சென்னை : ""நானோ, தியான பீடமோ சட்டரீதியாக எந்த தவறும் செய்யவில்லை. குற்றச்சாட்டுக்கு எதிரான உண்மைகளை சேகரித்து விரைவில் வருவேன்,'' என, நித்யானந்தா கூறியுள்ளார்.நேற்று பிற்பகல் நித்யானந்தரின் வக்கீல் ஸ்ரீதர், இ-மெயில் மூலம் வந்ததாக, நித்யானந்தர் விளக்கம் அளித்த, "சிடி' ஒன்றை பத்திரிகையாளர்களுக்கு அளித்தார். அந்த "சிடி' வாயிலாக நித்யானந்தர் கூறியிருப்பதாவது:என் மீதும், தியான பீடம் மீதும் பல குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் என் மீது கொண்ட அன்பினால் கடிதம், இ-மெயில் மூலம் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். என் மீதும், தியான பீடத்தின் மீதும் வதந்தி பரப்பப்படுகிறது.; சட்டரீதியாக நானோ, தியானபீடமோ எந்த தவறையும் செய்யவில்லை. குற்றச்சாட்டு மற்றும் வதந்தி, செய்தியின் உண்மையை திரட்ட முயற்சி செய்து வருகிறோம். எல்லா குற்றச்சாட்டுக்கும் விரைவில் விடை அளிப்பேன். சில நாட்கள் மட்டும் பொறுமையாக இருங்கள்.இவ்வாறு நித்யானந்தர் கூறியுள்ளார்.
இதுகுறித்து நித்யானந்தரின் வக்கீல் ஸ்ரீ தர் கூறியதாவது:நேற்று பிற்பகல் நித்யானந்தரிடம் இருந்து இ-மெயில் மூலம் இந்த தகவல் கிடைத்துள்ளது. அவர் தற்போது வாரணாசியில் நடக்கும் கும்பமேளாவில் தனது குருவான பாபாஜியுடன் இருக்கிறார். சட்டரீதியான பாதுகாப்பு கிடைத்த பின், அவர் வெளியில் வந்து அனைவரையும் சந்திப்பார். அவர் மீது கூறப்பட்டுள்ள குற்றச் சாட்டுக்கள் அனைத்தும் உள்நோக்கத்துடன் கூடியதாக உள்ளது. புகாரை அளித்துள்ள லெனின் பல்வேறு வழக்குகளில் சிறை சென்று வந்துள்ளார். காந்த படுக்கை மோசடி வழக்கு அவர் மீது உள்ளது.அவர் அளித்துள்ள "சிடி' மார்பிங் முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. சேலத்தில் நித்யானந்தர் மிரட்டல் விடுத்ததால், அங்கு புகார் அளிக்காமல் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தது; ஏன் என்பது தெரியவில்லை. அவர் அளித்த புகார் மனு கூட எங்களுக்கு இதுவரையிலும் கிடைக்கவில்லை.சட்ட ரீதியாக பாதுகாப்பு இல்லாத சூழலில் நித்யானந்தர் வெளியில் வந்தால் சரியாக இருக்காது என்பதால் தான், அவர் இந்த செய்தியை அளித்துள்ளார். விரைவில் நாங்கள் எதிர் மனு தாக்கல் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.இவ்வாறு ஸ்ரீ தர் கூறினார்.
No comments:
Post a Comment