மதுரை :
குண்டூசி முதற்கொண்டு அனைத்துமே நவீன மயமாகி வரும் இக்காலத்தில், தமிழகத்தில் இன்றும் சாக்கடையில் மூழ்கி சுத்தப்படுத்துவது, கைகளில் மலத்தை அள்ளி அப்புறப்படுத்துவது என, காட்சிகள் மாறவில்லை.
சமீபத்தில் சென்னையில் தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணைய துணைத் தலைவர் என்.எம். காம்ப்ளே, "தமிழகத்தில் மனித கழிவை மனிதனே அள்ளும் நிலை இருக்கிறது' என்றார். இதை அடிப்படையாக வைத்து, மதுரை "எவிடன்ஸ்' அமைப்பு மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் மாவட்டங்களில் ஆய்வு நடத்தியது.
இதன் முடிவு குறித்து, இதன் நிர்வாக இயக்குனர் கதிர் கூறியதாவது :பிணம் எரிப்பவர்கள், மலம் அள்ளுபவர்கள், சாக்கடை கழிவுகளை அகற்றுபவர்கள், குப்பை அள்ளுபவர்கள் என, மொத்தம் 303 பேரிடம் ஆய்வு நடத்தினோம். இவர்கள், மாதம் 400 முதல் 13,000 ரூபாய் சம்பளமாக பெறுகின்றனர். 127 பேர் வாரிசுகளையும் வேலையில் ஈடுபட செய்துள்ளனர்.இத்தொழில்களில் ஈடுபடுவோர், "பிற சமூகத்தினர் தங்களை ஒதுக்கி வைத்துள்ளனர்; தங்களை கண்டு பிற சமூகத்தினர் ஒதுங்கி செல்கின்றனர்' என்று தெரிவித்தனர்.
தொழில் மற்றும், ஜாதி ரீதியாக இவர்கள் பல சித்திரவதைகளை அனுபவிக்கின்றனர். 226 பேரின் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன.அருவருக்கத்தக்க, இழிவான கழிவுகளிடையே பணி செய்வதால் மனஉளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர். ஆஸ்துமா, தோல் நோய், நுரையீரல் நோயாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். கந்து வட்டி கொடுமைக்கும் ஆளாகியுள்ளனர்.இவர்கள் குறித்து விரிவான ஆய்வை, தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். பணியின் போது இறக்கும் தொழிலாளர்களுக்கு 10 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும், என ஒன்பது தீர்வுகளை அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம்,'' என்றார்
No comments:
Post a Comment