மதுரை : படுவேகத்தில் டூவீலர்களை ஓட்டுவோருக்கு நேற்று முன் தினம் மதுரையில் நடந்த விபத்து ஒரு பாடம். இப்போதெல்லாம், டூவீலரை 'ஸ்டார்ட்' செய்து விட்டாலே, பலருக்கு ராக்கெட்டில் பறக்கும் நினைப்பு வந்து விடுகிறது. 'கட்' அடித்து, பஸ்களுக்கு இடையேயும், பிளாட் பாரத்திற்கு மேலேயும் பாய்ந்து சென்று, மற்றவர்களை கவர அல்லது மிரட்ட நினைக்கின்றனர்.
30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் தான், இதை சாகசமாக நினைத்து, இப்படி ஓட்டுகின்றனர்.'பெண்கள் நம்மை பார்க்க வேண்டும். ஹீரோவாக நினைக்க வேண்டும்' என்பது இந்த இளைஞர்களின் எதிர்பார்ப்பு. அதிலும், வாகனத்தின் பின்னால் காதலி அமர்ந்தி ருந் தால், இளைஞர்களுக்கு இன்னும் கொஞ்சம் வீரம் 'பொத்துக்கொண்டு' வந்து விடும். வண்டியின் வேகம் அதிகரிக்கும். தரையில் படுமாறு வண்டியை சாய்த்து, ரொம்ப அதிகமாகவே 'கட்' அடித்து, ஹீரோத்தனத்தை வெளிப்படுத்துவர்.எப்போதுமே இந்த 'ஹீரோத்தனம்' வெற்றி பெறாது என்பதை இவர்கள் புரிந்து கொள்வதில்லை. சில நேரங்களில் விபத்துகளுக்கு 'ஓவர் ஸ்பீடு' காரணமாகி, வாழ்க்கையையே தொலைக்க வேண்டி வரும் என நினைப்பதில்லை.
இதற்கு உதாரணம், நேற்று முன் தினம் மாலை மதுரை பை-பாஸ் ரோட்டில் நடந்த விபத்து.ஆரப்பாளையத்தில் இருந்து ஒரு அரசு டவுன் பஸ், திருமங்கலத்திற்கு புறப்பட்டது. பை-பாஸ் ரோடு ராம் நகர் காலனி பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டு இருந்தது. அப்போது அதே திசையில் ஒரு டூவீலரில் இருவர் (ஹெல்மெட் அணியவில்லை), படுவேகத்தில் பறந்து வந்தனர். பஸ்சை முந்த நினைத்த பைக்கை ஓட்டி வந்தவர், பஸ்சிற்கும் ரோடு மீடியனுக்கும் இடையே புக முயன்றார்.இவர் வருவதை எதிர்பாராத டிரைவர், பஸ்சை லேசாக நகர்த்தினார். அவ்வளவு தான், வந்த வேகத்தில் பஸ்சின் பின்பக்க ஓரத்தில் பைக்காரர் மோதி, கீழே உருண்டார். 'ஐயோ, அம்மா' என கத்தியபடி மயங்கினார். முழங்காலுக்கு கீழ், இடது கால் எலும்பு உடைந்து கால் வளைந்தது. பைக்கின் பின்னால் அமர்ந்திருந்தவரும் கீழே விழுந்து, எழுந்தார். அதிர்ஷ்டவசமாக அவருக்கு காயம் இல்லை. இருப்பினும், அவரால் எழுந்து, பைக் ஓட்டி வந்தவரை தூக்க முடியவில்லை.
ஏனென்றால் பரிதாபம்... அவர் கால்கள் ஊனமுற்றவர். அவரது ஊன்றுகோல்கள் விழுந்து கிடந்தன. பைக்கின் பின்னால் அமர வைத்து, ஓட்டி வந்தவரை தன்னால் காப்பாற்ற முடியவில்லையே என்ற ஆதங்கத்தில், ரோட்டில் அமர்ந்தபடி, தரையை அடித்து, அடித்து அழுதுகொண்டு இருந்தார். பார்த்தவர்கள் கண்கள் கலங்கின. அங்கிருந்தவர்கள், விபத்தில் சிக்கியவரை, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கால்களை இழந்தவரை அமர வைத்து ஓட்டும்போது கூட, உடல் உறுப்புகளின் அருமை தெரியாமல் இருந்திருக்கிறாரே அந்த இளைஞர் என்பது தான் கொடுமையிலும் கொடுமை. இளைஞர்களே... பைக்கின் வேகத்தை 'முறுக்கும்' முன், 'இந்த வேகம் தேவையா' என சிந்தியுங்கள். உங்களை நம்பி பெற்றோர், உடன்பிறந்தோர், மனைவி, குழந்தைகள் உள்ளனர் என்பதை மறக்காதீர்கள்.
No comments:
Post a Comment