Tuesday, April 13, 2010

படுக்கையில் இருந்தபடியே பொது அறிவிப்பு: கிராமத்து முதியவர் சேவை

பிகானிர் :  விபத்து ஒன்றில் ஊனமாகி படுத்த படுக்கையாகி விட்ட முதியவர், ஊர், உலக விஷயங்களை மைக் மூலம் கிராம மக்களுக்கு தெரிவித்து வருகிறார்.ராஜஸ்தான் மாநிலம் பிகானிர் மாவட்டம் சுய் என்ற கிராமத்தை சேர்ந்தவர் சிசுபால சிங்(58). கடந்த 89ம் ஆண்டு நடந்த விபத்தில் முதுகெலும்பு உடைந்து, 20 ஆண்டுகளாக படுக்கையில் கிடக்கிறார். இவர் படுக்கையில் கிடப்பதை கேள்விப்பட்ட சமூக சேவகர் சஞ்சய் கோஷ் என்பவர், சிசுபால சிங்குக்கு மைக் மற்றும் ஸ்பீக்கர் உபகரணங்களை வாங்கி தந்தார்.தினமும் பத்திரிகைகளை படிக்கும் வழக்கம் கொண்ட சிசுபால், 'டிவி' மற்றும் ரேடியோ செய்திகளையும் சேகரித்து, அதை மைக் மூலம் தனது கிராம மக்களுக்கு அறிவிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இவரது அறிவிப்பு மூலம், படிப்பறிவு இல்லாத கிராம மக்கள் உலக விஷயங்களை தெரிந்து கொள்கின்றனர்.


வானிலை அறிக்கை, விவசாய பொருட்களின் விலை, மேலும் இக்கிராம மக்களுக்கு தேவையான செய்திகளையும் இவர் படுக்கையில் இருந்தபடியே மைக் மூலம் தெரிவித்து வருகிறார்.அதிகாலையில் விழித்து கொள்ளும் சிசுபால், ஆன்மிக சிந்தனை அறிவித்து, அனைவரையும் பணிக்கு செல்லும் படி கூறுவார். போதை, புகை பழக்கங்களை ஒழிக்கும் படியும், இந்த பழக்கத்தால் விளையும் தீமைகளையும் எடுத்துக் கூறுவார்.ரேஷன் கடையில் தினசரி போடப்படும் பொருட்களின் விவரத்தையும், கிராம பஞ்சாயத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும், தகவல் தெரிவிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

No comments:

Post a Comment