Tuesday, March 2, 2010

கிரிக்கெட் ஆடிக்கொண்டிருக்கும்போது அரசியலில் நுழைவதா?



கொழும்பு, மார்ச்.2-
 
இலங்கை அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் ஜெயசூர்யா. 40 வயதான இவர் டெஸ்ட் போட்டியில் இருந்து 2007-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். ஒருநாள் போட்டி, 20 ஓவர் போட்டியில் ஆடி வருகிறார். 2011-ம் ஆண்டு உலககோப்பைக்கு பிறகு அவர் ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.
 
இலங்கையில் ஏப்ரல் 8-ந்தேதி நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் ஜெயசூர்யா போட்டியிடுகிறார். அதிபர் ராஜபக்சேயின் சுதந்திர கூட்டணி சார்பில் அவர் களத்தில் நிற்கிறார். தனது சொந்த ஊரான மதரா தொகுதியில் போட்டியிடுகிறார்.
 
அரசியலில் நுழைந்த ஜெயசூர்யாவுக்கு முன்னாள் கேப்டன் ரணதுங்கா கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
 
ஜெயசூர்யா தற்போது கிரிக்கெட் விளையாடி வருகிறார். இந்த நேரத்தில் அவர் எப்படி அரசியலில் நுழையலாம். ஓய்வு பெற்ற பிறகுதான் அரசியலுக்கு வரவேண்டும். ஆளும்கட்சிக்காரர் என்பதற்காக வீரர்களை அணிக்கு தேர்வு செய்யக்கூடாது.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
ரணதுங்கா தலைமையில் 1996-ம் ஆண்டு உலக கோப்பையை இலங்கை கைப்பற்றியது. இதன் பிறகு அவர் ஓய்வு பெற்றார். ஓய்வுக்கு பிறகு அரசியலில் நுழைந்து உள்ளார். தற்போது எதிர்க்கட்சியில் உள்ளார்.
 
ஜெயசூர்யா இதுகுறித்து கூறும்போது, விளையாட்டு வீரர் அரசியலில் நுழையக்கூடாது என்ற விதி எதுவும் இல்லை என்றார். இவர் 1993-2003ம் ஆண்டு வரை கேப்டனாக பணியாற்றினார். மோசமான ஆட்டம் காரணமாக 2006-ம் ஆண்டு கிரிக்கெட்டுக்கு முழுக்கு போட்டார்.
 
ராஜபக்சேயின் வற்புறுத்தலினால் தனது முடிவை மாற்றிக் கொண்டார். சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் ஜெயசூர்யா ராஜபக்சேவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.

No comments:

Post a Comment