Wednesday, April 28, 2010

ஜாக்கெட் கிழிந்ததாக அ.தி.மு.க., பெண் எம்.எல்.ஏ.,புகார்

சென்னை :  சட்டசபையில் பேச வாய்ப்பு கேட்டு அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க., கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். சபையில் இருந்து வெளியேற்றும்போது, சபைக் காவலர்கள் தங்களை தாக்கியதாக ஆண் எல்.எல்.ஏ.,க்களும், பெண் எம்.எல்.ஏ., ஒருவரின் ஜாக்கெட் கிழிந்ததாகவும் புகார் எழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சட்டசபையில் நேற்று காலை கேள்வி நேரம் துவங்கியதும், காங்கிரஸ் எம்.எல்.ஏ., விஜயகுமாரின் கேள்விக்கு அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பதில் அளிக்கத் துவங்கினார். அப்போது, அ.தி.மு.க., - ம.தி.மு.க., - மார்க்சிஸ்ட் - இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.,க்கள் எழுந்து நின்று தங்களை பேச அனுமதிக்குமாறு தொடர்ந்து குரல் எழுப்பினர்.அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள், சபாநாயகர் இருக்கை முன்பாக ஒன்று திரண்டு விலைவாசி உயர்வைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர். ம.தி.மு.க., - மார்க்சிஸ்ட் - இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.,க்களும் முன்பகுதிக்கு வந்து கோஷங்களை எழுப்பி, அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபையில் பரபரப்பு ஏற்பட்டது.இந்த கோஷங்களுக்கு மத்தியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ., விஜயகுமாரின் கேள்விக்கு அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பதில் அளித்த வண்ணம் இருந்தார்.

'நீங்களாக சபையில் இருந்து வெளியேறினால் மீண்டும் உள்ளே வரலாம். நானாக, வெளியேற்றினால் திரும்ப உள்ளே வர முடியாது' என அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களை, சபாநாயகர் எச்சரித்தார்.இதன் பிறகும் கோஷங்களை எழுப்புவதை அ.தி.மு.க.,வினர் தொடர்ந்தனர். பொள்ளாச்சி ஜெயராமன் கோஷங்களை படிக்க, அதை அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் திரும்ப கூறினர். ' கேள்வி நேரம் முடிந்ததும் உங்களுக்கு நேரம் ஒதுக்கித் தருகிறேன். சபை நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம்' என, சபாநாயகர் மீண்டும் வேண்டுகோள் விடுத்தார்.

அப்போது, நிதியமைச்சர் அன்பழகன் பேசும்போது, ' கேள்வி நேரம் முடிந்ததும், எந்தவொரு எம்.எல்.ஏ.,வோ, கட்சித் தலைவரோ தங்கள் கருத்துகளை தெரிவிக்கவும், அரசை கண்டித்துப் பேசவும் உரிமை உண்டு. கேள்வி நேரம் என்பது அவையில் உரிமை. அதை மாற்ற முடியாது. இப்போது எழுந்து நின்று குரல் எழுப்புவது அவை நடவடிக்கைகளை தடுப்பதாக பொருள்படும்' என்றார்.

'சபை நடவடிக்கைகளை பாதிக்கும் வகையில் செயல்படும் இவர்களை வெளியேற்ற வேண்டும்' என, அமைச்சர் துரைமுருகன் கேட்டுக் கொண்டார். இதைத் தொடர்ந்து, அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க., கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ.,க்களை வெளியேற்றுமாறு சபாநாயகர் ஆவுடையப்பன் உத்தரவிட்டார்.எம்.எல்.ஏ.,க்களை வெளியேற்றும் பணியில் சபைக்காவலர்கள் ஈடுபட்டனர். அப்போது, அ.தி.மு.க., எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமனின் கையைப் பிடித்து இழுத்து வெளியேற்ற, காவலர் ஒருவர் முயற்சித்தார். இதை தடுத்த அ.தி.மு.க., எம்.எல்.ஏ., செ.ம.வேலுச்சாமி, காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.இருவரையும் சபைக்காவலர்கள், 'நகர்த்தி' வெளியேற்றினர். அதே போல், அ.தி.மு.க., எம்.எல்.ஏ., சி.வி. சண்முகத்தை வெளியேற்றும்போது, தள்ளுமுள்ளு நடந்தது. அவரது ஒரு செருப்பு சபைக்குள் மாட்டிக் கொண்ட நிலையில், ஒற்றை செருப்புடன் சபையில் இருந்து வெளியேறினார். பின், அதையும் சபைக்கு வெளியே விட்டு விட்டு வெளிநடப்பில் பங்கேற்றார்.

சபைக்கு வெளியே எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், கொறடா செங்கோட்டையன் ஆகியோர் கூறும்போது, 'முக்கியப் பிரச்னைகளின் போது, கேள்வி நேரத்தை ஒத்தி வைத்து பேச சபையில் வாய்ப்பு கொடுத்துள்ளனர். விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து இன்று, 'பந்த்' நடக்கும் நிலையில், அது பற்றி சட்டசபையில் பேச அனுமதி மறுக்கப்பட்டது.தொடர்ந்து பேச முற்பட்டபோது, எங்களை வெளியேற்றியுள்ளனர். நாங்களாக வெளியேறும்முன், சபைக் காவலர்களை வைத்து எங்களை தர, தர என இழுத்து வெளியேற்றினர். இது போன்ற சம்பவத்தை சபாநாயகரும் வேடிக்கை பார்க்கிறார்' என்றனர்.

எம்.எல்.ஏ.,க்கள் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் சி.வி. சண்முகம் ஆகியோரை சபைக் காவலர்கள் வயிற்றில் குத்தியதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது.

பெண் எம்.எல்.ஏ.,க்கள் புகார்: அ.தி.மு.க., பெண் எம்.எல்.ஏ., பதர் சயீது கூறும்போது, ''நாங்கள் வெளியேற வந்தபோது, வலுக்கட்டாயமாக இழுத்ததோடு, சபைக் காவலர்கள் என் வயிற்றில் குத்தினர். நான் வெளியில் போகவில்லை என்றால், தூக்கித்தான் செல்ல வேண்டும். அடிக்க இவர்களுக்கு யார் உரிமை கொடுத்தது' என்றார். இளமதி சுப்பிரமணியம் எம்.எல்.ஏ., கூறும்போது, 'பெண் காவலர்கள் சேலையை பிடித்து இழுத்தனர். இதனால், எனது ஜாக்கெட் கிழிந்து விட்டது' என்றார்.

No comments:

Post a Comment