Friday, March 5, 2010

துர்நாற்றம் வீசும் வெளிநாட்டு கழிவுகள் : குப்பைத்தொட்டியாகும் தூத்துக்குடி



தூத்துக்குடி : கிரீஸ், பிரான்ஸ் நாடுகளில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்தில் 20 கன்டெய்னர்களில் இறக்குமதி செய்யப்பட்ட , துர்நாற்றம் வீசக்கூடிய 470 மெட்ரிக் டன் நகராட்சி, மருத்துவ, பிளாஸ்டிக், பேப்பர் கழிவுகளை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.


சிவகாசி, ஸ்ரீபதி பேப்பர் போர்டு(பி)லிமிட் என்ற தனியார் நிறுவனத்திற்கு கிரீஸ் நாட்டிலிருந்து தூத்துக்குடி துறைமுகத்தில் 11 கன்டெய்னர்களில் 253.16 மெட்ரிக் டன் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன. அவற்றில் "பேப்பர் கழிவுகள்' இருப்பதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. சந்தேகத்தில் அடிப்படையில் அந்த கன்டெய்னர்களை சுங்கத்துறையினர் சோதனை செய்தனர். அவற்றில் துர்நாற்றம் வீசும் பேப்பர், நகராட்சி, மருத்துவ கழிவுகள் இருந்தன. அதுகுறித்து, தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்பொருட்களை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய இன்ஜினியர்கள் ஆய்வு செய்தனர். அதில், உடைந்த பொம்மைகள், கண்ணாடி பாட்டில்கள், பஞ்சு துணி கழிவுகள், காலியான வாசனை திரவிய பாட்டில்கள், பயன்படுத்திய மின்சாதன பாட்டரிகள், உள்ளாடைகள், அலுமினிய தாள்கள், கிழிந்த செருப்பு பாகங்கள், உடைந்த "சிடி'தகடுகள், கையுறைகள் போன்ற மருத்துவ கழிவுகள் இருந்தது தெரியவந்தது.


உடல் நலம், சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்கும் அப்பொருட்களை இறக்குமதி செய்த சிவகாசி தனியார் நிறுவனம், அதில் பேப்பர் கழிவுகள் இருப்பதாக உண்மைக்கு புறம்பான சான்று அளித்த டில்லி தனியார் நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல, பிரான்ஸ் குடியரசிலுள்ள ரியூனியன் நாட்டிலிருந்து சிவகாசி ஸ்ரீபதி பேப்பர் நிறுவனத்திற்கு மேலும் ஒன்பது கன்டெய்னர்களில் இறக்குமதி செய்யப்பட்ட 217 மெட்ரிக் டன் மேற்கண்ட கழிவுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


அதுகுறித்து, சுங்கத்துறை ஆணையர் ராஜன் கூறும்போது,""சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் 470 மெட்ரிக் டன் வெளிநாட்டு கழிவுகள், 20 கன்டெய்னர்களில் உள்ளன. அவை 15 நாட்களில் திருப்பியனுப்பப்படும். எனினும் அவற்றை இறக்குமதி செய்த நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்படும். பேப்பர் கழிவுகள் என்ற பெயரில் இறக்குமதி செய்யப்படும் கன்டெய்னர்களை தீவிரமாக சோதனை செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது'' என்றார்.


போலி பாட்டரிகள் பறிமுதல்: சென்னை, புரசைவாக்கம் வி.வி.ஆர்., இம்பெக்ஸ் என்ற தனியார் நிறுவனத்திற்கு சீனாவிலிருந்து, மொபைல்போன் உதிரி பாகங்கள் ஒரு கண்டெய்னரில் தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்டன. ஒருமாத்திற்கு மேலாகியும் அதற்கு உரிய ஆவணங்கள் தாக்கல் செய்யப்படாததால், சுங்கத்துறையினர் அந்த கண்டெய்னரை திறந்து சோதனையிட்டனர். அதில் "நோக்கியா' , "மோட்டரோலா', "சோனி எரிக்சன்' எல்.ஜி., போன்ற பிரபல முன்னணி நிறுவனங்களின் பெயரில் போலி மொபைல்போன் பாட்டரிகள், "சோனி' பெயரில் காதொலி கருவி, மொவாடோ, குஜ்ஜி, டி அன்ட் ஜி பெயரில் போலி கைக்கடிகாரங்கள் இறந்தன. அப்பொருட்களை சுங்கத்துறையினர் கைப்பற்றினர். அதன்மதிப்பு 2 கோடி ரூபாய். அதுதொடர்பாக சென்னை நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்பொருட்கள் விரைவில் அழிக்கப்படவுள்ளதாக சுங்கத்துறை ஆணையர் ராஜன் தெரிவித்தார். சுங்கத்துறை கூடுதல் ஆணையர் சந்திரமோகன், உதவி ஆணையர் ராஜா உடனிருந்தனர். பிரபல நிறுவனங்களின் போலி பொருட்களுடன் கூடிய மற்றொரு கன்டெய்னரை, சீனாவிலிருந்து சென்னை நிறுவனம் இறக்குமதி செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


குப்பைத்தொட்டியாகும் தூத்துக்குடி: கடந்த சில மாதங்களுக்கு முன், தூத்துக்குடி துறைமுகத்தில், வெளிநாட்டிலிருந்து அபாயகரமான மருத்துவக்கழிவுகள் இறக்குமதி செய்யப்பட்டன. அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவிக்கவே, அவை திருப்பியனுப்பப் பட்டன. தற்போது கிரீஸ், பிரான்சிலிருந்து கழிவுப்பொருட்கள் இறக்குதி செய்யப்பட்டுள்ளது. அதனால், தூத்துக்குடி வெளிநாடுகளின் குப்பைத்தொட்டியாக மாறிவருவதாக இங்குள்ள மக்கள் ஆதங்கப்படுகின்றனர்.

No comments:

Post a Comment