Thursday, March 4, 2010

பாமர மக்களை ஏமாற்றுவோரை அரசு வேடிக்கை பார்க்காது : முதல்வர் கருணாநிதி


சென்னை : பக்தி வேடம் பூண்டு, பாமர மக்களை படுகுழியில் தள்ளுகின்ற பகல் வேடக்காரர்களையும், அவர்களிடம் பலியாகி சமுதாயத்தைச் சீரழிக்கின்ற சபல புத்தி உடையவர்களையும், அரசு வேடிக்கை பார்த்து கொண்டிருக்காது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை: 
பகலில் ‘சாமி’யாகவும், இரவில் ‘காமி’யாகவும்  வாழ்க்கை நடத்தி, பாமர மக்களின்  வாழ்வையும் அறிவையும் பாழாக்கி, பணக்கொள்ளை அடிக்கும் பகல்வேடக்காரர்களை; பாமர மக்களுக்கு அடையாளம் காட்ட, பகுத்தறிவு இயக்கம் பிரசாரம் செய்து வருகிறது.  
சினிமா, நாடகங்கள் மூலம் எடுத்துக்காட்டுகள் சித்திரித்து காட்டப்பட்டன. குறிப்பாக சந்திரகாந்தா, சொர்க்கவாசல், மனோகரா, வேலைக்காரி, பராசக்தி, தூக்குமேடை ஆகியவற்றில் காவியுடைதாரிகளின் கபட நாடகம் காட்டப்பட்டன.
இன்னமும் புரிந்து கொள்ள முடியாத, புரிந்து கொண்டாலும் திருந்திக் கொள்ள இயலாத, மௌடீகத்தில் மூழ்கியோர் நாட்டில், சமூகத்தில் இருக்கிறார்கள். சமூக நலனும், கண்ணியமும் காக்கப்பட வேண்டும். அவற்றில் அக்கறை காட்டும் ஒரு மக்கள் நல அரசு அண்மையில் நடந்ததாக கூறப்பட்டு, காட்சியாக்கி காட்டப்படுகிற;  கயமைத்தன சாமியார்களின் ஏமாற்று வித்தைகளை பொறுத்துக் கொண்டிருக்க முடியாது.
அதே நேரத்தில் குற்றங்கள் நடைபெறுவதை விட, அந்தக் குற்றங்கள் எப்படி நடந்தன? எங்கே யாரால் நடத்தப்பட்டன? எந்த முறையில் நடத்தப்பட்டன என்பதைச் சான்றாகக் காட்ட வெளியிடப்படும் படங்கள், செய்திகளாக இருந்தாலும் அவை அளவுக்கு மீறும்போது அவற்றை தொலைக்காட்சியிலோ பத்திரிகைகளிலோ  படங்களாகப் பார்க்கும் இளைஞர்கள் நெஞ்சங்களில் எத்தகைய மாறுதல்கள் ஏற்படும், அது இளைய சமுதாயத்தை எங்கே கொண்டு போய் நிறுத்தும் என்பதையும்  எதிர்காலத் தலைமுறையின் மீது அக்கறை கொண்டோர் அனைவரும் எண்ணிப் பார்த்து நடக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வது ஓர் அரசின் கடமை.
அந்தக் கடமையை செய்யும் அரசு, அதை செய்கின்ற நேரத்தில், அந்தக் கடமை வெற்றி பெற அனைவரும் அரசுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும். அப்படியில்லாமல்  ஒரு தீமையை விவரித்தால், அது மற்றொரு பெரிய தீமைக்கு வித்திடுவதாக ஆகக் கூடாது.
அண்மையில் வெளிவந்துள்ள செய்திகள், அதைத்தொடர்ந்து வெளிவருகின்ற  செய்திகள் எதுவாயினும் அவற்றை விவரம் அறிந்தவர்கள் அரசுக்கும், போலீஸ் துறைக்கும் தெரிவிக்க வேண்டும். மாறாக, தாங்களே முன்னின்று அவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டுவது தேவையற்றது. வெளியிட்டு காட்டுவது தீயவர்களுக்கு தங்கள் செயலை நியாயப்படுத்த வலிமை சேர்ப்பதாகவும் ஆகி விடும்.
‘அருவருக்கத் தக்க செய்திகளை, படங்களை வெளியிடுவது முள்ளை முள்ளால்  எடுக்கும் காரியம் தானே’ என்று சில ஏடுகளும், தொலைக்காட்சி நிறுவனங்களும் வாதிடலாம். முள்ளை முள்ளால் எடுக்கலாம். ஆனால் போதையேற்றும் கள்ளை அருந்தியவனை; மேலும் கள்ளையூற்றி திருத்த முடியுமா? அதுபோலத்தான் இந்தச் செய்திகளும் படங்களும் சமூகத்தை மேலும் சீரழித்து விடக்கூடாதே என்ற கவலையோடு அரசின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
இதுபோன்ற ஏமாற்று வித்தைக்காரர்களையும், பக்தி வேடம் பூண்டு பாமர மக்களை படுகுழியில் தள்ளுகின்ற பகல் வேடக்காரர்களையும், அவர்களிடம் பலியாகி சமுதாயத்தைச் சீரழிக்கின்ற சபல புத்தி உடையவர்களையும், இந்த அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது.
இந்த அரசு எடுக்கின்ற நடவடிக்கைகளுக்கு உண்மையிலேயே பகுத்தறிவு வளர்த்து, ஊருக்கு உபதேசிகளை ஒழித்துக் கட்ட வேண்டுமென்று எண்ணுகின்ற ஒவ்வொருவரும் உறுதுணையாக இருக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இபிகோ 420வது பிரிவின் கீழ் நித்யானந்தா மீது வழக்கு பதிவு: இந்திய தண்டனைச் சட்டம் 420வது பிரிவின் கீழ், சாமியார் நித்யானந்தா மீது மத்திய குற்றப்பிரிவு போலீசில் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
‘நித்யானந்தா தியான பீடம்’ என்ற பெயரில் ஆசிரமம் நடத்தி வந்தவர் நித்யானந்தா. இவர் நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகள், கடந்த செவ்வாய்கிழமை வெளியாயின. இது அவரது பக்தர்கள், அவரது தியான பயிற்சிகளை பின்பற்றியவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. திருவண்ணாமலை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள நித்யானந்தா ஆசிரமங்களையும் பக்தர்கள் அடித்து நொறுக்கினர்.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற வக்கீல் அங்கயற்கண்ணி (எ) கயல், சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:
பிரபல நடிகையுடன் நித்யானந்தா உல்லாசமாக இருக்கும் காட்சிகள் டிவியில் ஒளிபரப்பப்படுகின்றன. தமிழ் கலாசாரத்தை சீரழிக்கும் செயலில் ஈடுபட்டிருக்கும் நித்யானந்தா, இந்து சாமியார் என்ற போர்வையில் தன் சுய, சுகபோகங்களுக்காக மோசடி செயல்களில் ஈடுபட்டிருப்பது இதன்மூலம் தெளிவாகிறது. சாமியார் என்ற போர்வையில் மக்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் சொத்து சேர்த்துள்ளார். இத்தகைய கிரிமினல் செயல்களில் ஈடுபட்டுள்ளவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சொத்துக்களை முடக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த புகார் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்துமாறு, போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார். இதையடுத்து, நித்யானந்தா மீது இந்திய தண்டனைச் சட்டம் 420வது பிரிவின் (மோசடி செய்தல்) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. துணை கமிஷனர் ஸ்ரீதர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் வக்கீல் சிவா, போலீஸ் கமிஷனரிடம் நேற்று அளித்த புகாரில், Ôபொதுமக்களிடம் பல கோடி ரூபாய் வசூலித்து, நித்யானந்தா மோசடி செய்துள்ளார். இதனால், அவரது சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும். பிரேமானந்தா போல கொலைகள் கூட செய்திருக்கலாம். இதனால், அவரை கைது செய்து விசாரிக்க வேண்டும். அவரால் மேலும் பல பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம். அரசு இந்த புகார் பற்றி தீவிரமாக விசாரிக்க வேண்டும். இதுகுறித்து விரைவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன்Õ என்று கூறியுள்ளார். இதுகுறித்தும், மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment