Wednesday, March 24, 2010

சென்னையில் தண்ணீர் பாக்கெட்டுக்கு விரைவில் தடை மேயர் மா. சுப்பிரமணியன் தகவல்

சென்னை, மார்ச். 23-
 
சென்னையில் குடிநீர் பாக்கெட்டுகள் விற்பனை அமோகமாக நடக்கிறது. சென்னைக்கு தினமும் சுமார் 20 லட்சம் பேர் வந்து செல்கிறார்கள்.
 
இவர்களில் பெரும்பாலானவர்கள் தாகம் தணிப்பதற்காக கடைகளில் விற்கப் படும் தண்ணீர் பாக்கெட்டுகளையே வாங்குகிறார்கள். தினமும் சுமார் 5 லட்சம் தண்ணீர் பாக்கெட்டுகள் விற்பனையாவதாக கூறப்படுகிறது. இப்போது கோடை காலம் வந்து விட்டதால் தண்ணீர் பாக்கெட் விற்பனை மேலும் அதிகரித்துள்ளது.
 
இதனால் தண்ணீர் பாக்கெட் தயாரிப்பில் பலர் ஈடுபட்டுள்ளனர். குடிசை தொழில்போல் வீடுகளிலேயே பலர் தயாரித்து வருகிறார்கள்.
 
போலியாக ஐ எஸ் ஐ முத்திரை பதித்த பாக்கெட்டுகளை தயாரித்து அதில் தண்ணீர் அடைத்து விற்கிறார்கள். கிணறுகளில் உள்ள தண்ணீரை பிடித்து சுத்திகரிக்காமலேயே மினரல் வாட்டர் போல் பாக்கெட்டுகளில் அடைத்து விற்று வருகிறார்கள்.
 
100 பாக்கெட்டுகள் கொண்ட ஒரு மூட்டை தண்ணீரின் மொத்த விலை ரூ.35 முதல் 40 வரை விற்கப்படுகிறது. அதை சில்லறை கடைகாரர்கள் ரூ.150-க்கு விற்கிறார்கள்.
 
இவ்வளவு குறைந்த விலைக்கு சுத்தமான குடிநீர் தயாரித்து வழங்க முடியாது. கவர் பிரிண்டிங், தண்ணீரை பாக்கெட்டில் அடைப்பது, கடைகளுக்கு எடுத்துச் செல்லும் போக்குவரத்து செலவு ஆகியவற்றை கணக்கீட்டால் ஒரு மூட்டை சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் ரூ.40-க்கு விற்க முடியாது என்பது தெரியவரும்.
 
சுகாதார மற்ற தண்ணீர் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படுகிறது. எனவே தண்ணீர் பாக்கெட் விற்பனையை தடை செய்ய வேண்டும் என்று மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் சைதை ரவி மாநகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தினார். பல பொது நல அமைப்புகளும் கோரிக்கை வைத்தன.
 
இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் பாக்கெட் தண்ணீர் சுகாதாரமில்லாமல் தயாரிப்பது தெரிய வந்தது. 13 நிறுவனங்களுக்கு அதிகாரிகள் “சீல்” வைத்தனர்.
 
சிறிய எந்திரங்களை வைத்தே தயாரிப்பதால் அதிகாரிகள் சீல் வைத்தாலும் வேறு வீடுகளில் வைத்து மீண்டும் தொழிலை தொடங்கி விடுகிறார்கள்.
 
கடந்த 3 மாதங்களில் மட்டும் சுகாதாரமற்ற 1 லட்சத்து 70 ஆயிரம் குடிநீர் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து அழித்துள்ளனர்.
 
தினமும் லட்சக்கணக்கில் குடிநீர் பாக்கெட்டுகள் கழிவுகளாக சேருவதால் சாக்கடை ஓடைகளில் ஏற்படும் அடைப்புக்கும் தண்ணீர் பாக்கெட் முக்கியமாக இருக்கிறது.
 
உடல் நலத்துக்கு கேடு விளைவிப்பதோடு கழிவு நீர் வெளியேறவும் இடையூறாக உள்ளது. எனவே குடிநீர் பாக்கெட் விற்பனையை தடை செய்வது பற்றி மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள். பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பற்ற நிலையில் உணவு பொருள் விநியோகித்தல் ஆகிய சட்டத்தின் கீழ் தடை செய்யப்படும் என்று தெரிகிறது.
 
இது தொடர்பாக மேயர் மா. சுப்பிரமணியனிடம் கேட்டபோது கூறியதாவது:-
 
தண்ணீர் பாக்கெட்டுகள் சுகாதாரமில்லாமல் விநியோகிக்கப்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் தண்ணீர் பாக்கெட் விற்பனையை தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும்.
 
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment