Tuesday, April 27, 2010

IPL திறந்து வைக்கும் ஜன்னல்களும் திறவா கதவுகளும்




சஞ்சய் மஞ்சிரேக்கர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இப்படி கூறுகிறார்: “முப்பத்திரண்டு வயதில் நான் ஏன் ஓய்வு பெற்றேன் என்று பலரும் கேட்டார்கள். ரஞ்சிப் போட்டிகளில் காலியான மைதானத்தில் கடுமையாக உழைத்து சதம் அடிக்க அதற்கு மேலும் நான் விரும்ப வில்லை என்பதே காரணம்”. அவர் மேலும் கூறுகிறார்: “என் காலத்தில் ஒரு கிரிக்கெட் ஆட்டக்காரர் நட்சத்திர அந்தஸ்து பெற நாலு பருவங்களில் ஏனும் ஆயிரம் ஓட்டங்கள் தொடர்ந்து குவிக்க வேண்டும். அப்போது தான் அவரது பெயரே மீடியாவில், ஆர்வலர்கள் மற்றும் தேர்வாளர்கள் இடையே லேசாக அடிபடத் தொடங்கும். பின்னர் அதிர்ஷடமிருந்தால் தேசிய அணிக்காக சில ஓட்டங்கள் ஆடினால் ஒரு குட்டி நட்சத்திரமாக சில காலம் இருக்கலாம்”. ஐ.பி.எல்லின் மகத்துவத்தை சஞ்சய் மற்றொரு உதாரணம் கொண்டு இப்படி விளக்குகிறார். ஐ.பி.எல்லை ஆரம்ப தொண்ணூறுகளின் டி.வி ஒளிபரப்போடு ஒப்பிடுகிறார்: “பாகிஸ்தானில் சிறப்பாக ஆடி ஓட்டங்கள் குவித்தேன். அந்த டெஸ்டு தொடரை நேரடியாக ஒளிபரப்ப யாரும் முன்வர இல்லை. இதனால் எனக்கு எந்த அங்கீகாரமும் கிடைக்கவில்லை. அடுத்த டெஸ்டு தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்தது. நேரடியாக டி.வியில் ஒளிபரப்பினார்கள். நம்ப மாட்டீர்கள். அந்த தொடரில் படுமோசமாக ஆடி சொற்ப ஓட்டங்களே எடுத்தேன். ஆனால் ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியா திரும்பிய போது நான் நட்சத்திரம் ஆகி விட்டேன். பார்த்த இடத்தில் எல்லாம் மக்கள் என்னை கண்டுகொண்டார்கள்; அங்கீகரித்தார்கள். கிரிக்கெட் அல்ல டீ.வி என்னை நட்சத்திரமாக்கியது”. அடுத்து இந்த தலைமுறையின் ஐ.பி.எல் நட்சத்திரமான ஜார்கண்ட் மட்டையாளர் சவுரப் திவாரி சொல்வதை கவனியுங்கள்: “ரஞ்சி ஆட்டங்களில் நான் என்னதான் திரும்பத் திரும்ப சிறப்பாக சதம் அடித்தாலும் அதிகபட்சமாய் பத்திரிகை கடைசி தாளில் சிறுகுறிப்பு எழுதுவார்கள். ஆனால் நான் இந்தியா முழுக்க பிரபலமாக ஐ.பி.எல்லில் இருபது ரன்கள் எடுத்தாலே போதும்.” ஐ.பி.எல் இளைய வீரர்களுக்கு அங்கீகாரம் தருவது உண்மைதான். ஆனால் சிறந்த இளந்திறமைகளை கண்டெடுக்க உதவுகிறதா? இதுதான் மேலும் முக்கியமான கேள்வி. Cricinfo பேட்டியில் ஹர்ஷா போக்ளே இந்த வலுவான ஐயத்தை எழுப்புகிறார் “சென்னை சூப்பர் கிங்ஸின் கோனி முதல் ஐ.பி.எல்லின் பெரும் கண்டுபிடிப்பாக கருதப்பட்டார். பிறகு இரண்டாவது, மூன்றாவது ஐ.பி.எல்களில் அவர் காணாமல் போனார். ராஜஸ்தான் ராயல்சின் அஸ்னோட்கருக்கும் இதுவே நடந்தது. ஐ.பி.எல்லில் நாம் கண்டடைந்ததாய் கொண்டாடி இப்படி தற்காலிக பெருமிதங்கள் அடையவா ஐ.பி.எல்?” இதற்கு பெங்களூர் ராயல் செலஞ்சர்சின் ராபின் உத்தப்பா இப்படி பதிலளிக்கிறார்: “ஐ.பி.எல் ஒரு இளைய வீரருக்கு புகழ்வெளிச்சத்தை நோக்கி ஒரு ஜன்னலை திறந்து கொடுக்கிறது. அவ்வளவே. அதனை ஒரு கதவாக மாற்றி சர்வதேச அளவில் ஒருநாள் அல்லது டெஸ்டு நட்சத்திரமாக உயர்வதற்கு தன்னை மேம்படுத்துவது அந்த குறிப்பிட்ட வீரரின் பொறுப்பே. ஜன்னலில் மட்டுமே அமர்ந்து புகழ் காய்வது போதும் என்றால் வாழ்வெல்லாம் அதனையும் கூட ஒருவர் செய்யலாம்”. இதுவரையிலான ஐ.பி.எல்களில் நம் இளைஞர்களின் சாதனை வரலாறு இந்த பதிலுக்குள் சுருங்கி விடுவது சற்றே கசப்பான நிஜம். 2010 ஐ.பி.எல்லில் திறமை, பொறுமை, மனஉறுதி கொண்ட எத்தனை பேர் நம் கவனத்தை கவர்ந்துள்ளார்கள்? சிறிய பட்டியல் இது. ஐ.பி.எல்லில் இவர்கள் சேகரித்த ஓட்டங்களோ வீழ்த்திய விக்கெட்டுகள் மட்டுமன்றி இயல்பான திறமை மற்றும் மனப்பக்குவத்தையுமே முக்கியமான அளவுகோலாக கொண்டுள்ளேன். இவர்களும் எதிர்காலத்தில் காணாமல் போகலாம் என்று அரைசிட்டிகை உப்பையும் இந்த உவப்பான கண்டுபிடிப்பு பட்டியலுடன் சேர்த்துக் கொள்ள பரிந்துரைக்கிறேன். இரண்டாக இந்த பட்டியலை வகைப்படுத்தலாம். நிலைத்து சோபித்தவர்கள். வந்த வேகத்தில் சற்றே கவனிக்கப்பட்டு மறைந்தவர்கள்..

பட்டியல் 1

ராபின் உத்தப்பா

















இந்த வருட ஐ.பி.எல்லின் மிகச்சிறந்த தருணம் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான பெங்களூர் ராயல் செலஞ்சர்ஸ் ஆட்டத்தில் வெளிப்பட்டது. முதலில் மட்டையாடிய பெங்களூர் அணி ஓட்டசேகரிப்பில் கியர் விழாமல் விமர்சகர்கள், வர்ணனையாளர்கள் மற்றும் பார்வையாள ஆதரவாளர்களிடம் இருந்து ஹாரன் மற்றும் வசை ஒலிகளை கேட்டுக் கொண்டிருந்தது. மூன்று விக்கெட்டுகள் இழந்த நிலையில் இங்கிலாந்தின் இயன் மோர்கன் அடுத்து ஆட வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. மோர்கன் இங்கிலாந்தின் அடுத்த கெவின் பீட்டர்சனாக வர்ணிக்கப்படுபவர். 5 சர்வதேச T20 போட்டிகளில் அவரது சராசரி 59. ஸ்டிரைக் ரேட் 150. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இரு ஆட்டங்களை தனியொருவராக வென்றவர். இவருக்கு அடுத்து பெங்களூரின் மட்டை ஆட்டவரிசையில் இந்திய ஒருநாள் அணியில் நிரந்தர இடம் பெற்றுவிட்ட விராத் கோலி. இவருக்கும் அடுத்து தான் உத்தப்பா. உத்தப்பா இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டு இரு வருடங்களாகின்றன. இரண்டாவது ஐ.பி.எல்லில் அவரது ஆட்டத்தகுதி தரை தட்டி விட்டிருந்தது. 2009-ஐ.பி.எல்லின் இறுதி ஆட்டத்தில் பெங்களூர் சொற்ப ஓட்ட வித்தியாசத்தில் தோற்க உத்தப்பாவின் பரிதாபமான ஆட்டநிலையும் ஒரு காரணம். அடுத்து, சமீப ரஞ்சி தொடரில் அவரது ஆட்டநிலை மட்டுமல்ல மன-உறுதியும் சேதமுற்றிருந்தது. கர்நாடகாவின் தலைவராக ஆடிய உத்தப்பா மிகக் கோழைத்தனமாக நடந்து கொண்டார். மும்பைக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் அகார்க்கரின் வேகப்பந்துகளை சந்திக்க தயங்கி அவர் தனது வழக்கமான துவக்க நிலையில் ஆடாமல் வெகுவாக இறங்கி ஐந்தில் வந்தார். அப்போதும் அகார்க்கரிடமே விக்கெட்டை இழந்தார். இந்த ஐ.பி.எல்லிலும் சதா தலையை தொங்கப் போட்டு உற்சாகமின்றியே தெரிந்தார். ஆனால் இந்த குறிப்பிட்ட ஆட்ட கட்டத்தினோடு அனைத்தும் மாறிப் போனது. மோர்கன் மற்றும் கோலிக்கு பதிலாக உத்தப்பாவை களமிறக்கினார் அணித்தலைவர் கும்பிளே. இம்முடிவு வர்ணனையாளர்களிடம் கடுமையான கண்டனத்தை ஏற்படுத்தியது. சற்றும் எதிர்பாராமல் ரோபின் அடித்தாட ஆரம்பிக்க சட்டென்று தன் மேம்பட்ட ஆட்டநிலையை மீட்டெடுத்தார். 38 பந்துகளில் 68 விளாசி ஆட்டத்தை வென்றார். அப்போதில் இருந்து ஐ.பி.எல்லின் கடைசி ஆட்டம் வரை உத்தப்பா தான் பெங்களூர் அணியின் நட்சத்திர மட்டையாளர். மோர்கனும் கொலியும் கடைசி வரை ஒரு அரைசதம் கூட எடுக்கவில்லை. இங்கு இரண்டு அவதானிப்புகள். முடிவுகள் எடுப்பதிலும், சூழலுக்கு ஏற்றபடி நடந்து கொள்வதிலும் கும்பிளேவின் டைமிங் பிரபலமானது. கடந்த ஆஸி பயணத்தின் போது ”only one team played in the spirit of the game” என்று அவர் சொன்னது மொத்த தொடரின் வரலாற்றையும் மாற்றி அமைத்தது. அதே போன்றே மோசமான ஆட்டதகுதி காரணமாய் நீக்கப்பட்டிருந்த சேவாகை அத்தொடருக்காக முழுக்க தன் உள்ளுணர்வை நம்பி தேர்வாளர்களிடம் போராடி அணிக்குள் கொண்டு வந்தார். இன்று சேவாக் விஸ்டன் கிரிக்கெட்டராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு கும்பிளேவின் அம்முடிவும் ஒரு முக்கிய காரணம். உத்தப்பாவை முன்னதாக இங்கு கும்பிளே களமிறக்கியதும் இப்படி தன் உள்ளுணர்வை முழுக்க நம்பியே. இதனோடு உத்தப்பாவை விக்கெட் கீப்பராக பயன்படுத்தியதும் சிறப்பான பலனை கொடுத்தது. முன்னணி கீப்பர்களுக்கு இணையாக பங்காற்றினார் உத்தப்பா. அடுத்து, வெற்றிக்கு உழைப்பு, திறமை, பக்குவம் மட்டுமல்ல வெளியில் இருந்து கிடைக்கும் சிறு ஊக்கம் மற்றும் அதிர்ஷ்டக் கீற்றும் எப்படி முக்கியமாக உள்ளன எனப்தற்கு இந்த திருப்புமுனை ஒரு நல்ல உதாரணம்.

சவுரப் திவாரி



20 வயது திவாரி மகேந்திர சிங் தோனியின் மாநிலமான் ஜார்கண்டின் தற்போதைய அணித்தலைவர். உள்ளூர் போட்டிகளில் 50 சராசரியுடன் 19 ஆட்டங்களில் 5 சதங்கள் அடித்துள்ளார். உள்ளூர் ஒருநாள் ஆட்டங்களில் இவரது ஸ்டிரைக் ரேட் 89.08. T20 ஆட்டங்களில் 133.09. மும்பை இண்டியன்ஸ் அணிக்காக சச்சினால் கண்டடையப்பட்ட சவுரப் திவாரி இந்த ஐ.பி.எல்லில் மும்பை அணியின் பெரும்பாலான வெற்றிகளில் முக்கிய பங்காற்றி உள்ளார். திவாரியிடம் கவனம் கவரும் பண்புகள் இரண்டு. ஆட்டச்சூழல் தன்னை பாதிக்க அவர் அனுமதிப்பதில்லை. ஆட்டச்சூழலை கணித்து அதற்கு ஏற்றாற் போல் ஆடுகிறார். சமகால இந்திய மட்டையாளர்களில் மிக வலுவாகவும் பிசிறின்றியும் பந்தை நெடுந்தொலைவு அடிக்கக் கூடியவர்களில் திவாரி முன்னணியில் இருக்கிறார். தோனியின் ஆட்டமுறையை சற்றே நினைவுபடுத்தும் திவாரி அவரைப் போன்றே நீண்ட தலைமயிரும், உடல்மொழியும் கொண்டுள்ளார். இந்த ஒப்பீடு உருவாக்கும் அழுத்தம் தன்னை பாதிக்காமல் அவர் பார்த்துக் கொள்ள வேண்டும். ஐ.பி.எல் 2010-இன் சிறந்த 23 வயதுக்கு கீழான ஆட்டக்காரருக்கான விருதை திவாரி வென்றுள்ளார்.

அம்பத்தி ராயுடு



2010 ஐ.பி.எல்லில் மும்பை அணியின் மத்திய வரிசை மட்டையாட்டத்தை வழிநடத்தியது சவுரப் திவாரியுடன் சேர்ந்து அப்மத்தி ராயுடுவே. இவர் விக்கெட் கீப்பராகவும் மிக சிறப்பாக செயல்பட்டதால் மேலும் சில ஆல்ரவுண்டர்களை அணியில் நுழைக்க அணித்தலைவர் சச்சினால் முடிந்தது. ஒரு ஆட்டத்தில் 4 வெளிநாட்டு வீரர்களுக்கு மட்டுமே அனுமதி என்பதால் சச்சின் திவாரி, ராயுடு போன்ற இந்திய இளைஞர்களிடம் மட்டையாட்ட பொறுப்பை ஒப்படைத்து விட்டு பந்து வீச்சுக்கு பெரும்பாலும் மலிங்கா, பெர்ணாண்டஸ், பொலார்டு போன்ற மூன்று வெளியூர் வீச்சாளர்களை பயன்படுத்தினார். இந்த திட்டவரைவுதான் மும்பையின் தொடர்ச்சியான வெற்றிகளுக்கு அடித்தளம். அம்பத்தி ராயுடுவின் ஆட்டவாழ்வு பெரும் எதிர்பார்ப்புகளுடன் ஆரம்பித்தது. 19-வயதினருக்கு கீழான ஆட்டமொன்றில் இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் ஆட்டத்தில் ராயுடு 177 அடிக்க அடுத்த டெண்டுல்கராக விமர்சகர்கள் கையில் மகுடத்துடன் அவரை வரவேற்றனர். பிறகு ராயுடு சந்தித்தது எல்லாம் வீழ்ச்சிகள் தாம். சொந்த உள்ளூர் அணியான ஹைதராபாதின் கிரிக்கெட் நிர்வாக அதிகாரிகளுடன் மோதி ஆந்திரா அணிக்கு சென்றார். பிறகு அங்கும் நிலைக்காமல் ஹைதிராபாதிற்கு திரும்பி அங்கு அர்ஜுன் யாதவ் எனும் சகவீரருடன் ஸ்டெம்புகளை பறித்து மோதிக் கொண்டார். பிறகு ஐ.சி.எல் ஆட்டத்தொடர் அறிவிக்கப்பட ஹைதராபாத் அணியில் இருந்து கொத்தாக வெளியேறி பி.சி.சி.ஐயால் தடை செய்யப்பட்ட ஏழு பேர்களில் ராயுடுவும் ஒருவர். மூன்றாவது ஐ.பி.எல்லுக்கு முன்னர் ஐ.சி.எல் அமைப்பு கலைக்கப்பட பி.சி.சி.ஐ ஐ.சி.எல் கலக ஆட்டக்காரர்களுக்கு மன்னிப்பு வழங்கி திரும்ப ஏற்றுக் கொண்டது. அவர்களில் சிலர் ஐ.பி.எல் அணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர். ஐ.பி.எல் தேர்வுக்கு ஐ.சி.எல்லில் இவர்களின் ஆடின ஆட்டமே அளவுகோலாக இருந்தது ஒரு நகைமுரண். சென்னை அணிக்கு பதானி, மும்பைக்கு சதீஷ் மற்றும் ராயுடு, மற்றும் ராஜஸ்தான் அணிக்கு ஜுன்ஜுன்வாலா ஆகியோர் வாங்கப்பட்டனர். அறிமுகமாகி 8 வருடங்களுக்கு பின் ஏறத்தாழ அனைவராலும் மறக்கப்பட்டு விட்ட நிலையில் அம்பத்தி ராயுடு நிகழ்த்திய மறுவருகை ஒரு கதைப்பாடல் நாயகனுக்கு உரியது.





அஷ்வின்

ஹர்பஜனுடன் ஒப்பிடுகையில் சராசரியாக தெரிந்தாலும் அஷ்வினின் திறமைகள் வேறுமாதிரியானவை. அவர் சம்பிரதாய சுழலர் அல்ல. சற்று வேகமாக நேராக சிக்கனமாக வீசக்கூடியவர். தூஸ்ரா, டென்னிஸ் பால், ஆர்ம் பால் உள்ளிட்ட பல வேறுபாடுகளை பந்து வீச்சில் கொண்டுள்ள அஷ்வின் கடுமையான நெருக்கடிகளின் போது அணித்தலைவரின் வலது கையாக செயல்படக் கூடியவர். மற்றொரு வலு அவர் பந்து வீச்சில் பெறும் பவுன்ஸ். ஓரளவுக்கு நல்ல மட்டையாளரும் கூட. பலவீனம் களத்தடுப்பு. அஷ்வினை பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் புறக்கணிக்க முடியாது. இந்திய உள்ளூர் ஆட்டங்களின், தற்போது ஐ.பி.எல்லின், கெ.எஸ் ரவிக்குமார் இவரே.

முரளி விஜய்

இந்த வருட ஐ.பி.எல்லில் விஜய் தன்னை ஒரு T20 மட்டையாளராக சுயகண்டுபிடிப்பு செய்து கொண்டார் எனலாம். குறிப்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான அவரது சதம் மிகச்சிறந்த T20 ஸ்கோர்களில் ஒன்று. விஜய்யின் கால்பக்க ஆட்டம் லக்‌ஷ்மணை நினைவுறுத்துபவை. கால்பக்கமாய் பந்தை கோரியடிக்கும் பிக்-அப் ஷாட்டுகளைத் தான் T20 அதிரடி ஓட்டங்களுக்கு நம்பி உள்ளார். வரும் T20 உலகக் கோப்பையில் விஜய்யின் ஆட்டம் உன்னிப்பாக கவனிக்கப்படும். அவரது ஒரே பலவீனம் பின்னங்காலில் குறை நீளத்தில் தோளுக்கு குறுக்கே வீசப்படும் பந்து. இந்த குறையை அவர் மீண்டு வருவாரா என்பது இந்திய கிரிக்கெட்டின் எதிர்கால சுவாரஸ்யங்களில் ஒன்றாக இருக்கும்.

ஸ்ரீகாந்த் அனுருத்தா

அனிருத்தா தற்போதைய கிரிக்கெட் தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்தின் மகன். அதிரடி மட்டையாளர். கடந்த உள்ளூர் செலஞ்சர் தொடரில் அனிருத்தாவின் ஆட்டம் பொருட்படுத்தக் கூடியதாக இருந்தது. முதல் கீழ்மத்திய வரிசையில் ஆடின அனிருத்தா நான் கவனித்த எல்லா ஆட்டங்களிலும் நெருக்கடி நிலைகளில் தான் ஆட்டத்துக்குள் நுழைந்தார். ஆட்ட அழுத்தத்தை பஞ்சு போல் உள்வாங்கினார். பொறுமையாக திட்டமிடலுடன் தன்னம்பிக்கையுடன் ஆடி மிக முக்கியமான ஓட்டங்களை சேர்த்தார். சேலஞ்சர் தொடரின் மற்றொரு ஆட்டத்தில் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய போதும் அவர் சற்று பதற்றத்தை காட்டவில்லை. இந்த வருட ஐ.பி.எல்லில் அரை இறுதி மற்றும் இறுதி ஆட்டங்களில் மட்டுமே ஆடின அவர் கடைசி ஓவர்களில் மிக அத்தியாவசிமாக அதிரடி ஓட்டங்கள் தேவைப்படும் போது மிகுந்த தன்னம்பிக்கையுடன் ஆடினார். சாமர்த்தியம், மனப்பக்குவம் மற்றும் பந்தை வெகுதூரம் அடிப்பதற்கான இயல்பான திறமையும் கொண்ட அனிருத்தா தோற்றத்தில் இன்சமாமை நினைவுபடுத்தினாலும் ஆட்டத்தில் இங்கிலாந்தின் கோலிங்வுட்டுடன் ஒப்பிடத்தக்கவர். எதிர்கால இந்திய கிரிக்கெட்டில் இவருக்கு ஒரு சிறு பங்கிருக்கும்.

அபிஷேக் ஜுன்ஜுன்வாலா



அபிஷேக் வங்க அணியை சேர்ந்தவர். ராஜஸ்தான் ராயல்சுக்காக மத்திய வரிசையில் ஆடுகிறார். குள்ளமான மெலிதான் தோற்றம். நேர்த்தியான தொழில்நுட்பமும், மரபான ஆட்டப்பொறுமையும் கொண்ட இவர் பந்தை விரட்டும் இயல்பான திறமையும் கொண்டவர். ஜுன்ஜுன்வாலாவிடம் அந்த தெறிப்பு உள்ளது.










பட்டியல் 2

உமேஷ் யாதவ்



விதர்பாவை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர். தில்லி டேர் டெவில்சுக்காக இந்த பருவத்தில் முதல் முறையாக ஆடினார். நீண்ட தயாரிப்பு ஓட்டமோ மூச்சு வாங்கலோ இன்றி 145 கிலோமீட்டர் வேகத்தை லகுவாக தொடுகிறார். ஐந்தே உள்ளூர் ஆட்டங்கள் ஆடியுள்ள உமேஷ் இன்னும் முதிரவில்லை. திசை மற்றும் நீளத்தில் கட்டுப்பாடு இல்லை. ஆனாலும் இவருக்கு மிக இயல்பாக கைவரும் வேகம் அனைத்து தரப்பிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. வரும் உள்ளூர் ஆட்ட பருவத்தில் உமேஷ் உன்னிப்பாக கவனிக்கப்படுவார்.










கேதார் மகராஜ் ஜாதவ்



கேதார் மகாராஷ்டிராவை சேர்ந்தவர். தில்லி டேர் டெவில்சுக்காக இந்த பருவத்தில் சில ஆட்டங்கள் ஆடினார். பெங்களூர் அணிக்கு எதிராக 29 பந்துகளில் இவர் அடித்த அரை சதத்தில் நேராக அடித்த டென்னிஸ் ஷாட்கள் பாதி மொயின்கானையும் மீதி தோனியையும் ஞாபகப்படுத்தின. இந்த வாமன வடிவத்தில் இருந்து கிளம்பி பந்தை பறக்க செய்யும் ஆற்றல் அடிக்கடி ஆச்சரியப்படுத்தும் ஒன்று.














சரப்ஜித் லட்டா



லட்டா கும்பிளே பாணியில் வேகமாக கால்-சுழல்பந்து வீசுபவர். கும்பிளேவைப் போன்றே கராறான திசையும் நீளமும் இவரது சிறப்புகள். நெருக்கடியான ஆட்டசூழலிலும் தீரமாக ஆடுகிறார். லட்டாவிடம் கும்பிளேவின் பிளைட், லூப் போன்றவை கிடையாது. ஒருவேளை எதிர்காலத்தில் உருவாக்கலாம். இவ்வருட ஐ.பி.எல்லில் பாதியில் காணாமல் போனாலும் ஒரு தெறிப்பு இவரிடமும் தென்படுகிறது.

No comments:

Post a Comment