மாலை நேரம்.
வெப்பம் தாங்க முடியவில்லை; வியர்த்துக் கொட்டுகிறது.
உடல் அலுப்பு வேறு; இன்று மிகுதியான வேலை.
நீங்கள் கேட்டதைக் கொண்டு வருகிறார் பணியாள்.
பீர்! அடடா, அருமையான குளிர்ச்சியான பீர்!
இந்த மாலை நேர வெப்பத்துக்கும் அலுப்புக்கும் இது கட்டாயத் தேவை.
வழக்கமான ஆர்வத்தோடு பாட்டிலைப் பார்க்கிறீர்கள்; என்ன இனிமையான அழகு!
ஆமாம், என்ன அது? பாட்டிலின் உள்ளே அடிப்பாகத்தில் என்னவோ கிடக்கிறதே!
என்ன அது?
உங்களுக்குத் தெரியவில்லை; என்னவாக இருக்கும் என்று நினைத்துக் குழம்புகிறீர்கள்.
பணியாளை அழைத்துக் கேட்கிறீர்கள். அவருக்கும் தெரியவில்லை.
மதுக்கடையின் நிருவாகத்தினருக்கும் தெரியவில்லை.
வேறொரு பீர் பாட்டிலைக் கொண்டு வருகிறார்கள்.
யாருக்கும் தெரியாத அந்தப் பொருள் என்னவாக இருக்கும்?
உங்கள் குழப்பம் தீரவில்லை; தொடர்ந்து சிந்திக்கிறீர்கள்.
குழப்பம் தேவையில்லை ஐயா.
அது என்னவாகவும் இருக்கலாம்.
உங்களைப்போன்ற ஒருவரின் கல்லீரலாகக்கூட இருக்கலாம்.
என்னவாக இருந்தால் உங்களுக்கு என்ன?
அருமையான குளிர்ச்சியான இனிய பீரைப் பருகுங்கள்; பருகி மகிழுங்கள்.
எதிர்காலத்தில் வேறொருவர் தம் பீர் பாட்டிலில் உங்கள் கல்லீரலைப் பார்க்கக்கூடும்!
பார்த்தால் பார்க்கட்டுமே!
அதனால் என்ன?
மேசையில் அருமையான குளிர்ச்சியான பீர் காத்துக்கொண்டிருக்கிறது.
நேரத்தை வீணாக்காதீர்கள் ஐயா!
- அ. நம்பி
No comments:
Post a Comment