திருவனந்தபுரம் : கோழிக்கோட்டில் ஒரு ஓட்டலின் பாத்ரூமில் மறைவான இடத்தில் மொபைல் போன் கேமரா வைக்கப்பட்டிருந்ததை கண்ட கல்லூரி மாணவியர் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக ஓட்டல் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கேரளா, கோழிக்கோட்டில் சாகர் என்ற ஓட்டல் உள்ளது. கோழிக்கோட்டில் நடக்கும் கருத்தரங்கம் ஒன்றில் பங்கேற்பதற்காக சமீபத்தில் ஐந்து கல்லூரி மாணவியர் வந்திருந்தனர். மதிய உணவு சாப்பிடுவதற்காக அந்த ஓட்டலுக்கு அவர்கள் வந்தனர். அவர்களில் ஒரு மாணவி மட்டும், அங்குள்ள பாத்ரூமுக்கு சென்றார். அப்போது அங்குள்ள மறைவான இடத்தில், மொபைல் போன் ஒன்று வைக்கப்பட்டிருந்ததை, அந்த மாணவி பார்த்தார். அந்த மொபைல் போனில் உள்ள கேமரா இயங்குவதை கண்ட மாணவி அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக, தனது தோழிகளிடம் அதை தெரிவித்தார். விரைந்து சென்ற மற்ற மாணவியர், அந்த மொபைல் போனை எடுத்து பத்திரமாக வைத்துக் கொண்டனர். ஓட்டல் மேலாளரிடமும் முறையிட்டனர். விசாரணையில், ஓட்டலில் வேலை பார்க்கும் நிக்கி ஜோஸ் தான், அந்த கேமராவை அங்கு மறைத்து வைத்திருந்தார் என தெரியவந்தது.
இதற்கிடையே, மாணவியரில் ஒருவர், தனது உறவினரான ராகுலுக்கு இதுகுறித்த போனில் தகவல் தெரிவித்தார். அங்கு வந்த ராகுல், நிக்கி ஜோசிடம் தகராறில் ஈடுபட்டார். இதற்குள் போலீசார் அங்கு வந்தனர். மொபைல் போனை தங்களிடம் தரும்படி கூறினர். ஆனால், 'போலீஸ் கமிஷனரிடம் தான் மொபைல் போனை தருவேன்'என, ராகுல் அடம்பிடித்தார். இதையடுத்து, ராகுலை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்ற போலீசார், அங்கு அவரை கடுமையாக தாக்கினர். இதையடுத்து, அந்த கல்லூரி மாணவியர்,மொபைல் போனை போலீஸ் கமிஷனரிடம் ஒப்படைத்தனர். இதற்கு பின், நிக்கி ஜோஸ் கைது செய்யப்பட்டார். இவர் மீது, தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் ராகுல் அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீசார் தாக்கியதில் அவரது காதில் பலமாக அடிபட்டது. இதனால், அவரது கேட்கும் திறன் குறைந்து விட்டதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம், கோழிக்கோடு பொதுமக்களிடையே வேகமாக பரவியது. ஓட்டல் முன் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் கோழிக்கோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment