Showing posts with label Terrorism. Show all posts
Showing posts with label Terrorism. Show all posts

Thursday, November 4, 2010

கடத்தல் வாலிபர்கள் பிடிபட்டது எப்படி? பின்னணி தகவல்கள்

சென்னை :  அண்ணாநகரைச் சேர்ந்த பள்ளி மாணவன் கடத்தப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் இருவரும் பிடிபட்டது எப்படி என்ற பின்னணி தகவல்கள் தெரியவந்துள்ளன.

சென்னை, அண்ணாநகர், "இசட் பிளாக்' 7வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ்; கிரானைட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு இரண்டு குழந்தைகள். மகன் கீர்த்திவாசன் (13); முகப்பேர் பகுதியில் உள்ள டி.ஏ.வி., பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த திங்கள் கிழமையன்று பள்ளிக்கு சென்ற கீர்த்திவாசன், மாலை 3 மணிக்கு காரில் வீடு திரும்பினான். காரை, டிரைவர் கோவிந்தராஜ் என்பவர் ஓட்டினார். கார் பள்ளி அருகில் இருந்து கிளம்பிய போது, கண்ணிமைக்கும் நேரத்தில் அதில் ஏறிய இரு வாலிபர்கள், கத்தியைக் காட்டி டிரைவர் கோவிந்தராஜை கீழே தள்ளிவிட்டு கீர்த்திவாசனை காரில் கடத்திச் சென்றனர். டிரைவர் கோவிந்தராஜ் உடனடியாக தனது முதலாளி ரமேஷிடம் தகவல் தெரிவித்தார். ரமேஷ், இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்தார். இதற்கிடையில் கடத்தியவர்கள், ரமேஷை தொடர்பு கொண்டு, "போலீசை அணுகினால் மகனை உயிருடன் பார்க்க முடியாது' என்று மிரட்டினர். இந்த சம்பவத்தால் சென்னை போலீசில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கோவையில் அக்கா, தம்பி இருவரும் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்கு முன்பே, இந்த சம்பவம் நடந்துள்ளதால் சென்னை போலீசார் உடனடியாக நடவடிக்கையில் இறங்கினர். சம்பவம் குறித்த தகவல் வந்த போது, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கூடுதல் கமிஷனர்கள், இணை கமிஷனர்கள் உள்ளிட்ட போலீசார் ஆலோசனை கூட்டத்தில் இருந்தனர். தகவல் கேள்விப்பட்டதும் கூட்டத்தை முடித்துக் கொண்டு, கூடுதல் கமிஷனர் ஷகீல் அக்தர், இணை கமிஷனர் தாமரைக்கண்ணன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர். கார் டிரைவர் கோவிந்தராஜ், கீர்த்திவாசனின் பெற்றோர் உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. உடனடியாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போலீசார் உஷார் படுத்தப்பட்டு வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதற்கிடையில், மாணவன் கடத்தப்பட்ட, "செவர்லெட் டவேரா' கார், பாடியில் உள்ள குறுங்காலீஸ்வரர் கோவில் அருகில் நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று பார்த்த போது, கீர்த்திவாசனின் புத்தகப்பை, கடத்த பயன்படுத்திய கத்தி ஆகியவை கைப்பற்றப்பட்டன. பள்ளியில் இருந்து மாணவனை கடத்திய இருவரும், மற்றொரு காரில் கீர்த்திவாசனை மாற்றி விட்டு, இந்த காரை அப்படியே விட்டுச் சென்றது தெரியவந்தது. இதற்கிடையில், அன்று இரவே கீர்த்திவாசனின் தந்தையை தொடர்பு கொண்ட கடத்தல்காரர்கள், மூன்று கோடி ரூபாய் தரவேண்டும் என நிபந்தனை விதித்தனர். மொபைல் போன், அண்ணாநகரில் இருந்து பயன்படுத்தியது தெரிந்தாலும், அந்த போன் சிக்கவில்லை. தொடர்ந்து பல முறை கடத்தல்காரர்கள் தங்கள் மொபைலில் இருந்து ரமேஷை தொடர்பு கொண்டனர். ஆனால், மொபைல் போன் குறித்த விவரங்கள் போலீசிற்கு சிக்கவில்லை; இந்த விஷயம் சிறிய பின்னடைவை ஏற்படுத்தியது.

சம்பவம் தொடர்பாக 40 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, அண்ணாநகர் முழுவதும் "சீல்' செய்யப்பட்டது. தொடர்ந்து போலீசார், ரமேஷ் மூலம் கடத்தல்காரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு 1.5 கோடி ரூபாயாக தொகையை குறைத்தனர். இரவு முழுவதும் தேடியும் கிடைக்காத நிலையில், நேற்று முன்தினம் காலை மீண்டும் கடத்தல்காரர்கள் இருவரும் ரமேஷை தொடர்பு கொண்டனர். அப்போது பணம் எடுத்து வர வேண்டிய இடம் முடிவெடுக்கப்பட்டது. தொடர்ந்து அந்த இடத்திற்கு சென்று கடத்தல்காரர்களிடம் பணத்தை கொடுத்த ரமேஷ், காரில் இருந்த கீர்த்திவாசனை மீட்டு வந்தார். இருவரும் ஹெல்மெட் அணிந்திருந்ததால் அவர்களை அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டது. இருந்தாலும் அவர்கள் பணத்துடன் வேறு எங்கும் சென்றிருக்க வாய்ப்பில்லை என்பதால் திருமங்கலம், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகள் அனைத்தும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து, நேற்று மாலை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், "மாணவனை மீட்டுவிட்டோம். கடத்தல்காரர்கள் குறித்த விவரங்கள் கிடைக்கவில்லை. பிடித்து விடுவோம்' என்றார். தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் நேற்று முன்தினம் நள்ளிரவு கடத்தல்காரர்கள், போலீசிடம் சிக்கினர்.

துப்பு துலங்கியது எப்படி?: நேற்று முன்தினம் பிற்பகல் 1:30 மணியளவில் கீர்த்திவாசனின் தந்தை ரமேஷை தொடர்பு கொண்ட கடத்தல்காரர்கள் இடத்தை முடிவு செய்ததும், ரமேஷ் வீட்டிற்கு அடுத்த இரண்டு தெருக்கள் தாண்டி ஒரு இடத்தை ரமேஷ், கடத்தல்காரர்களிடம் கூறியுள்ளார். போலீசார், ஆலோசனைப்படி பணத்தை எடுத்துக் கொண்டு அங்கு சென்ற ரமேஷ், கடத்தல்காரர்களிடம் பணத்தை கொடுத்துள்ளார். டூவீலரில் வந்த கடத்தல்காரர்கள் இருவரும் ஹெல்மெட் போட்டிருந்ததால் ரமேஷால் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. டூவீலர், "நம்பர் பிளேட்'டும், "கர்சீப்'பால் மூடப்பட்டிருந்தது. இதை போலீசார் குறிப்பிட்ட தூரத்தில் இருந்து கண்காணித்துக் கொண்டிருந்தனர். ஆனால், கீர்த்திவாசனை மீட்க வேண்டும் என்பதால் போலீசார் தங்கள் அதிரடி நடவடிக்கையை நிறுத்தி வைத்திருந்தனர்.

கடத்தல்காரர்கள் பணத்தை வாங்கிக் கொண்டு தப்பிச் செல்லும் போது அருகில் நின்றிருந்த மாருதி ஸ்விப்ட் டிசையர் ரக காரின் சாவியை ரமேஷிடம் தந்து, " டிக்கியில் பாருங்கள்' என்று கூறிவிட்டு சென்றுள்ளனர். உடனடியாக டிக்கியை திறந்து பார்த்த போது. அதில், கீர்த்திவாசன் இருந்தது கண்டு, உடனடியாக அவனை மீட்டனர். அதற்குள் இருவரும் டூவீலரில் தப்பினர். டூவீலர் வேகமாக சென்ற போது நம்பர் பிளேட்டில் கட்டப்பட்டிருந்த, "கர்சீப்' விலகியது. அப்போது தெரிந்த வாகனத்தின் எண், போலீசிற்கு துருப்புச் சீட்டாக மாறியது. இதைக் கொண்டு போலீசார் தொடர்ந்து விசாரித்தனர். அடுத்தடுத்து பல மர்மங்கள் விலகின. முதலில் போலீசார், கைதேர்ந்த கும்பலை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று நினைத்தனர். தொடர்ந்து வாகனத்திற்குரியவர் யார் என்பதை விசாரித்த போது தான் போலீசாருக்கு உண்மை பிடிபட்டது. வாகனத்தின் உரிமையாளர் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த விஜய் என்பது தெரியவந்தது.

விஜய் குறித்த விவரங்களை ஆராய்ந்த போது, அவர் ரமேஷின் தூரத்து உறவினர் என்ற விவரமும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நேற்று நள்ளிரவில் விஜய் வீட்டிற்கு சென்று, அவரை பிடித்து விசாரித்ததில், தனது சித்தப்பா மகன் பிரபு குறித்த தகவல்களை கூறியுள்ளார். உடனடியாக இருவரையும் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையின் போது முதலில் மறுத்த இருவரும், போலீசாரின் பிடி இறுகியதும், கீர்த்திவாசனை கடத்தியது நாங்கள் தான் என ஒப்புக் கொண்டனர். தொடர்ந்து, அவர்களிடம் இருந்த பணம் 98 லட்சத்து 73 ஆயிரம் ரூபாயும் மீட்கப்பட்டது. இருவரையும் கைது செய்த போலீசார் நேற்று மாலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பணத்தாசையே கடத்தலுக்கு தூண்டுதல்: கீர்த்திவாசனை கடத்தியதாக பிடிபட்டுள்ள இருவரும் ரமேஷின் தூரத்து உறவினர்கள். திருச்சி மாவட்டம், துறையூரைச் சேர்ந்த ரமேஷ், தனது மேலாளராக கங்காதரன் என்பவரை நியமித்துள்ளார். அவரது நெருங்கிய உறவினர்கள் தான் பிடிபட்ட விஜய் மற்றும் பிரபு என்பது விசாரணையில் தெரியவந்தது. ரமேஷின் மேலாளர் கங்காதரன், தனது முதலாளியின் பிசினஸ், ஆங்காங்கே இடம் வாங்கியது, கோடி கோடியாக நடக்கும் வர்த்தகம் குறித்த விவரங்களை தனது உறவினர்களான விஜய் மற்றும் பிரபுவிடம் தெரிவித்துள்ளார். இருவரும் பணி வாய்ப்பில்லாமல் இருந்த நிலையில், கங்காதரன் அளித்த விவரங்கள் அவர்களை உசுப்பேற்றி விட்டுள்ளது. ரமேஷின் மகனை கடத்தி, அதன் மூலம் கோடிக்கணக்கில் பணம் கறக்க திட்டமிட்டனர். கிடைக்கும் பணத்தை கொண்டு புதிய தொழிலை துவக்கி செட்டிலாகி விடலாம் என நினைத்து, கீர்த்திவாசனை கடத்தியதும், தெரியவந்தது. ஆனால், பணத்தை பெற்ற இருவரும் அதில் இருந்து எதையும் எடுத்து செலவு செய்யவில்லை என கூறப்படுகிறது. கொடுக்கப்பட்ட பணம் முழுவதையும் போலீசார் மீட்டுள்ளனர். கடத்திய இருவரும் நன்கு படித்து, லண்டன் வங்கி மற்றும் சிங்கப்பூரில் உள்ள ஐ.டி., கம்பெனியில் பணியாற்றியிருந்தாலும், உருப்படியாக எந்த வேலையிலும் வெகுநாட்கள் நீடித்ததில்லை என்று கூறப்படுகிறது. அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு, தற்போது கம்பிக்கு பின்னால் நின்று கொண்டிருக்கின்றனர்.

இன்ஜினியரிங், எம்.பி.ஏ., பட்டதாரிகள்: சென்னை அண்ணாநகரில் கிரானைட் அதிபர் மகன் கீர்த்திவாசனை கடத்திய இருவர் இன்ஜினியரிங் பட்டதாரிகள் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஒருவர் அண்ணாநகர் பிரீமியர் காலனியைச் சேர்ந்த, ஓய்வு பெற்ற சுங்க அதிகாரி ராமையாவின் மகன் விஜய்(26) என்பதும், மற்றொருவர் திருமங்கலம், பஞ்சரத்தினம் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் கேசவன் என்பவர் மகன் பிரபு (29) என்பதும் தெரியவந்தது. திருச்சி மாவட்டம், துறையூரைச் சேர்ந்த ராமையாவும், கேசவனும் சகோதரர்கள். இதில் விஜய், சென்னை அருகில் உள்ள தனியார் பொறியியல் பல்கலைக்கழகத்தில் பி.டெக்., படித்துவிட்டு லண்டன் சென்று, அங்குள்ள பெபில் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ., படித்துள்ளார். தொடர்ந்து அங்கேயே ஒரு வங்கியில் பணியாற்றிய விஜய், கடந்தாண்டு சென்னை வந்துள்ளார். விஜயின் சகோதரரான பிரபு, பெரம்பலூரில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் டி.எம்.இ., படித்துவிட்டு, அண்ணா பல்கலைக்கழகத்தில் பகுதி நேர பி.இ., படித்து முடித்து, சிங்கப்பூரில் பணியாற்றியுள்ளார். கீர்த்திவாசனை கடத்துவதற்காகவே இவர் சென்னை வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடத்தல்காரர்கள் பிடிபட்டது குறித்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறியதாவது: கீர்த்திவாசன் மீட்கப்படும் வரை நாங்கள் கடத்தல்காரர்களுடன் பேசிக்கொண்டே தான் இருந்தோம். அனைத்து தரப்பிலும் இதனால், "டென்ஷன்' இருந்து கொண்டே இருந்தது. அவர்கள் வாகனத்தை மாற்றியது எங்களது முயற்சியில் ஏமாற்றத்தை அளித்தது. அவர்களுடன் தொடர்ந்து பேசி, பணத்தை கொடுக்கும் இடத்தை முடிவு செய்த போது கீர்த்திவாசனின் தந்தையிடம் 15லிருந்து 20 லட்சம் வரை மட்டுமே பணத்தை கொடுக்க கூறினோம். ஆனால், அவர் ஒரு கோடி ரூபாய் கொடுத்துள்ளார். இதற்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. கீர்த்திவாசனை பத்திரமாக மீட்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததால் தான் அவர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது. எப்படியும் கடத்தல்காரர்களை பிடித்துவிடலாம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது. அவர்கள் மூன்று கோடி ரூபாய் கேட்டு, கொடுக்கப்பட்ட ஒரு கோடி ரூபாயும் தற்போது மீட்கப்பட்டுள்ளது. கடத்தலில் ஈடுபட்ட இருவரும், ரமேஷிடம் மேலாளராக பணியாற்றியவரின் உறவினர்கள். ரமேஷûக்கும் தூரத்து உறவினர்கள். இவர்கள் அனைவரும், திருச்சி துறையூரைச் சேர்ந்தவர்கள். இவ்வாறு ராஜேந்திரன் கூறினார்.

தொடர்ந்து நிருபர்கள் கேள்விகளுக்கு பதிலளித்து கூறியதாவது:

* கீர்த்திவாசனை கடத்தியவர்களை ஏன் சுட்டுப் பிடிக்கவில்லை?

முதலில் மாணவனை மீட்பதே எங்கள் குறிக்கோளாக இருந்தது. கடத்தப்பட்ட அன்று இரவு, கீர்த்திவாசன் அவர்களுடன் இருக்கிறானா என்பதை நாங்கள் தொடர்ந்து உறுதிபடுத்திக் கொண்டே இருந்தோம். இந்த சம்பவம், கோவை சம்பவத்தை அடுத்து நடந்துள்ளதால் மிகவும் கவனமாக இருந்தோம். பணத்தை கொடுக்கும் இடத்தை முடிவு செய்த நிலையில், தொடர்பு கொண்டபோது மாணவன் அழுதான். எனவே நிலைமை மோசமாகிவிடக் கூடாது என்பதால் அவர்கள், பணத்தை வாங்கிக் கொண்டு தப்பிய போது நாங்கள் எந்த அதிரடி நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒரு வேளை பணத்தையும் பெற்றுக் கொண்டு, கீர்த்திவாசனையும் கொண்டு சென்றுவிட்டால் என்ன செய்வது என்ற எண்ணமும் எங்களுக்கு இருந்தது. இடையில் பணத்திற்கு நாங்களும் ஏற்பாடு செய்து கொண்டிருந்தோம். அவர்கள், கீர்த்திவாசனை விட்டுச்சென்ற இடம் மக்கள் நெருக்கடி அதிகமாக இருந்ததால் சுட்டுப்பிடிப்பது என்பது கடினம். அவர்களை பின்தொடர்ந்தோம். டூவீலரின் பதிவு எண் கிடைத்ததும் அவர்கள் இருக்கும் இடம் தெரிந்து பிடித்தோம்.

* இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா?

இவர்களை தவிர வேறு யாருக்கும் தொடர்பிருப்பதாக தெரியவில்லை. அவர்களிடம் தொடர்ந்து விசாரித்து வருகிறோம். பிடிபட்ட இருவருக்கும் பணம் மட்டும் தான் நோக்கமாக இருந்துள்ளது.

* இனி இது போன்ற கடத்தல் சம்பவங்கள் நிகழாமல் தடுப்பது குறித்து?

தீபாவளி முடிந்த பின், பள்ளி முதல்வர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினருடன் ஆலோசனை நடத்த உள்ளோம். நான் கடந்தாண்டு நடந்த கூட்டத்தில், பள்ளிகளின் முன்பு கேமரா வைக்க வேண்டும் என்று கூறியிருந்தேன். தற்போது தான் பள்ளிக்கல்வித்துறை, பள்ளிகளின் முன்பு கேமரா அமைக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.

போலீசுக்கு நன்றி: தந்தை ரமேஷ் பேட்டி: கமிஷனர் பேட்டியின் போது உடனிருந்த கீர்த்திவாசனின் தந்தை ரமேஷ் பேசும் போது, "எனது மகன் கடத்தப்பட்ட 15 நிமிடத்தில் உயரதிகாரிகள் உடனேயே வந்து விசாரணை நடத்தினர். மீட்பதற்காக குறைந்த அளவு பணத்தை கொடுக்குமாறு போலீசார் கூறினர். ஆனால், கீர்த்திவாசனை மீட்க வேண்டும் என்பதற்காக தான், நான் அதிக பணத்தை கொடுத்தேன். அதிகாரிகள் தனது மகனை மீட்பது போன்று செயல்பட்டு மீட்டுக் கொடுத்தனர். ஒட்டு மொத்த போலீசாரும், மகனை மீட்பதில் ஈடுபட்டிருந்தனர். போலீஸ் கமிஷனர் உள்ளிட்டவர்களுக்கு நன்றி' என்றார்.

புழல் சிறையில் கடத்தல் பட்டதாரிகள்: அண்ணாநகரில் கிரானைட் அதிபர் மகன் கீர்த்திவாசன் கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய விஜய் மற்றும் பிரபு ஆகிய இரு பட்டதாரிகளும், நேற்று மாலை, எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் இருவரையும் கோர்ட் அனுமதியுடன் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Monday, May 3, 2010

மும்பை தாக்குதல் வழக்கில் பரபரப்பு தீர்ப்பு : 2 பேர் விடுதலை


மும்பை :மும்பைத் தாக்குதல் வழக்கில் நேற்று பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டது. தாக்குதலின் போது கைதான பாகிஸ்தான் பயங்கரவாதி அஜ்மல் அமீர் கசாப் குற்றவாளி என, சிறப்பு கோர்ட் நீதிபதி அறிவித்தார். அதே நேரத்தில், இந்த வழக்கில் பயங்கரவாதிகளுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்ட  இருவர் விடுவிக்கப்பட்டனர். 166 பேர் பலியாக காரணமாக இருந்த இந்த வழக்கில் 1,522 பக்கங்களில் தீர்ப்பு வழங்கப்பட்டது. கசாப்பிற்கான தண்டனை குறித்து இன்று வக்கீல்களின் வாதம் நடக்கிறது. பயங்கரவாத தாக்குதல் வழக்குகளில் மிக வேகமாக விசாரணை நடந்து, தீர்ப்பு வழங்கப்பட்டது இந்த வழக்கே ஆகும்.

கடந்த 2008 நவம்பர் 26ம் தேதி, பாகிஸ்தானிலிருந்து வந்த 10 பயங்கரவாதிகள், மும்பையில் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், காமா மருத்துவமனை, தாஜ் ஓட்டல் உட்பட பல இடங்களில் தாக்குதல் நடத்தினர். இந்தக் கொடூர தாக்குதலில், வெளிநாட்டவர்கள் உட்பட 166 பேர் கொல்லப்பட்டனர்; ஏராளமானோர் காயம் அடைந்தனர். பயங்கரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் எடுத்த அதிரடி நடவடிக்கையில், ஒன்பது பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப் என்ற பயங்கரவாதி மட்டும் கைதானான். இவன், பாகிஸ்தானின் பரித்கோட் நகரைச் சேர்ந்தவன். பள்ளிப்படிப்பை பாதியில் கைவிட்டவன்.மேலும், இந்த பயங்கரவாதிகளுக்கு தாக்குதல் நடத்த உதவியதாக, இந்தியாவைச் சேர்ந்த பாஹீம் அன்சாரி மற்றும் சபாபுதீன் அகமது என்ற இருவர் கைது செய்யப்பட்டனர். இந்த மூன்று பேருக்கும் எதிரான வழக்கு, மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அமைக்கப்பட்ட சிறப்பு கோர்ட்டில் நடந்தது. நீதிபதி தகிலியானி வழக்கை விசாரித்தார். அரசு தரப்பு வக்கீலாக உஜ்வால்நிகாம் ஆஜரானார்.

இந்தியாவில் பயங்கரவாத சம்பவங்கள் தொடர்பான வழக்குகளில் மிக வேகமாக முடிவுக்கு வந்த வழக்கு இதுவே.  தவிரவும், அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ., வந்து ஆஜரான வரலாற்று முக்கியத்துவம் பெற்ற வழக்கும் ஆகும். மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. கசாப், குண்டுதுளைக்காத வகையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தான். தீர்ப்பையொட்டி, மும்பை ஆர்தர்ரோடு சிறையைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

தீர்ப்பு:  நீதிபதி தகிலியானி தீர்ப்பை வழங்கினார்.

1,522 பக்கங்கள் கொண்ட தீர்ப்பில் அவர் கூறியுள்ளதாவது:இந்தியாவுக்கு எதிராக போர் தொடுத்ததாக, கசாப் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு உண்மை என நிரூபணமாகியுள்ளது.  அப்பாவி மக்களை கொன்று குவித்துள்ளான். ஆயுதங்கள் சட்டம், சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், வெடிமருந்துகள் சட்டம், ரயில்வே சட்டம் என, 86 சட்டப் பிரிவுகளின் கீழ் கசாப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அனைத்து சட்டப் பிரிவுகளின் கீழும் அவன் குற்றவாளியே.மும்பைத் தாக்குதலை வெறும் படுகொலை என சொல்ல முடியாது. இது இந்தியாவிற்கு எதிராக நடத்தப்பட்ட போரின் ஒரு பகுதி என்றே சொல்ல வேண்டும். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை பாகிஸ்தானில் இருந்து சிலர் இயக்கியுள்ளனர்.மூத்த போலீஸ் அதிகாரிகள்  ஹேமந்த் கர்காரே, அசோக் காம்தே,  விஜய் சலாஸ்கர், உதவி போலீஸ் இன்ஸ்பெக்டர் துக்காராம் ஓம்பாலே ஆகியோரை கொன்ற வழக்கிலும் கசாப் குற்றவாளியே.

அதேநேரத்தில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு இந்தியர்களான பாஹீம் அன்சாரி மற்றும் சபாபுதீன் அகமது ஆகிய இருவருக்கும் எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாததால், அவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்கள் சந்தேகத்திற்கு இடமானதாக இருப்பதால், சந்தேகத்தின் பலனை அவர்களுக்கு சாதகமாக்கி விடுதலை செய்கிறேன்.இந்த வழக்கில், மீடியா போட்டோகிராபர்கள் செபஸ்டியன் டிசவுசா மற்றும் ஸ்ரீராம் வெர்னீகர் (கசாப் சுட்டதை படம் பிடித்தவர்கள்), சத்ரபதி சிவாஜி ரயில் நிலைய அறிவிப்பாளர் விஷ்ணு ஜெண்டே, 11 வயது சிறுமி தேவிகா ரோதவான் ஆகியோர் அளித்த சாட்சியங்கள் கோர்ட்டிற்கு மிகவும் உதவியாக இருந்தன. மேலும், இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையில், தலைமறைவு குற்றவாளிகள் என, குறிப்பிடப்பட்டுள்ள 35 பேரில், 20 பேர் குற்றவாளிகள் என்பதையும்  கோர்ட் கண்டறிந்துள்ளது.இவ்வாறு நீதிபதி தகிலியானி கூறினார்.

குற்றவாளி  கசாப் என்று  நீதிபதி அறிவித்த போது, அவன் ஏதும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தவில்லை. ஆனால், மற்ற இருவரும் தண்டனையின்றி  விடுவிக்கப்பட்ட போது, அவர்கள் புன்முறுவல் பூத்து மகிழ்ச்சி தெரிவித்தனர். கசாப் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால், அவனுக்கான தண்டனை குறித்து இன்று வக்கீல்களின் வாதம் நடக்கிறது. மரண தண்டனை வழங்க வேண்டும் என, அரசு தரப்பில் வாதிடப்படும் வாய்ப்பு அதிகம்.

தீர்ப்பு பற்றி கருத்து தெரிவித்த அரசு சிறப்பு வக்கீல் உஜ்வால் நிகாம், ''பாஹீம் அன்சாரி, சபாபுதீன் அகமது விடுதலையை எதிர்த்து, ஐகோர்ட்டில் அப்பீல் செய்யும்படி அரசுக்கு பரிந்துரை செய்வேன். கசாப்பை குற்றவாளி என, அறிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது,'' என்றார்.

Tuesday, February 16, 2010

மாவோ., நக்சல்கள் வெறி., ராணுவ வீரர்கள் 25 பேரை கொன்றனர் ; சிதம்பரம் ஆக்ஷனுக்கு பதிலடி என கொக்கரிப்பு

கோல்கட்டா: மேற்குவங்கம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ராணுவ முகாமில் நக்சல்கள் புகுந்து வெறித்தாக்குதல் நடத்தினர். அங்கு இருந்த துணை ராணுவ படை வீரர்கள் பலரை சுட்டு கொன்றனர். சிலரை எரித்து கொன்றனர். அத்தோடு இல்லாமல் அங்கிருந்த ஆயுதங்களையும் நக்சல்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்த அசாத்தியமான துயர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் கிழக்கு மற்றும் மத்திய பகுதியையொட்டியுள்ள பீகார்,  ஜார்கண்ட் , ஒரிசா, மேற்குவங்கம், சட்டீஸ்கர் ஆகியபகுதிகளில் நக்சல்கள் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இங்குள்ள மாவோயிஸ்ட் நக்சல்கள் மத்திய அரசுக்கு பெரும் தலைவலியை தந்து வருகின்றனர். இவர்களை அழிக்கும் நோக்கில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது அதிகாரிகளை கடத்தி சென்று கொலை செய்வது போலீஸ் ஸ்டேஷன்களுக்கு தீ வைப்பது , மற்றும் போலீஸ் இன்பார்மர்களை கொலை செய்வது இவர்களது முக்கிய செயல்பாடாக இருந்து வருகிறது.

முதல்வர்கள் மாநாட்டில் ஆலோசனை : நக்சல்கள் அட்டூழியத்தை ஒடுக்க ஆப்ரேஷன் கீரின் ஹன்ட் என்ற பெயரில் ஒரு குழு அமைத்து செயல்பட ராணுவ வீரர்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பிறப்பித்தார். இதன்படி ராணுவ வேட்டை நடந்து வருகிறது. இந்த ஆபரேஷனுக்கு நக்சல்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுபோன்ற ராணுவ நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் நக்சல்கள் 72 மணி நேர பந்த் அறிவித்தனர். தேசிய பாதுகாப்பு தொடர்பான மாநில முதல்வர்கள் பங்கேற்ற மாநாடு பிரதமர் தலைமையில் நடந்த அந்நாளில் பல்வேறு தாக்குதல்களை நக்சல்கள் நடத்தினர். ரயில் தண்டவாளங்கள் தகர்க்கப்பட்டன.  முதல்வர்கள் மாநாட்டில் ஒரிசா, பீகார், ஜார்கண்ட், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநில முதல்வர்களிடம், உள் து‌றை அமைச்சர் ப. சிதம்பரம்  நக்சல்கள் கொட்டத்தை ஒழிக்க என்ன வழி என தனியாக ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை முடிந்த 6 நாளில் மேற்குவங்கம் மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் சில்தா என்ற பகுதியில் துணை ராணுவ படையினர் முகாம் மீது நக்சல்கள் இன்று அதிகாலை 5 .30 மணி அளவில் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளனர். 

இன்று நடந்தது என்ன ? : இது குறித்து இப்பகுதி மாவட்ட மாஜிஸ்திரேட் என்.எஸ். நிகாம் கூறியதாவது: இங்கு சுமார் 50 பேர் நக்சல்கள் 25 மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். இவர்கள் முகாம் உள்ளே புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளனர். வீரர்கள் தங்களுக்குரிய உணவு சமைத்து கொண்டிருந்த நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளன. நக்சல்கள் கையில் இருந்த துப்பாக்கி மூலம் 5 பேரை சுட்டு கொன்றனர். பின்னர் தீ வைத்துள்ளனர். இதில் சிக்கி 9 வீரர்கள் பலியாயினர். தொடர்ந்து அங்கிருந்த ஏ.கே.,47 ரக துப்பாக்கி உள்பட முக்கிய ஆயுதங்களை கொள்ளையடித்து சென்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

தூங்கும் போது தாக்குதல் நடத்துவதே நக்சல்கள் வழக்கம்: ராணுவ முகாமில் நடந்த தாக்குதலில் சுமார் 25 பேர் இறந்து விட்டனர். மொத்தம் இந்த முகாமில் 51 பேர் இருந்துள்ளனர். எத்தனை பேர் காயமுற்றுள்ளனர் என்ற விவரம் இன்னும் அறியப்படவில்லை. சம்பவம் நடந்த பகுதிக்கு ராணுவ உயர் அதிகாரிகள் விரைந்துள்ளனர். நக்சல்கள் தாக்குதல் எப்போதும் அதி‌காலை நேரத்திலேயே இருக்கும். அதாவது அதிகாலை 3 மணி முதல் 5 மணிக்குள் , இதந்த தாக்குதலும் இன்று காலையில் தான் நடந்துள்ளது. இந்த நேரத்தில் வீரர்கள் பலர் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர். சிலர் சமையல் செய்யும் பணியில் இருந்துள்ளனர். திடீரென வந்த நக்சல்கள் மொத்தமாக வந்த இவர்கள் கையெறி குண்டுகளை வீசியபடி முகாம் உள்ளே நுழைந்தனர். பின்னர் கையில் கிடைத்தவர்களை சுட்டு தள்ளினர். இந்த அதிரடி தாக்குதலில் படை வீரர்களால் எதிர் தாக்குதல் எதுவும் நடத்த முடியவில்லை.

நக்சல் ‌தலைவன் கொக்கரிப்பு : இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு மாவோ., நக்சல்கள் பொறுப்பேற்றுள்ளனர். இது குறித்து மாவோ., தலைவர் கிஷன்ஜி கூறியிருப்பதாவது: மத்திய அமைச்சர் சிதம்பரம் எங்களுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கியுள்ளார். ஆப்ரேஷன் கீரின் ஹன்ட் என்ற நடவடிக்கையை நிறுத்த வேண்டும். மத்திய அரசு மனித நேயத்திற்கு எதிரான செயலில் ஈடுபட்டு வருகிறது. இது போன்ற இந்த நடவடிக்கைக்கு இந்த தாக்குதல் வழியாகத்தான் நாங்கள் பதில் சொல்வோம். இத்தாக்குதலும் அப்படித்தான். இன்னும் எங்கள் அதிரடி தாக்குதல் தொடரும் என கூறியுள்ளார்.

Monday, February 15, 2010

புனேயில் குண்டு வைத்தவர்கள் பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ. ஒரு கோடி பரிசு : தொடர் சம்பவங்களால் அதிர்ச்சி அடைந்த மத்திய அரசு முடிவு

புதுடில்லி : புனேயில் ஜெர்மன் பேக்கரியில் குண்டு வைத்த பயங்கரவாதிகள் பற்றி தகவல் கொடுப்போருக்கு, ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதே நேரத்தில், பேக்கரி எதிரில் உள்ள ஓட்டலின் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம், குண்டு வெடிப்பு தொடர்பாக சில முக்கிய தடயங்கள் கிடைத்துள்ளதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரின், கோரேகான் பார்க் பகுதியில் ஓஷோ ஆசிரமம் உள்ளது. இதனருகேயுள்ள ஜெர்மன் பேக்கரியில், கடந்த சனியன்று நிகழ்ந்த பயங்கர குண்டு வெடிப்பில், ஒன்பது பேர் பலியாயினர்; 60 பேர் காயம்அடைந்தனர். இந்த வழக்கை, மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சக உயர் அதிகாரிகள் கூறியதாவது: ஜெர்மன் பேக்கரியில் குண்டு வைத்த பயங்கரவாதிகள் பற்றி தகவல் கொடுப்போருக்கு, ஒரு கோடி ரூபாய் பரிசளிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. மேல்மட்ட அளவில் இந்த பரிசீலனைகள் நடக்கின்றன. விரைவில் முடிவு அறிவிக்கப்படும். பரிசு அறிவிக்கப்பட்ட பின், பயங்கரவாதிகள் பற்றி தகவல் கொடுப்போருக்கு, அவர்களின் அடையாளம் பாதுகாப்பாக வைக்கப்படுமென, உறுதி அளிக்கப்படும். ஆனால், அவர் கொடுக்கும் தகவல் சரியானதாக இருக்க வேண்டும். இவ்வாறு உள்துறை அமைச்சக உயர் அதிகாரி கூறினார். உள்துறை அமைச்சக உயர் அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் முக்கிய ஆய்வுகளையும் நடத்தினார்.

இதற்கிடையில், குண்டு வெடிப்பு நிகழ்ந்த ஜெர்மன் பேக்கரிக்கு எதிரேயுள்ள, ஐந்து நட்சத்திர ஓட்டலின் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீஸ் அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்ததில், அதில் முக்கிய தடயங்கள் கிடைத்துள்ளதாகத் தெரிகிறது. ஜெர்மன் பேக்கரியில் குண்டு வைத்ததில், இரண்டு நபர்களுக்கு தொடர்பு இருக்கலாம். பேக்கரியில் குண்டு வைத்தவுடன், அவர்கள் அங்கிருந்து ஆட்டோவில் தப்பிச் சென்றிருக்கலாம் என நம்பப்படுகிறது. அதே நேரத்தில், இந்தியன் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த ஐந்து பயங்கரவாதிகள், பேக்கரி குண்டு வெடிப்பிற்கு காரணமாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப் படுகிறது.

இந்திய முஜாகிதீன்: ஐந்து பயங்கரவாதிகளில், அப்துஸ் சுபான் குரேஷி, ரியாஸ் அகமது பாட்கல், இக்பால் பாட்கல் மற்றும் மோக்சின் சவுதாரி ஆகியோர் இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் தென் மாநில பிரிவைச் சேர்ந்தவர்கள். அகமது பாட்கல், இக்பால் பாட்கல் இருவரும் சகோதரர்கள். சவுதாரி, புனேயைச் சேர்ந்தவன். ஐந்தாவது பயங்கரவாதி முகமது அம்ஜத் கிவாஜா, ஆந்திரா, ஐதராபாத்தைச் சேர்ந்தவன். சமீபத்தில் இவன் போலீசாரால் கைது செய்யப் பட்டான் என்பது குறிப்பிடத் தக்கது.

இதற்கிடையில், இவ்வழக்கை விசாரித்து வரும் மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்புப் படையினர், குண்டு வெடிப்பில் தொடர்புடையதாக நம்பப்படும் ஆறு பேரை பிடித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஜெர்மன் பேக்கரி குண்டு வெடிப்பில், எந்த பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு உண்டு என, தீவிரமாக விசாரித்து வருகிறோம். இதில், முதலிடத்தில் இருப்பது இந்தியன் முஜாகிதீன். புனேயில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் கோண்ட்வா பகுதியில் சிலரைப் பிடித்து, பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் விசாரித்து வருகின்றனர். குஜராத், டில்லி மற்றும் பெங்களூரு குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய இந்தியன் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டதை அடுத்து தான் கோண்ட்வா பகுதி, போலீசாரின் கண்காணிப்பில் வந்தது. இவ்வாறு போலீஸ் அதிகாரி கூறினார்.

அதே நேரத்தில், 2008ம் ஆண்டு டில்லியில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டு, தற்போது டில்லி போலீசாரின் பிடியில் உள்ள இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஷாகத் என்ற பயங்கரவாதியிடமும் விசாரணை நடத்த, மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் திட்டமிட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் ரகசியமாகச் செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் பற்றி, ஷாகத் ஏற்கனவே சில தகவல்களை கொடுத்துள்ளதால், அவனிடம் விசாரணை நடத்தினால், மேலும் பல விவரங்கள் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்றரை கிலோ ஆர்.டி.எக்ஸ்.,: ஜெர்மன் பேக்கரி குண்டு வெடிப்பிற்கு ஒன்றரை கிலோ ஆர்.டி.எக்ஸ்., வெடிமருந்து பயன்படுத்தப்பட்டுள்ளதாக, தடய அறிவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் ஆர்.டி.எக்ஸ்., பயன்படுத்தப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே சமயம், அம்மோனியம் நைட்ரேட்டை டீசலுடன் கலந்து வெடிக் கலவையில் சேர்த்திருப்பதாகவும் தகவல் கூறப்பட்டது. விரைவில் தடயவியல் அறிக்கை, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்படும் என்று கூறப்பட்டது.

கடைசி நிமிடத்தில் முடிவை மாற்றிய பயங்கரவாதிகள்: கோரேகான் பார்க்கில் உள்ள ஓஷோ ஆசிரமத்தையோ அல்லது யூதர்கள் சமுதாய மையமான சாபத் ஹவுசையோ குண்டு வைத்து தகர்க்க பயங்கரவாதிகள் திட்டமிட்டிருக்கலாம். ஆனால், அந்த இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அதிகம் இருந்ததால், மக்கள் எளிதில் வந்து செல்லக்கூடிய இடமான ஜெர்மன் பேக்கரியை தேர்வு செய்திருக்கலாம் என, புலனாய்வு அதிகாரிகள் கூறியுள்ளனர். அவர்கள் மேலும் தெரிவித்ததாவது: பயங்கரவாதிகள் குண்டு வைத்த நேரத்தில், பேக்கரியில் இருந்த பெரும்பாலான வெளிநாட்டவர்கள், ஓஷோ ஆசிரமத்தில் இரவு 7 மணிக்கு நடக்கும் தியானம் மற்றும் வழிபாட்டில் பங்கேற்க சென்று விட்டனர். அதனால், உயிரிழப்பு குறைவாக இருந்துள்ளது. குண்டு வெடிப்பு முன்னதாகவே நிகழ்ந்திருந்தால், உயிரிழப்புகள் அதிகமாகியிருக்கும்.

அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி டேவிட் ஹெட்லி, 2008ம் ஆண்டில் ஓஷோ ஆசிரமத்திற்கும், சாபத் ஹவுசிற்கும் வந்து சென்றுள்ளான். அவன் வந்து சென்றது தெரிந்த பின்னர் தான், இந்த இரண்டு இடங்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. பேக்கரியில் பையில் வைக்கப்பட்ட குண்டு, ரிமோட் மூலமோ அல்லது மொபைல் போன் மூலமோ வெடிக்கச் செய்திருக்கலாம். டைமர்கள் எதுவும் வைத்ததாகத் தெரியவில்லை.குண்டு வெடிப்பு நிகழ்த்திய விதத்தைப் பார்க்கும் போது, லஷ்கர் -இ- தொய்பா பயங்கரவாத அமைப்புக்கு இதில் தொடர்பிருக்கலாம் என நம்பப்படுகிறது. ஏனெனில், இதுபோன்ற குண்டு வெடிப்புகள் காஷ்மீரில் தான் நிகழ்ந்துள்ளன. இவ்வாறு புலனாய்வு அதிகாரிகள் கூறினார்.

Wednesday, February 10, 2010

தீவிரவாதத்தை முறியடிக்க இந்தியாவுக்கு கனடா பயிற்சி

தீவிரவாதத்தை பாதுகாப்பு படையினர் எங்ஙனம் எதிர்த்து போராடி முறியடிப்பது என்பது குறித்த பயிற்சியை இந்தியாவுக்கு அளிக்க கனடா முன்வந்துள்ளது.

எல்லை தாண்டிய பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள இந்தியாவுக்கு, பயங்கரவாத தாக்குதலை தடுப்பது மற்றும் அதனை எங்ங்கனம் விரைந்தும், உறுதியாகவும் எதிர்த்து போராடுவது என்பது குறித்து இந்தியாவிலுள்ள பாதுகாப்பு படையினருக்கு கனடா பயிற்சி அளிக்க முடியும் என்று கனடா காவல் துறை வாரியத் தலைவர் அலோக் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

புலனாய்வை கூர் தீட்டியே கனடாவில் இந்தியாவுக்கு எதிரான இயக்கங்களின் நடவடிக்கைகளை கனடா காவல் துறையினர் வெற்றிகரமாக முறியடித்ததாகவும் அவர் மேலும் கூறினார்.

டொரன்டோ நகர காவல் துறை தலைவர் பில் பிளேருடன் முகர்ஜி அடுத்த வாரம் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tuesday, February 9, 2010

காஷ்மீர் போலீஸ் நிலையத்தில் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல்; ஏட்டு சுட்டுக்கொலை


காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ளது சோபூர். இங்குள்ள போலீஸ் நிலையத்துக்குள் இன்று பகல் 10.45 மணியள வில் தீவிரவாதிகள் சிலர் புகுந்தனர்.
அவர்கள் அங்கிருந்த போலீசாரை நோக்கி சரமாரியாக சுட்டபடி உள்ளே நுழைந்தனர். உடனே போலீசார் எதிர் தாக்குதல் நடத்தினார்கள்.
இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் முகமது யூசுப் என்ற போலீஸ் ஏட்டு குண்டு பாய்ந்து பலியானார்.தீவிரவாதிகள் நுழைந்தது பற்றி அறிந்ததும் அந்த இடத்துக்கு கூடுதல் போலீஸ் படையினர் விரைந்தனர்.
அவர்கள் போலீஸ் நிலையத்தை சுற்றி வளைத்து நின்று தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இரு தரப்புக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது.