Friday, March 5, 2010

உத்தரப்பிரதேச ஆஸ்ரமத்தில் நெரிசலில் சிக்கி 65 பேர் பலி

பிரதாப்கர், மார்ச் 4:
 உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கிருபாலு மஹராஜ் ஆஸ்ரமத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 65 பேர் உயிரிழந்தனர். இதில் 15 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து உயர்நிலை விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.


பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள இந்த ஆஸ்ரமத்தில் வியாழக்கிழமை 10 ஆயிரம் பேர் திரண்டிருந்தனர். உணவு வழங்கும்போது கூட்டத்தினர் வேகமாக முன்னேறினர். இதில் ஆஸ்ரமத்தின் கதவு கூட்டத்தினர் மேலே விழுந்தது.


கிருபாலு மஹராஜின் மனைவி நினைவு நாளன்று இங்குள்ள பக்தர்களுக்கு உணவு மற்றும் பாத்திரங்கள் வழங்கப்படுவது வழக்கம். இதைப் பெறுவதற்காக பெருமளவில் மக்கள் திரண்டிருந்தனர். உணவு வழங்குவது ஆரம்பமானதும் கூட்டத்தினர் அலைமோதினர்.


இதனால் வாயில்கதவு கீழே விழுந்தது. அப்போது சிலர் கீழே விழுந்தனர். கீழே விழுந்தவர்களின் மீது மற்றவர்கள் ஏறி ஓடினர். இதில் கீழே விழுந்தவர்கள் மிதிபட்டு மூச்சுத் திணறி உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் பிரதாப்கரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகளாவர் என்று இம்மாவட்ட கோட்ட துணை ஆட்சியர் சியாமா சரண் தெரிவித்தார்.


மக்களவையில்...:


உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஏற்பட்ட இந்த சம்பவம்  குறித்து உறுப்பினர்களின் கவனத்துக்குக் கொண்டு வந்தார் சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ். இதுகுறித்து மாநில அரசிடமிருந்து உரிய விளக்கத்தை மத்திய அரசு கேட்டுப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.


உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும் என்று பிரதாப்கர் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் ரத்னா சிங் வலியுறுத்தினார்.


7ஆண்டுகளில் 800 பேர் நெரிசலில் பலி


கோவில் மற்றும் வழிபாட்டுத்தலங்களில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி கடந்த 7 ஆண்டுகளில் 800 பேர் பலியாயினர்.


2008-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் சாமுண்டி தேவி ஆலயத்தில் நேரிட்ட நெரிசலில் சிக்கி 150 பேர் உயிரிழந்தனர்; 60 பேர் காயமடைந்தனர். வெடிகுண்டு வெடிக்கப் போவதாக ஏற்பட்ட புரளியால் இந்த நெரிசல் ஏற்பட்டது.


இமாசலப் பிரதேசத்தில் உள்ள நயன தேவி ஆலயத்தில் ஆகஸ்ட் 3, 2008-ல் நிகழ்ந்த நெரிசலில் 150 பேர் உயிரிழந்தனர். இதில் 230 பேர் காயமடைந்தனர்.

இவையிரண்டும் மிக அதிக எண்ணிக்கையிலானோர் உயிரிழந்த சம்பவங்களாகும்.


விசாரணைக்கு உத்தரவு


இந்த சம்பவம் குறித்து அலாகாபாத் கோட்ட ஆணையர் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கையை 24 மணி நேரத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மாநில அரசு தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்துக்குக் காரணமானவர்கள் குறித்து அறிக்கையில் குறிப்பிடுமாறு கூறப்பட்டுள்ளது. 


அதனடிப்படையில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில அமைச்சரவைச் செயலர் சசாங் சேகர் சிங் கூறினார்.


இது தொடர்பாக குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மிகச் சிறிய இடத்தில் பெரும் எண்ணிக்கையில் மக்கள் திரண்டதால் இந்த சம்பவம் நிகழ்ந்ததாகத் தெரிகிறது என்று அவர் கூறினார்.





No comments:

Post a Comment