Friday, March 5, 2010

இளைஞர்கள் தனித்திறனை வளர்த்து சமூக முன்னேற்றத்துக்கு வழிவகுக்கலாம்: கலாம்

சென்னை : 
""தங்கள் தனித்திறனை வளர்த்து கொள்வதன் மூலம், இளைஞர்கள் சமூக முன்னேற்றத்திற்கு பங்காற்ற முடியும்,'' என, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசினார்.


சென்னை எழும்பூர் எத்திராஜ் மகளிர் கல்லூரியில், புதிய கட்டட திறப்பு விழா நேற்று நடந்தது. கட்டடத்தை திறந்துவைத்து, அப்துல் கலாம் பேசியதாவது: கல்லூரி பருவத்திலேயே இளைஞர்கள் தங்கள் எதிர்கால இலக்கை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். துறை சார்ந்த புத்தகங்கள், "இன்டர்நெட்' ஆகியவற்றின் மூலம் அந்த இலக்கை அடைவதற்கான அறிவை பெற வேண்டும். பெற்ற அறிவை செயல்படுத்த கடின உழைப்பும், தடைகளை எதிர்கொள்ளும் மனவலிமையும் தேவை. தீவிரவாதம் இன்று நமக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. இதை தடுக்க, குடிமக்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குவது, தீவிரவாத தடுப்பு சட்டங்களை கடுமையாக செயல்படுத்துவது உள்ளிட்ட பல நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.


ஒவ்வொரு தனிமனிதனும் சேவை மனப்பான்மை, நேர்மை குணத்துடன் செயல்பட்டால் தான் தீவிரவாதத்தை முற்றிலும் ஒழிக்க முடியும்.இளைஞர்கள், தங்களின் தனித்திறனை கண்டறிந்து அதை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள்,தொழில் முனைவோர் என பன்முக திறமைக் கொண்ட சமுதாயத்தை உருவாக்கலாம். நகர்ப்புற கல்லூரி மாணவ, மாணவியர் தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள கிராமங்களை தத்தெடுத்து, அம்மக்களுக்கு கல்வியறிவு வழங்க வேண்டும். இதன் மூலம், கிராம பொருளாதார முன்னேற்றத்திற்கு அடித்தளம் அமைக்கலாம். இவ்வாறு அப்துல் கலாம் பேசினார். விழாவில், கல்லூரி நிர்வாகக் குழு உறுப்பினர்கள், முதல்வர் தவமணி, ஆசிரியர்கள் மற்றும் மாணவியர் பங்கேற்றனர்.


விழாவில், மாணவியரின் கேள்விகளுக்கு அப்துல் கலாம் அளித்த பதில்கள்:


* இந்தியாவின் நீர்வள ஆதாரம், எரிபொருள் பயன்பாடு பற்றி?
ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளை சரியாக பராமரிப்பது, கால்வாய்களை முறையாக தூர்வாருவது மற்றும் நதிகளை இணைப்பதன் மூலம் நீர்வள ஆதாரத்தை பாதுகாத்துக் கொள்ளலாம். வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையால் சுற்றுச்சூழல் மாசுப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க, பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக, சூரிய எரிசக்தி, "பயோ காஸ்' போன்றவற்றின் பயன்பாட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்.


* விண்வெளி துறையில் இந்தியாவின் செயல்பாடு குறித்து?
செவ்வாய் கிரகத்தை ஆராயும் அளவிற்கு இந்திய விண்வெளி துறை முன்னேற் றம் அடைந்துள்ளது. எதிர்காலத்தில் செவ்வாய்க்கு செயற்கை கோள் அனுப்பும் திட்டம் உள்ளது.


* இளைஞர்கள் அரசியலில் சாதிக்க முடியுமா?
நிச்சயம் சாதிக்க முடியும். அதற்கு முதலில், இளைஞர்கள் பொதுவாழ்விற்கு விரும்பி வரவேண்டும். பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்பதற்காக தான், "பார்லிமென்ட்'டில் அவர்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற முயற்சிகள் நடைபெறுகிறது. பெண்களுக்கு அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணம், ஈடுபாடு குறைவாக தான் உள்ளது.


* சமச்சீர் கல்வி திட்டம் பற்றி?
நல்ல திட்டம். இதன் மூலம் கிராமப்புற மாணவர்களுக்கும் சிறந்த கல்வி கிடைக்கும்.


* 2020 ல் இந்தியா வல்லரசு ஆகுமா?
தற்போது நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி 10 சதவீதமாக உள்ளது. இந்நிலை தொடர்ந்து நீடித்தால், 2020ல் இந்தியா நிச்சயம் வல்லரசாகும். இவ்வாறு அப்துல்கலாம் பதிலளித்தார்

No comments:

Post a Comment