Tuesday, April 6, 2010

கொலையும் செய்யுமாம் ரீவி- TV Viewing Kils

நகர்புற மக்கள் மட்டுமின்றி உலகெங்கும் ரீவி பார்ப்பது முக்கிய பொழுது போக்காகிவிட்டது.

"நாள் முழுவதும் ரீவி பார்க்கிறதுதான் இவளுக்கு வேலை"
என்று குமுறுகிற ஆண்களும் கூட
வேலையால் வந்த பின்
விளையாட்டு, நடைப்பயிற்சி அல்லது நீச்சல்
என எந்த உடல் பயிற்சியிலும் ஈடுபடாது ரீவி அல்லது கொப்பியூட்டர் முன் அமர்ந்துவிடுகிறார்கள்.


உடல் பயிற்சிகளில் ஈடுபடுவதால் இருதயம் சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்க முடியும் என்பது எல்லோரும் அறிந்த செய்திதான். உடற் பயிற்சியின் நன்மைகள் பற்றி உலகளாவிய ரீதியில் பல ஆய்வுகள் செய்யப்பட்டு விஞ்ஞான பூர்வமாக நிறுவப்பட்டும் இருக்கிறது.

ஆனால் உடலுழைப்பு அற்று, உட்கார்ந்த இடத்திலிருந்து எல்லா வேலைகளையும் பார்ப்பதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றிய ஆய்வுகள் குறைவு.

அண்மையில் அவுஸ்திரேலிய ஆய்வாளர்கள் அதில் கவனம் செலுத்தியுள்ளார்கள். Australian Diabetes, Obesity and lifestyle Study (AusDiab)  எனப் பெயரிடப்பட்ட அந்த ஆய்வானது 8800 பேர்களை உள்ளடக்கியதாகும்.

டெலிவிசன் பார்ப்பது அல்லது அது போன்ற தொடர்ச்சியாக ஒரே விதமான உடலுழைப்பற்ற பொழுது போக்கில் இருப்பதற்கும், இருதய நோய்கள் மற்றும் ஏனைய காரணங்களினாலான மரணத்திற்கான சாத்தியங்கள் அதிகரிப்பதற்கும் தொடர்புகள் இருக்கின்றனவா என அறிவதற்கான 6.6 வருடகாலமாகச் செய்யப்பட்ட  ஆய்வு அது.

வயது, பால், இடுப்புச் சுற்றளவு, உடற்பயிற்சி ஆகியவற்றால் ஏற்படக் கூடிய மாற்றங்களைக் கணக்கில் எடுத்தார்கள்.

அதன் பின்னரும் எக்காரணத்திதாலும் ஏற்படக் கூடிய மரணம், இருதய நோய்களால் ஏற்படக் கூடிய மரணம், புற்றுநோய்களால் ஏற்படக் கூடிய மரணம் ஆகியன ரீவீ பார்க்கும் நேரத்திற்கு ஏற்ப அதிகரிப்பதை ஆய்வு உறுதி செய்தது. ஆயினும் புற்றுநோய் அதிகரிப்பதற்கான சாத்தியம் மிகக் குறைவாகவே அதிகரித்திருந்தது.


தினமும் இரண்டு மணிநேரத்திற்கு குறைவாக ரீவி பார்ப்பவர்களுடன் தினமும்,

2-4 மணிநேரம் ரீவி பார்ப்பவர்களை ஒப்பிட்டுப் பார்த்தபோது எந்த நோய்களினாலும் மரணிப்பதற்கான சாத்தியம் 1.13 சதவிகிதத்தாலும்,

4 மணிநேரத்தற்கு அதிகமாக பார்ப்பவர்களுக்கு 1.46 சதவிகிதத்தாலும் அதிகரித்தது.

மேற்கூறிய நேர அளவுகளில் ரீவி பார்ப்பதால் இருதய நோய்களால் மரணிப்பதற்கான சாத்தியம் முறையே 1.19 மற்றும் 1.8 சதவிகிதத்தினால் அதிகரித்தது.

ஆனால் நேரம் அதிகரிப்பதற்கும் புற்றுநோயால் இறப்பதற்கான சாத்தியம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கவில்லை.

எனவே நாம் செய்யக் கூடியது என்ன? ரீவி பார்க்கும் நேரத்தை 2 மணிநேரத்திற்கு மேற்படாது குறைக்க வேண்டும்.


ரீவி பார்ப்பது மட்டுமின்றி கொம்பியூட்டர், செஸ், காட்ஸ் போன்ற எந்த உடலசையாத பொழுதுபோக்குகளுக்கும் இது பொருந்தும்.

மிகுதி நேரத்தை விளையாட்டு, நடைப்பயிற்சி, நீச்சல் அல்லது வீட்டுத் தோட்டம் போன்ற உடலுழைப்புடன் கூடிய பொழுது போக்கில் செலவளிக்க வேண்டும்.

No comments:

Post a Comment