Showing posts with label Kavitahi. Show all posts
Showing posts with label Kavitahi. Show all posts

Thursday, February 4, 2010

உயிரின் உருவம் - கவிதை

சீறும் எரிமலையாகவும்
சுழன்றடிக்கும் புயல்மழையாகவும்
பிரயத்தனப்படும் பிரளயத்தில்
சிக்கிய தேகம்,
பிரபஞ்சத்தின் ஒரு உச்ச கணத்தில்
மேலே எழும்பி,
உயிர் அதனிடத்தும் பிரிந்துலவி
பின்பு இரண்டும் மீண்டும் கலந்தது...

சுற்றிய சூழ்கொடி இன்னமும்
அறுக்கப்படாமல் கிடக்கிறது,
என் பிண்டத்திலிருந்து பிரிந்த
ஒரு துண்டம்...
என் சிசுவாகிய நீயும்
ஒரு சிறிய அளவு அண்டம் !

உன்னைத் தொட்டு தூக்குகிறேன்
முதன் முறை,
என் தீண்டலின் உணர்ச்சியில்
உனக்குள் ஒரு அதிர்ச்சி
அதைத் தொடர்ந்து சிறு சிணுங்கல்,
நீ அழுவதற்காக
முயற்சி செய்கிறாய்
நான் அழுது விட்டேன் !

கால்களுக்கிடையில் இன்னும்
மரண வலி !
எனையாள வந்த உனக்கோ
அது பிறப்பின் வழி !

முகங்காண முடியாவிட்டாலும்
எங்கோ பார்த்து சிரிக்கிறாய் !
இதழ்குவியும் சிரிப்பும்
முகங்கோணும் அழுகையும்
மொழியாக நிறைந்த உன்னுலகத்தில்
சத்தங்கள் மட்டுமே
சங்கேதக் குறிப்புகள்...

கூரைக்கு வெளியே
வெடித்துச் சிதறும்
கூச்சல்களுக்கும் குழப்பங்களுக்கும்
எதிராக ஒலிக்கப் போகும்
உன் உரிமைக் குரலுக்காக
ஒரு இனமே காத்திருக்கிறது
நீ என் உயிரின் உருவம்
ஈனநிலைமாற்ற வந்த
விதியின் வடிவம்...!

ஹைக்கூ கவிதைகள்

பல நாட்களாக குடியிருந்தும்
வாடகை தரவில்லை
கரப்பான் பூச்சி !!

**

'மரத்தை வெட்ட வேண்டாம்'
என்று எழுதியிருந்தது
அச்சடித்த காகிதத்தில் !

**

நிலவுக்கு வந்த
கோடி காதல் கடிதங்கள்
நட்சத்திரம் !

**

கடவுள் கூட நாத்திகன் தான்
தன் சிலையை
காப்பாற்றாமல் இருக்கும் போது !

Wednesday, February 3, 2010

நிலவுக்காதல்

நிலவென்று சொல்லி காதலித்தான்
தேய்பிறை போல் என்னை கழட்டிவிட்டான்
வளர்பிரையாக்கினான்
என் வயிற்றை