Showing posts with label Australia News. Show all posts
Showing posts with label Australia News. Show all posts

Thursday, March 4, 2010

ஆஸி.,யில் இந்திய குழந்தை கடத்தி கொலை




மெல்போர்ன்: இந்தியாவில் இருந்து ஆஸி.,க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த ஒரு குடும்பத்தில் இருந்து குழந்தை கடத்தி கொலை செய்யப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் இன ரீதியான தாக்குதலா என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஹரீப்ரீத்கவ் என்பவர் தனது குடும்பத்தினருடன் ஆஸி., சென்றிருந்தார்.


இவர் லாலர் என்ற பகுதியில் தங்கி இருந்தார். இங்கு இவரது 3 வயது சிறுவன் குஸ்வந்த்சிங் காணாமல் போய் விட்டான் .இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். சில மணி நேரத்தில் மெல்போர்ன் விமான நிலையத்தில் இருந்து 30 கி. மீட்டர் தொலைவில் பிணமாக கிடந்ததை போலீசார் கண்டு பிடித்தனர்.


சிறுவன் உடல் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மருத்துவ பரிசோதனையில் உடலில் எவ்வித காயமும் இல்லை . இதனால் இவன் எப்படி கொலை செய்யப்பட்டான் என்பது இன்னும் மர்மமாக உள்ளது. இருப்பினும் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து , தொடர்ந்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த குழந்தை கொலை தொடர்பாக இந்த காரணம் குறித்து ஆராய்ந்து கொண்டிருக்க முடியாது. இது மிக் முக்கியமான விஷயமாக நாங்கள் எடுத்து விசாரித்து வருகிறோம் என்றார் விக்டோரிய மாகாண அதிபர் ஜான்பிரம்பி .


ஆஸி.,பிரதமர் உறுதி : கொலையாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என ஆஸி.,பிரதமர் கெவின் ரூட் தெரிவித்துள்ளார்.ஆஸ்திரேலிய பிரதமர், வெளியுறவு துறை அமைச்சர் இந்தியாவிற்கு வந்து ஆஸி.,யில் இந்தியர்களின் பாதுகாப்புக்கு உத்திரவாதம் அளிக்கப்படும் என கூறிய சில நாட்களில் இந்திய குழந்தை கொல்லப்பட்டிருப்பது இந்தியர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

Wednesday, February 10, 2010

ஆஸ்திரேலியாவில் இனவெறி கிடையாது:​ பிரெட் லீ


மெல்போர்ன்,​​ பிப்.8: ஆஸ்திரேலியாவில் இனவெறி கிடையாது என்று அந்நாட்டு வேகப் பந்து வீச்சாளர் பிரெட் லீ கூறியுள்ளார்.ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பான கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.ஆஸ்திரேலிய பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் பிரெட் லீ கூறியுள்ளது:சர்வதேசப் போட்டிகளில் மீண்டும் விளையாடும் எண்ணம் இல்லை.​ ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்று இதுவரை நான் விளையாடியதே மிகவும் திருப்தி அளித்துள்ளது.​ நாங்களே தொடர்ந்து விளையாடிக் கொண்டிருந்தால் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது.​ ஆஸ்திரேலிய அணியில் புதிதாக சேர்ந்துள்ள அனைத்து வீரர்களுமே திறமையானவர்கள்தான்.​ அவர்கள் தொடர்ந்து வெற்றிகளை குவித்து வருகின்றனர்.​ இந்திய மக்களுக்கு எப்போதுமே ஆஸ்திரேலியாவைப் பற்றி நல்ல எண்ணம் உண்டு.​ ஆனால் இப்போது நடைபெற்று வரும் விரும்பத்தகாத சம்பவங்களால் கசப்புணர்வு ஏற்பட்டுள்ளது.​ ஆஸ்திரேலியாவில் யாருக்கும் இனவெறி கிடையாது.​ இங்கு பல்வேறு கலாசாரங்களைக் கொண்ட மக்கள் ஒற்றுமையாக வாழ்கிறார்.இந்தியப் பத்திரிகைகள் மக்கள் மத்தியில் ஆஸ்திரேலியா பற்றி தவறான கருத்தை ஏற்படுத்தி விட்டார்கள்.​ நான் இந்தியா செல்லும் போது இது குறித்து அவர்களிடம் விளக்குவேன் என்றார் லீ.

Monday, February 8, 2010

ஆஸ்திரேலியாவில் தாக்குதலில் இருந்து தப்பிக்க இந்தியர்களுக்கு போலீஸ் யோசனை

மெல்போர்ன்,​ பிப்.7: ஏழை போல் நடியுங்கள்;​ பணக்காரர்களைப் போல் காட்டிக்கொள்ளாதீர்கள்.​ இப்படி நடந்து கொண்டாலே உங்கள் மீது யாரும் கையை வைக்கமாட்டார்கள் என்று இந்திய மாணவர்களுக்கு ஆஸ்திரேலிய போலீஸ் யோசனை வழங்கியுள்ளது.​ உடலில் அணிந்திருக்கும் தங்க நகைகள் உள்பட விலைமதிப்புள்ள அணிகலன்கள்தான் சமூக விரோதிகளை கவர்ந்திழுக்கின்றன.​ விலைமதிப்புள்ள பொருள்களை கைப்பற்ற நினைப்போர் பிறரது உயிரை பெரிதாகக் கருதுவதில்லை.​ ஆயுதங்களால் போட்டுத்தள்ளி நகைகளை கைப்பற்றிச் செல்கின்றனர் என்று விக்டோரியன் மாகாண தலைமை போலீஸ் அதிகாரி சைமன் ஓவர்லேண்ட் தெரிவித்தார்.​ மெல்போர்ன் நகரில் சர்வதேச மாணவர்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் சனிக்கிழமை வெளிநாட்டு மாணவர்களுக்கு பாதுகாப்பு யோசனை வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.​ இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய போது சைமன் இவ்விதம் யோசனை வழங்கினார்.​ வெளிநாட்டு மாணவர்களுக்கு எதிரான தாக்குதலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.​ எனினும்,​​ தாக்குதல் தொடர்ந்து நடைபெறுகிறது.​ சமூக விரோதிகளை கண்டுபிடித்து அவர்களை தண்டிக்க போலீஸ் ஒருபுறம் நடவடிக்கை எடுத்தாலும்,​​ வெளிநாட்டு மாணவர்களும் தங்களை தற்காத்துக் கொள்ளும் விதத்தில் நடந்து கொள்வது அவசியம்.​ குற்றச்சம்பவங்களுக்கான காரணங்களை அறிந்து கொண்டு அவற்றில் சிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.​ உதாரணமாக,​​ நீங்கள் தங்கியுள்ள இடம் உங்களுக்கு பாதுகாப்பானதாக இல்லை என்று உணர்ந்தால் உடனே அந்த இடத்தைக் காலி செய்து பாதுகாப்பான இடத்துக்குச் சென்றிட வேண்டும்.​ பின் இரவு நேரங்களில்தான் அதிகப்படியான குற்றங்கள் நடக்கின்றன.​ இதனால் இந்த நேரத்தில் வெளியில் பயணிப்பதைக் கூடுமானவரை தவிர்க்க வேண்டும் என்றும் சைமன் யோசனை வழங்கினார்.​ பிரதமர் வரவேற்பு:​​ சைமன் ஓவர்லேண்ட்டின் இந்த யோசனையை விக்டோரியன் பிரதமர் ஜான் பிரம்பி வரவேற்றுள்ளார்.​ வெளிநாட்டு மாணவர்கள் சைமனின் யோசனையை பின்பற்றினாலே சமூக விரோதிகளிடம் இருந்து தப்பித்துவிடலாம் என்று அவர் கூறியுள்ளார்.​ இப்படி யோசனை கூறப்படுவதால் வெளிநாட்டு மாணவர்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்காது என்று நினைக்கக்கூடாது.​ சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவோரை கண்டறிந்து அவர்களுக்கு உரிய தண்டனையை அளிக்க அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.​ இனவெறித் தாக்குதலில் ஈடுபடுவோர் கடுமையாகத் தண்டிக்கப்படுவர் என்றும் பிரதமர் ஜான் பிரம்பி கூறினார்.இந்தியர்கள் அமைப்பு கண்டனம்:​ சைமன் ஓவர்லேண்ட் இப்படி யோசனை கூறியுள்ளதற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள இந்தியர்கள் நல அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.​ சைமன் ஓவர்லேண்ட்டின் யோசனையைப் பார்த்தால் ஆஸ்திரேலியாவில் பணக்காரர்களாக வாழ இந்தியர்களுக்கு உரிமை கிடையாது என்பது போல் உள்ளது.​ இந்த யோசனை கேலிக்கூத்தானது என்றும் அந்த அமைப்பின் செய்தித்தொடர்பாளர் குப்தா தெரிவித்தார்.

Wednesday, February 3, 2010

மலேசிய இந்தியர்கள் வந்தேறிகள்: பிரதமரின் உதவியாளர் விமர்சனம்

இந்தியர்களை வந்தேறிகள் என்று விமர்சித்ததால் எழுந்த சர்ச்சை காரணமாக, மலேசிய பிரதமரின் உதவியாளர் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளார்.

மலேசிய பிரதமரின் உதவியாளர் நஷீர் சஃபர்.இவர் நேற்று மலாக்கா என்ற இடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையில், மலேசியாவில் வசிக்கும் இந்தியர்கள் மற்றும் சீனர்களை வந்தேறிகள் என்று விமர்சித்தார்.அத்துடன் மலேசியாவில் இந்தியர்கள் சம உரிமை கேட்டால், அவர்களது இந்தியக் குடியுரிமையை அரசு ரத்து செய்துவிட வேண்டும் என்றும் கூறினார்.

அவரது இந்த பேச்சு ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டதோடு, பிரதமருக்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த சர்ச்சை தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள மலேசிய பிரதமர் அலுவலகம், நஷீரின் கருத்து பிரதமரின் கருத்து ஆகாது என்று விளக்கம் அளித்துள்ளது.

அதே சமயம் நஷீர் யாரையும் இழிவுப்படுத்தும் நோக்கத்தில் பேசவில்லை என்றும், இருப்பினும் தமது பேச்சு யார் மனதையும் புண்படுத்தி இருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறியுள்ளதாகவும் அதில் மேலும் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே இந்த சர்ச்சை காரணமாக நஷீர் தமது பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.