Monday, April 19, 2010

முதுமைக்கு உதவி புரியாத முதுமையின் (கலைஞரின்) ஆட்சி பாரீர்

தமிழகத்தின் கடந்த கால செயற்பாடுகள் தமிழ் உறவுகளை நோகடிப்பதாக அமைந்துள்ளன. தமிழ்-தமிழ் அதுவே என் மூச்சு என்று கூறும் தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் ஆட்சிக்காலத்திலேயே உலகெங்கிலும் தமிழ் மக்கள் அச்சுறுத்தலுக்கும் அழிவுக்கும் ஆட்பட்டனர். பேசவும், எழுதவும் தெரியும் என்பதற்காக அதுவே தமிழ்ப் பற்றும், பாசமுமாகி விடாதென்பதற்கு கலைஞர் கருணாநிதி நல்ல உதாரணம்.
அலங்கார வார்த்தைகளால் தமிழ் மக்களின் உரிமைகள் வென்றெடுக்கப்பட முடியாது. உள்ளும் புறமும் தமிழ் உணர்வு பாயவேண்டும். அந்த உணர்வு தமிழக முதல்வராக இருந்த எம்.ஜீ.இராமச்சந்திரனிடம் இருந்ததை எவரும் மறுக்க மாட்டார்கள். குறிப்பாக ஈழத்தமிழர்கள் மீது எம்.ஜீ.இராமச்சந்திரன் அளவு கடந்த அன்பும் இரக்கமும் கொண்டிருந்தார்.
ஆனால் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி ஈழத்தமிழர் மீது பற்றுக் கொண்டவர் போல பாசாங்கு செய்தார்.அவரின் உண்ணாவிரத நாடகம் இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. இதுவாயினும் தன் குடும்பத்திடம் தமிழகத்தின் அரசியல் தலைமையை ஒப்படைக்கும் அவரின் அயராத முயற்சி, அதற்காக மத்திய அரசுடன் சேர்ந்து தாளம் போடும் அவரின் கபடத்தனம் என அத்தனையும் சேர்ந்து பல்லாயிரக் கணக்கான ஈழத்தமிழர்களை வன்னி யுத்தத்தில் பலிகொடுக்க வேண்டியாயிற்று.
வன்னியில் நடந்த யுத்தத்தின் போது தமிழகம்- தமிழக முதல்வர் கொதித்திருந்தால் இந்த அளவு அழிவுகள் ஏற்பட்டிருக்கமாட்டா.என்ன செய்வது! எங்கள் கெடுகாலம் தமிழ கத்தின் ஆட்சி பீடத்தில் வார்த்தைஜால நடிகர் மு.கருணாநிதி இருந்துவிட்டார். அதனால் அத்தனை துன்பங்களையும் தமிழ் மக்கள் அனுபவித்தனர். அனுபவித்து வருகின்றனர்.
நிலைமை இதுவாக இருக்கும் போது, மலேசியாவில் இருந்து தமிழகத்திற்குச் சென்ற விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் தாயார் திருமதி பார்வதியம்மாவை சென்னை விமானநிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பி தமிழகம் மீண்டுமொரு கோழைத் தனமான தவறை இழைத்துவிட்டது. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்காக அவரின் தாயாரை திருப்பி அனுப்புவது என்பது தமிழகத்தின் புத்தியாக இருக்க முடியுமேயன்றி உலகில் வேறெங்கும் இந்த அநீதி இடம்பெறமாட்டாது.
முதுமை நிறைந்த பார்வதியம்மாவை திருப்பி அனுப்பிய, தள்ளாடும் முதுமை கொண்ட தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி இதற்கு கவிதை பாடியா? கவலை கொள்வார். அட! நெஞ்சுக்கு நீதி எழுதியபின்பாவது நெஞ்சம் இரங்க வேண்டாம். எல்லாம் பொய், எல்லாம் வேடம், எல்லாம் பாசாங்கு இதன் ஒட்டுமொத்த வடிவம் கலைஞர் கருணாநிதி என்பதை இந்தியாவை நம்பி-பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று பார்வதியம்மாவை திருப்பி அனுப்பியமை கண்டும் மெளனமாக இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உணர்ந்து கொள்வதாக.

No comments:

Post a Comment