Monday, April 5, 2010

முத்தம் ஒன்று கொடுத்தால்…..வைரஸ்?!

“முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ்……நீ வெட்கப்பட்டு சிரித்தால் செந்தமிழ்”, இப்படி போக்கிரி படத்துல விஜய்யும், அசினும் ஆடி-பாடும்போது நாம அதப் பார்த்து-கேட்கும்போது, “ஆஹா….. நமக்கும் இப்படி ஒரு ஃபிகர் இருந்து, அதுகூட ஆடிப்பாடினா எப்படி இருக்கும்”னு தோனலாம். ஆடிப்பாடுறதுல ஒன்னும் பிரச்சினையில்லீங்க, ஆனா பாட்டுல வர்ற மாதிரி முத்தம் கொடுக்கப் போனாதான்…..?!
அதான் (தலைப்பைப் படிச்ச) உங்களுக்கே இப்போ புரிஞ்சிருக்குமே, நான் என்ன சொல்ல வர்றேன்னு?! இதைக் கேட்டுட்டு, “இந்த மேலிருப்பானோட ஒரே ரோதனையாப் போச்சு, ஏன்யா இப்படி முத்தம்-வைரஸ் கிய்ரசுன்னு சொல்லி முட்டிக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுற மாதிரி, சம்பந்தா சம்பந்தமில்லாம (?) பீதியக் கெளப்புற? இன்னும் வாழ்க்கையை அனுபவிக்கவே இல்லய்யா” அப்படீன்னு உணர்ச்சிவசப்பட்டு பீதியடையுற நண்பர்களே, அமைதி….அமைதி?!
தலைப்புத்தான் கொஞ்சம் பீதியக்கெளப்புறமாதிரி இருக்குமே தவிர மேட்டரு சுவாரசியமான ஒன்னுதான்?! கவலைப்படாம , பதிவுச் செய்திய மேற்கொண்டு படிங்க…..
கிருமி பரப்பும் முத்தமும், ஆரோக்கியமான தாம்பத்திய உறவும்?!
"வைரஸ் முத்தம்" படம்:askmen.com
நம்மில் (முத்தப் பரிமாற்றங்கள இன்னும் அனுபவிக்காத) சில/பல பேருக்கு தோனும்(?), “ஐய்ய…..(உதட்டோட உதடு வச்சி) முத்தம் கொடுத்தா ஆரோக்கியக் கேடு வராது?! சினிமாவுல எல்லாம் இதை எப்படித்தான்  செய்யுறாங்களோ?!” அப்படீன்னு.  உங்க யூகம் கிட்டத்தட்ட  சரிதாங்க (?). இதை நான் சொல்லல, முத்தமிடுதல் பற்றிய பரிணாம காரணங்களை ஆய்வு செஞ்ச இங்கிலாந்து நாட்டு ஆய்வாளர்கள் சொல்றாங்க!
அதுமட்டுமில்லாம, (தற்போதைய காலக்கட்டத்துல) காதல்/அன்னியோன்னியத்தை வெளிப்படுத்தும் விதமாக பகிர்ந்துகொள்ளப்படும் முத்தமானது, முதலில் தோன்றியபோது காதலுக்குச் சற்றும் தொடர்பில்லாத ஒரு வித்தியாசமான காரணத்துக்குக்காகத்தான் தோன்றியிருக்கும்னு சொல்றாங்க அந்த ஆய்வாளர்கள்!
அது என்ன காரணம் தெரியுமா உங்களுக்கு? நீங்க (ஏன் நானும்கூடத்தான்) கொஞ்சமும் எதிர்பார்த்திருக்க முடியாத ஒரு வினோதமான “கிருமிகளை பரப்பும்” காரணம்தாங்க அது. “ஐய்ய…..என்னது இது, பைத்தியக்காரத்தனமா இருக்கு?! யாராவது, தாங்களே வலிய போய் கிருமியப் பரப்புவாங்களா இல்ல மத்தவங்கதான் அத அனுமதிப்பாங்களா?” இப்படியெல்லாம் நீங்க கேட்கலாம். ஆனா, கிட்டத்தட்ட உண்மை அதுதானாம். அதுமட்டுமில்லாம இத்தகைய கிருமி பரப்பும் (முத்தம் கொடுக்கும்) செயலானது ஒரு தாம்பத்திய உறவை ஆரோக்கியமானாதாக்குமாம்?!
என்னங்க, “உலக மகா குழப்பமா இருக்குதேடா யப்பா, சாமீ….எனக்கொரு உண்ம தெரிஞ்சாகனும் சாமீ”ன்னு உச்சஸ்தாயியில கத்த ஆரம்பிச்சிட்டீங்களா?! இருங்க இருங்க, உங்க குழப்பத்துக்கான விளக்கத்தோட வந்தூட்டேன்…..
முத்தமும் “காதல்” வைரசும்!
இதுல சுவாரசியம் என்னன்னு கேட்டா, முத்தம் கொடுப்பதினால பரவுகிற கிருமிக்குப் பேரு “காதல் வைரஸாம்”. அடப் பாவிகளா இப்படியெல்லாம் கூட வைரஸ் இருக்கா என்ன உலகத்துல(?) அப்படீன்றீங்களா? உண்மைதாங்க, “சைட்டோமெகாலோ வைரஸ்” (Cytomegalovirus) அப்படீன்னு ஒரு வைரஸ் இருக்கு. இதுக்கு ஆங்கிலத்துல “The Love Bug”னு பேரு. அதாங்க “காதல் கிருமி”!
ஆச்சரியமா இருக்குதுல்ல? எனக்கும்தான்! இந்த வைரஸ் சாதாரணமா மனித எச்சிலில் இருக்குமாம். அப்படி இருக்கும்போது மட்டும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படுத்தாத நல்ல(?) வைரஸாம். ஆனா, இதுவெ ஒரு பெண் கர்ப்பினியாக இருக்கும்போது அவருக்கு செலுத்தப்படுமானால் (அதாங்க முத்தப் பரிமாற்றங்களின்போது) மிகவும் கொடிய உயிர்க்கொல்லி வைரசாக மாறி பிறக்கப்போற குழந்தைகளை செவிடாக்கிவிடும்/மூளையை பாதிக்கும் அல்லது கொன்றுவிடும் அளவுக்கு ஆபாயகரமானதாம்!  யப்பா…..கேட்கவே பயங்கரமா இருக்குடா சாமீ…?!
ஆனா, இதே வைரஸ் மனித எச்சிலில் இருப்பதனால, ஒரு பெண் கர்ப்பம் தரிக்கும்முன் (முத்தப்பரிமாற்றம் போன்றவற்றால்) சிறுகச் சிறுக அந்தப் பெண்ணின் உடலில் செலுத்தப்பட்டால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியானது அந்த வைரசினைக் கொல்லும் அல்லது தடுக்கும் முறையை கற்று/ஏற்படுத்திக் கொண்டுவிடுமாம்! அதாவது, ஒரே ஆடவனை (கணவன்) கர்ப்பம் தரிப்பதற்க்கு ஆறு மாதங்களுக்கு முன் ஒரு பெண் (மனைவி) முத்தமிட்டால், காதல் கிருமியான சைட்டோமெகாலோ வைரசுக்கு எதிரான (நோய்) எதிர்ப்பு சக்தியை அப்பெண் பெற்றுவிடுகிறாள் என்கிறது ஆய்வு!
தாம்பத்திய உறவினூடே வலுப்பெறும் நோய் எதிர்ப்பு சக்தி?!
இதுல இன்னொரு கவனிக்க வேண்டிய(?) விஷயம் என்னன்னா, ஒரு தம்பதியரின் (கணவனுக்கும் மனைவிக்குமான ) தாம்பத்திய/காதல் உறவு வலுப்பெற வலுப்பெற, அதைச் சேர்ந்தாற்போல காதல் வைரசுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியும் வலுப்பெறுக்கிறதாம்! அதாவது, ஒவ்வொரு முறை முத்தப் பகிர்தலின்போதும், சைட்டோமெகாலோ வைரஸானது சிறு சிறு அளவுகளில் சம்பந்தப்பட்ட பெண்ணின் உடலினுள் சென்று நோய் எதிர்ப்பு வலுப்பெறச் செய்துகொண்டே வருவதால், ஆறு மாதங்கள் கழித்து, அதே பெண் கருத்தரிக்கும்போது (இத்தருணத்தில் மட்டும் கொடிய வைரசாக மாறும் தன்மையுள்ள) சைட்டோமெகாலோ வைரசுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி அப்பெண்ணுடன் (தாயுடன்) சேர்த்து கருவிற்க்கும் முழுமைபெற்றுவிடுகிறது. ஆக, வைரஸ் வெற்றிகரமாக அழிக்கப்பட்டு, கருவிலிருக்கும் குழந்தையும் நோயிலிருந்து பாதுகாக்கப்பட்டு விடுகிறது என்கிறது ஆய்வு!
அதனாலதான், (ஆண்கள்) தன் துணையை முத்தமிடும் பழக்கமானது, அனேகமாக தன் துணையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி, பிறக்கப்போகும் குழந்தையை வரவிருக்கும் ஒரு ஆபத்தான வைரசிடமிருந்து காப்பதன் பொருட்டாகவே  உருவாகியிருக்கக் கூடும்னு நெனைக்கிறாங்க இந்த ஆய்வினை மேற்கொண்ட இங்கிலாந்து விஞ்ஞானிகள்! ஓஹோ…..கதை அப்படிப்போகுதா?! அது சரி!
ஆக மொத்தத்துல, இதப்படிச்சதுக்கப்புறம் என்ன தோனுதுன்னா, “காதல் (முத்தம்) என்பது ஒரு உயிர்க்கொல்லி மாதிரி”ன்னு சொல்றாங்களே அது உண்மைதான் போலிருக்கு?!

No comments:

Post a Comment