Wednesday, March 10, 2010

காதல் ஓவியம்!


பேப்பரில் கிறுக்குவதென்றால் ஆனந்துக்கு அலாதிப் பிரியம். ஆனால், அவன் ஓவியம் வரைவதைப் பார்த்தால் பத்ரகாளியாகி விடுவாள் வனிதா. ஸ்கூல்ல "குட்' சொல்றாங்க, அம்மாவுக்கு ஏன் கோபம் வருது என்று ஒண்ணாங்கிளாஸ் படிக்கும் ஆனந்துக்குப் புரியாது.அவன் அண்ணன் அரவிந்த்தை மட்டும், வனிதா கொஞ்சித் தீர்க்கிறாள். காரணம், அவன் படிப்பில் சுட்டி. வீட்டிலே எப்போதுமே இறுக்கம் இருக்கிறது. "அப்பா எப்பம்மா வருவாரு' என்று இருவர் கேட்டாலும், அம்மா அமைதியாகி விடுகிறார். அவளின் மவுனத்துக்கு விடை தெரிய, சில ஆண்டுகள் பின்னோக்கிச் செல்ல வேண்டும்.


***


ரவிக்குமார் பயங்கர சோம்பேறி; கடைசி பெஞ்ச் மாணவன். அப்பா, வாத்தியார் இரண்டு பேரும் மாறி மாறி அடித்தாலும், திருந்தாத ஜென்மம். பத்தாம் வகுப்பில் தமிழைத் தவிர, எல்லாப்பாடத்திலும் பெயில். இனிமேல் படிப்பு வராது என்று ஒர்க்ஷாப்பில் வேலைக்குச் சேர்த்து விட்டார் அப்பா.அங்கேயும் வாரத்துக்கு ஒரு முறைதான் வேலைக்குப் போனான். அந்த ஒர்க்ஷாப் பரபரப்போடு கொஞ்சமும் ஒட்டாத ரவிக்குமாரை, ஒர்க்ஷாப் ஓனர் அன்வரும் அடித்துப் பார்த்து விட்டார். எந்த பிரயோஜனமும் இல்லை. ராத்திரி ஆனதும், சரக்கு அடித்து விட்டு அட்வைஸ் பண்ணுவார் அன்வர்.திருந்துவதாய்த் தெரியவில்லை. ஒரு நாள் அன்வரே கடுப்பாகி, விரட்டி விட்டார். ரெண்டு நாளாக ஆளையே காணோம் என்று தேடினார்கள். மூன்றாம் நாள்தான், பக்கத்திலேயே ஒரு இடத்தில் கொலைப்பட்டினியாய் அவன் தூங்கிக் கொண்டிருந்தது தெரிந்தது.மனசு கேட்காத அன்வர், வயிறு நிறைய அவனுக்கு சாப்பாடு போட்டு, படத்துக்குப் போய் வர காசும் கொடுத்தார். படம் பார்த்து விட்டு, அவன் திரும்ப வந்தபோது, அன்வர் முழுசாக மட்டையாகித் தூங்கி விட்டார். கதவைத் தட்டித் தட்டி கை ஓய்ந்து விட்டது.


வெளியே உலகம் தூங்கிக் கொண்டிருக்க, முழு நிலவு விழித்துக் கிடந்தது. தெருக்கோடியில் ஒரு சோடியம் விளக்கு...ஜில்லென்ற காற்று உடலை வருடியது. தன்னையறியாது குஷியான ரவிக்குமார் அங்கிருந்த கறிக்கட்டையை எடுத்து சுவரில் கிறுக்க துவங்கினான்.ஒர்க்ஷாப்பில் பைக்குகளை ஓனர் பழுது பார்ப்பது போன்று அழகாக படம் வரைந்து விட்டு, அங்கேயே தூங்கி விட்டான். காலையில் பொழுதோடு சேர்த்து, ரவிக்குமாரின் வாழ்க்கையும் விடிந்தது.வெளியே வந்து பார்த்த அன்வர் அசந்து விட்டார். அச்சு அசலாய் அவரை வரைந்திருந்தான் ரவி. அன்று வரை அவனை யாருமே புகழ்ந்து பேசியது இல்லை.""டேய்...சூப்பரா படம் வரைந்திருக்கே... உனக்கு படம் வரைய தெரியுமா...' என்று கேட்டார் அன்வர். வாய் திறந்து பேசினான் ரவிக்குமார்.""சின்ன வயசுல இருந்தே படம் வரையுறதுன்னா எனக்கு உசிருங்க, எங்க அப்பாதான், படம் வரையக்கூடாதுன்னு அடிச்சு, விரட்டி விட்டுட்டாரு, அதுல இருந்து படம் வரையுறதை நிறுத்திட்டேன்,'' என்றான்.


""உனக்கு படிப்பும் வரலை, வேலை கத்துக்கிற இன்ட்ரஸ்ட்டும் இல்லை, எனக்குத் தெரிஞ்ச ஆர்ட்டிஸ்ட் கிட்ட சேத்து விடுறேன்,''என்று சொன்ன அன்வர், அன்றே அவனை அங்குள்ள ஓர் ஆர்ட்டிஸ்ட்டிடம் வேலைக்குச் சேர்த்து விட்டான். வாழ்க்கையில் முதன் முதலாய் உற்சாகம் ஆனான் ரவிக்குமார். அது நீடிக்கவில்லை.பெயிண்ட் கலக்குவது, பிரஷ் கிளீன் பண்ணுவது என காலம் ஓடியது. ஒரு முறை ஓவியருக்கு உடம்பு சரியில்லாதபோது, படம் வரைய அவனுக்கு வாய்ப்புக் கிடைத்தது.முதன் முதலாகக் கிடைத்த வாய்ப்பில், அவனது கற்பனைத்திறனையும் சேர்த்து அழகிய ஓவியம் வடிக்க, பாராட்டுக்குப் பதிலாக "சொன்னதை செய்யாம இஷ்டத்துக்கு வரையக்கூடாது' என்று அட்வைஸ் தான் கிடைத்தது.ஒருநாள், ஆர்ட்டிஸ்ட் வெளியூரில் இருந்தார். அவர் வழக்கமாக ஓவியம் வரையும் கல்லூரியிலிருந்து "கருத்தரங்குக்கு அவசரமா ஒரு படம் வரையணும், உடனே வரணும்' என்று அழைப்பு வந்தது.


ரவிக்குமாரைப் போகச் சொன்னார் ஆர்ட்டிஸ்ட். அவர்கள் சில வார்த்தைகளில் சொன்னதை வைத்து அமர்க்களமாய் ஓர் ஓவியத்தை வரைந்து முடிக்க, கல்லூரி நிர்வாகம் அசந்து போனது. பாராட்டு, பரிசுடன் அங்கேயே வேலையும் கிடைத்தது.ஐந்து ஆண்டுகள் கல்லூரிக்காக ஏராளமான படங்களை வரைந்து கொடுத்ததால் ரவிக்குமாரின் திறமை எல்லா இடத்துக்கும் பரவியது. ஆனால், கல்லூரி நிர்வாகத்தின் நிபந்தனைகள், ரவிக்குமாருக்கு பிடிக்கவில்லை. வேலையை உதறி, வெளியேறினான்.அதற்கும் முன்னாலேயே, அவனுக்கும் வனிதாவுக்கும் காதல் ஆரம்பமாகி விட்டது. அவன் வேலை பார்த்த கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தாள் வனிதா. ஓவியத்தால் ஏற்பட்ட ஈர்ப்பு, ஓவியனை காதலிக்க வைத்தது. கல்லூரி வேலையை விட்டாலும், காதலை விடவில்லை ரவி.வனிதாவின் வீட்டில் பெரிய எதிர்ப்பு கிளம்பியது.


""வேலை வெட்டிக்குப் போகாம, படம் வரையுறவனை கல்யாணம் பண்ணிட்டு என்ன பண்ணப்போற,''வனிதாவின் அப்பா கொந்தளித்தார். காதல் கண்களை மறைத்தது. தோழிகள், நண்பர்களின் ஆதரவில் பதிவுத் திருமணம் நடந்தது. ஒரே ஆண்டிற்குள் இரட்டைக் குழந்தைக்குத் தாயானாள் வனிதா. தனியாருக்கு வேலை செய்து, கொஞ்சம் சம்பாதித்தான் ரவி.ஆனால், குடும்பம் நடத்த வருமானம் போதவில்லை. வேறு வேலைக்குப் போக அவன் தயாராயில்லை. வழக்கம்போல், இரவும், பகலுமாய் ஓவியங்களை வரைந்து கொண்டேயிருந்தான் ரவி. இரண்டு ஆண் குழந்தைளையும் வளர்க்க வனிதா படாதபாடு பட்டாள்.ஓவியத்தால் கவரப்பட்ட வனிதா, அதே ஓவியங்களை வெறுத்தாள். பெற்றோர் வீட்டிலும் ஆதரவு கிடைக்காததால் சாப்பாட்டிற்கே கஷ்டமானது. மகன்களின் சிரிப்பு மட்டுமே ஆறுதல் தந்தது. நண்பர்களிடம் பேசி, ரவிக்குமாருக்கு வேறு வேலைக்கு ஏற்பாடு செய்தாள்.


வேலை முடிந்து வந்து, ஓவியம் வரைந்து கொள்ளுங்கள் என்றாள். எனக்கு ஓவியத்தைத் தவிர, ஒரு வேலையும் தெரியாது என்று ஒற்றை வார்த்தையில் அவன் மவுனமானான். குழந்தைகளுக்கு இரண்டு வயதானதும், அவளே வேலைக்குப் போக முடிவெடுத்தாள். அதற்கும் அவன் ஒத்துழைக்கவில்லை. இரவு நேரத்தில் மட்டுமே அவன் வீட்டுக்கு வருவதால், குழந்தைகளை ஒப்படைத்து விட்டு வேலைக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டாள்.  கடைசியாய் வெறுத்துப்போய், விவாகரத்து கோரினாள் வனிதா.காதல் மனைவியே உதறி தள்ளியதால் நொந்து போன ரவிக்குமார், ஒரு கையில் சிகரெட்டும், மறு கையில் தூரிகையுமாக உருக்குலைந்தான். குடும்ப நல கோர்ட்டில், "ஓவியம் வரையும் போது குடும்பம் பற்றி சிந்திக்க முடியாது, நான் இப்படித்தான். விவாகரத்துக்கு சம்மதிக்கிறேன்' என்றான்.


வனிதா கேட்டபடி விவாகரத்தும் கிடைத்தது, ஆனால் அவளின் சந்தோஷம் தொலைந்தது. விவாகரத்து வழங்கிய கோர்ட் வாசலில் வைத்து, "ஓவியத்தை விட்டு விட்டு என்னோடு வந்து விடு, நான் வேலைக்குப் போய் உங்களைக் காப்பாத்துறேன்' என்று காலில் விழுந்து கதறினாள் வனிதா.அவனோ, "என் மனசு, நீ சொன்னதை எப்போ ஏத்துக்குதோ அப்போ நான் உன்னைத் தேடி வர்றேன். நம்ம புள்ளங்களை என்னைய மாதிரி வளர விடாதே,' என்ற வேண்டுகோளுடன் விடை பெற்றான்.....ஆனந்த் ஓவியம் வரைவதை அவள் தடுப்பதும், ரவியின் வார்த்தைகளை நினைவில் வைத்துதான். அவளுக்குள் காதலை ஏற்படுத்திய ஓவியமே, இப்போது வெறுப்பின் சின்னமாய் மாறி விட்டது. தன் காதல் அவனை மீண்டும் அழைத்து வரும் என்ற நம்பிக்கையோடு, இன்றும் காத்திருக்கிறாள் வனிதா.

No comments:

Post a Comment