பள்ளிகளின் பட்டியல் வெளியிடப்படுமா?

ங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் தங்களது குழந்தைகளை பெற்றோர் சேர்ப்பதற்கு வசதியாக, மாவட்ட வாரியாக அங்கீகாரம் பெற்ற மெட்ரிக் பள்ளிகள், நர்சரி பள்ளிகளின் பெயர் பட்டியலை இணையதளத்தில் வெளியிட, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. அங்கீகாரம் பெற்ற பள்ளிகளின் பெயர்கள், அங்கீகாரம் எந்த தேதி வரை உள்ளது போன்ற விவரங்களை வெளியிட்டால், பெருமளவு பிரச்னைகளை தீர்க்க முடியும். அங்கீகாரம் பெறாத பள்ளிகளால், மாணவர்கள் மட்டுமின்றி, கல்வித் துறைக்கும் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.

மெட்ரிக் பள்ளிகளின் முதல் இயக்குனராக நாராயணசாமி பதவி வகித்த போது, மெட்ரிக் பள்ளிகளை ஒழுங்குமுறைப்படுத்தியதோடு, அங்கீகாரம் பெற்ற பள்ளிகளின் பட்டியலையும் மாவட்ட வாரியாக தயாரித்து, பெற்றோர் அறிந்து கொள்ள, பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்தார். மேலும், அங்கீகாரம் பெற்ற பள்ளிகளின் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும், "அப்டேட்' செய்து வெளியிடவும் நடவடிக்கை எடுத்தார். ஆனால், அவருக்குப் பிறகு மெட்ரிக் பள்ளிகள் இயக்குனராக பல அதிகாரிகள் பொறுப்பு வகித்தபோதும், அங்கீகாரம் பெற்ற பள்ளிகளின் பட்டியலை வெளியிட ஏனோ ஆர்வம் காட்டவில்லை.


மெட்ரிக் பள்ளி இயக்ககத்தின் இணையதளத்தில், மெட்ரிக் பள்ளிகளே பெயரை பதிவு செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. 60 பள்ளிகளின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், எந்த மாவட்டம், உயர்நிலைப் பள்ளியா, மேல்நிலைப்பள்ளியா, எந்த இடத்தில் பள்ளி உள்ளது போன்ற எந்த ஒரு விவரமும் கிடையாது. வெறும் பள்ளியின் பெயர் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகத்தினரே, பெயரை பதிவு செய்வதை விட, அங்கீகாரம் பெற்ற பள்ளிகளின் பெயர், அமைந்துள்ள இடம், மாவட்டம், எந்த வகுப்புகள் வரை செயல்பட அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது, எந்த தேதி வரை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது, தொலைபேசி எண் போன்ற விவரங்களை, இயக்ககமே மாவட்ட வாரியாக வெளியிட வேண்டும். அங்கீகாரம் பெற்ற மெட்ரிக் பள்ளிகளின் பெயர் பட்டியலை வெளியிட்டால், அது மாணவர்களை விட துறைக்கும் பெரிய உதவியாக இருக்கும். தனியார் பள்ளிகளில் மே மாதம் மாணவர் சேர்க்கை பணிகளை துவக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டிருந்தாலும், பல தனியார் பள்ளிகளில் இப்போதே மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.


அங்கீகாரம் பெற்ற பள்ளிகளின் பட்டியலை வெளியிட்டால், அதைப் பார்த்து பிள்ளைகளை பள்ளிகளில் சேர்க்க உதவியாக இருக்கும். அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் சேர்ந்துவிட்டு, பின் மாணவர்களுக்கு பிரச்னை என்றால், அது துறை அதிகாரிகளுக்குத் தான் தலைவலி. இதை உணர்ந்து, இணையதளத்தில் அனைத்து பள்ளிகளின் விவரங்களை வெளியிடுவதோடு, அங்கீகாரம் பெற்ற பள்ளிகள் பெயர்கள் அடங்கிய புத்தகத்தையும், பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மாநிலம் முழுவதும் புற்றீசல் போல் ஆயிரக்கணக்கான நர்சரி பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவையெல்லாம், தொடக்க கல்வித் துறையின் கீழ் வருகின்றன. தற்போதைய நிலவரப்படி, அரசு அனுமதியுடன் எல்.கே.ஜி., - யு.கே.ஜி.,யுடன் செயல்படும் பள்ளிகள், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை செயல்படும் தொடக்கப்பள்ளிகளின் விவரம் இணையதளத்தில் கிடையாது. அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளின் விவரமும் இணையதளத்தில் இல்லை. ஒவ்வொரு துறையின் கீழ் வரும் பள்ளிகளின் விவரங்களை, இணையதளத்தில் வெளியிட்டால் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும்.

Wednesday, February 3, 2010

அங்கீகாரமற்ற பள்ளிகளால் பிளஸ் 2 மாணவர்கள் திணறல் : தேர்வு நெருங்கும் நிலையில் சிக்கலில் தேர்வுத்துறை

பொதுத்தேர்வை நடத்துவதற்கான இறுதிக் கட்டப் பணிகளில் தேர்வுத்துறை தீவிர கவனம் செலுத்தி வரும் நிலையில், அங்கீகாரம் பெறாத பள்ளிகளில் பயிலும் மாணவர்களை, பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கக் கோரி தினமும் பலர், தேர்வுத்துறை அதிகாரிகளை நச்சரித்து வருகின்றனர்.


அங்கீகாரம் பெறாமல் பல ஆண்டுகள் மெத்தனமாக இருந்துவிட்டு, கடைசி நேரத்தில் மாணவர்களை முன்னிறுத்தி நெருக்கடி கொடுப்பது, தேர்வுத்துறைக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் விரைவில் நடைபெற உள்ளன. முதலில், மார்ச் 1ம் தேதியில் இருந்து பிளஸ் 2 தேர்வுகள் நடக்கின்றன. இன்று முதல் செய்முறை தேர்வுகள் நடைபெறுகின்றன. இத்தேர்வு முடிந்த ஒரு வாரத்தில், எழுத்துத் தேர்வுகள் துவங்கிவிடும். அதனால், தேர்வு பரபரப்பில் மாணவர்களும், பெற்றோரும் மூழ்கியுள்ளனர். அங்கீகாரம் பெறாத பள்ளிகளின் மாணவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். வழக்கமாக, அங்கீகாரம் பெறாத தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களை, அங்கீகாரம் பெற்ற பள்ளி மாணவர்களுடன் சேர்த்து தேர்வெழுத அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பர். அங்கீகாரம் பெறாதது, பள்ளி நிர்வாகத்தின் தவறு என்பதாலும், அதற்காக மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவும், அதிகாரிகள் இந்த மாற்று நடவடிக்கை எடுப்பர்.


இந்த முறை, அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை பொதுத்தேர்வு பட்டியலில் இருந்து "கழற்றி' விட்டுள்ளனர். மெட்ரிக் பள்ளிகள் மட்டுமில்லாமல், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளும் அங்கீகாரத்தை புதுப்பிக்காமல் இருப்பது, பொதுத்தேர்வு மூலம் தெரிய வந்துள்ளது. இப்படிப்பட்ட பள்ளிகளின் நிர்வாகிகள், என்ன செய்வதென்று புரியாமல் பதட்டம் அடைந்துள்ளனர். தினமும் பல பேர், மாணவர்கள் பட்டியலுடன், சென்னையில் உள்ள தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்திற்கு வருகின்றனர். "அங்கீகாரம் பெற்று விடுகிறோம்; இந்த ஒரு முறை மாணவர்களை தேர்வெழுத அனுமதியுங்கள்' என கெஞ்சுகின்றனர். அதிகாரிகளும் வேறு வழியில்லாமல், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, தேர்வெழுத அனுமதிக்கின்றனர். நேற்று இரு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள், தேர்வுத்துறைக்கு வந்து மாணவர்கள் தேர்வெழுத அனுமதி கேட்டனர். அந்தப் பள்ளிகளின் மாணவர்கள் தேர்வெழுத அதிகாரிகள் நடவடிக்கை எடுத்த பிறகே, ஆசிரியர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.


இது குறித்து அதிகாரிகள் வட்டாரம் கூறும்போது, "மாணவர்களின் நலனைக் கருதி, தேர்வெழுத அனுமதிக்கிறோம். ஆனாலும், அங்கீகாரம் பெறாத பள்ளிகள், ஒவ்வொரு ஆண்டும் கடைசி நேரத்தில் நெருக்கடி கொடுப்பது பெரிய பிரச்னையாக இருக்கிறது. கல்வியாண்டு துவங்கிய ஆறு மாதத்திற்குள், அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் பிரச்னையில் இறுதி முடிவு எடுத்தால், கடைசி நேரத்தில் தேவையற்ற பதட்டத்தை தவிர்க்கலாம். மாணவர்களுக்கும் மன உளைச்சல் ஏற்படாது' என்றனர்.