காஞ்சிபுரம் : தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நேற்று முடிந்ததையடுத்து, 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று துவங்கின. காஞ்சிபுரம் மற்றும் நெல்லையில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் 10ம் வகுப்பு வினாத்தாள் மாற்றிக் கொடுக்கப்பட்டதால் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். காஞ்சிபுரம் எஸ்.எஸ்.கே.வி., மெட்ரிக் பள்ளியில் மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்வு எழுதினர். இந்தப் பள்ளியின் ஒரு அறையில் சிந்தாரிவாக்கம் பகுதியை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் 10 பேரும் , எஸ்.எஸ்.கே.வி., மெட்ரிக் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் 10 பேரும் தேர்வு எழுதினர். தமிழ் முதல் தாள் தேர்வு நடந்தது. தேர்வு மேற்பார்வையாளர் மாணவர்களுக்கு வினாத் தாளை மாற்றி கொடுத்துள்ளார். தமிழ் தேர்வு என்பதால் மாணவர்களும் வினாத்தாள் மாறியது தெரியாமலேயே தேர்வை எழுதி முடித்துள்ளனர். பின்பு வெளியில் வந்த போது வினாத்தாள் மாறிய விவகாரம் தெரிய வந்தது. இது குறித்து மாவட்ட கல்வி அலுவலகத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
இதே போல் நெல்லை மாவட்ட பள்ளியிலும் 10ம் வகுப்பு வினாத்தாள் மாற்றத்தால் குழப்பம் ஏற்பட்டது. நெல்லை மாவட்டம் சாரா டக்கர் பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வு நடந்தது. பள்ளியில் ஒரு அறையில் இருந்த மாணவிகளில் 10 பேர் மெட்ரிக் மாணவிகள், 10 பேர் ஸ்டேட் போர்டு மாணவிகள். இவர்களுக்கான வினாத்தாள் மாற்றிக் கொடுக்கப்பட்டது. தேர்வு முடிந்து மாணவிகள் வெளியில் வந்து சக மாணவிகளுடன் பேசிய போது தான் குளறுபடி நடந்தது தெரிந்தது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியர்களிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. விடைத்தாள்கள் அனைத்தும் சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளன. தேர்வின் முதல் நாளிலேயே இம்மாதிரியான குழப்பம் ஏற்பட்டதால் மாணவ, மாணவிகள் தவிப்புக்குள்ளாகினர்.
10ம் வகுப்பு தேர்வை, 10 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். மொத்தம் 2,791 மையங்களில் மாணவர்கள் தேர்வெழுதுகின்றனர். 'ரெகுலர்' மாணவர்கள் இல்லாமல், தனித்தேர்வு மூலம் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், 10ம் வகுப்பு தேர்வை எழுதுகின்றனர். எஸ்.எஸ்.எல்.சி., - ஓரியண்டல் தேர்வுகள், ஏப்ரல் 7ம் தேதி வரையிலும், மற்ற இரண்டு போர்டு தேர்வுகள், ஏப்ரல் 9ம் தேதி வரையிலும் நடக்கின்றன.
No comments:
Post a Comment