என்னதான் பயணிகள் மற்றும் சரக்குக் கட்டணத்தை உயர்த்தவில்லை என்றாலும், தமிழகத்துக்கு 7 புதிய ரயில்களை அறிவித்திருந்தாலும், ரயில்பெட்டித் தொழிற்சாலையின் இரண்டாவது அலகு அமையும் என்றாலும், பொதுவாக அனைத்து மக்களுக்கும் மகிழ்ச்சி தரும் ரயில் பட்ஜெட் என்பது ஒப்புக்கொள்ளக் கூடியதாக இருந்தாலும், தமிழகம் என்ற அளவில் பார்க்கும்போது ஒரு குறை மனதை நெருடவே செய்கிறது. தமிழ்நாட்டுக்கென இந்தத் திட்டத்தில் ரூ.798 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியைக் காட்டிலும் இது குறைவு. மேலும், தொடர்ந்து இரண்டாம் ஆண்டாகத் தமிழ்நாட்டுக்கென புதிய திட்டங்கள் ஏதும் எடுத்துக்கொள்ளப்படவில்லை. தமிழக முதல்வர் இந்த ரயில் பட்ஜெட்டுக்கு மனம்திறந்த பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா மிதமான பாராட்டுகளை வழங்கியுள்ளார். இருப்பினும், இருவருமே தமிழகத்துக்கு குறைவான நிதி ஒதுக்கீடு செய்திருப்பதைச் சுட்டிக்காட்டவில்லை. இத்தகைய நிதிஒதுக்கீடு குறைவதைத் தமிழகத்தின் தலைவர்கள் நட்பு ரீதியிலாவது ரயில்வே அமைச்சரிடம் வலியுறுத்த வேண்டியது அவசியம்.தமிழகத்தில் சென்னை- கன்னியாகுமரி, சென்னை-கோவை, சென்னை- பெங்களூர் வழித்தடத்தில் மேலும் கூடுதல் எண்ணிக்கையில் ரயில்கள் இயக்குவதன் மூலம் ரயில்வே நிர்வாகத்துக்கு அதிக வருவாய் கிடைக்கும் என்பது ஒருபுறமிருக்க, தமிழகத்தின் சாலை விபத்து மரணங்களின் எண்ணிக்கை பெருமளவு குறையும் என்பது நிச்சயம். தமிழ்நாட்டில் எந்தெந்த தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துகள் நடக்கின்றன என்பதைப் பகுத்துப் பார்த்தால் இந்த உண்மை தெரியும்.தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியைக் கொண்டு எந்த ஒரு அகல ரயில்பாதைத் திட்டத்தையும் முழுமையாக நிறைவேற்ற இயலாது. பயணிகள் வசதிகளை மேம்படுத்த நிதி போதுமானதாக இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. முக்கியமாக, பயணிகளுக்கான குடிநீர், உணவு, ஓய்வறை ஆகிய மூன்றிலும் இன்னும்கூட பல ரயில் நிலையங்கள் மிக மோசமான நிலைமையில்தான் இருக்கின்றன. சென்னை சென்ட்ரல், எழும்பூர் போன்ற சில ரயில் நிலையங்களில் தரமான உணவுக்கான தனியார் ஓட்டல்கள், இரண்டு ரூபாய்க்கு ஒரு லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், குளிரூட்டு வசதியுடன் ஓய்வறை போன்ற வசதிகள் உள்ளன. ஆனால் மற்ற ரயில் நிலையங்களில் இவை இல்லை.பயணிகளின் குடிநீருக்காக மேலும் 6 சுத்திகரிப்பு நிலையங்கள் தொடங்கப்படும் என்று ரயில் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், ரயில்வே நிர்வாகம் கண்டிப்பான முனைப்புக் காட்டினால், ரயில்வே வளாகத்திற்குள் ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில் விலை ரூ.5-க்கு விற்பனை செய்ய முடியும். இரண்டு ரூபாய்க்கு ஒரு லிட்டர் நல்ல குடிநீர் தர முடியும் என்றால், அதையே பாட்டிலில் நிரப்பித் தர ரூ.12 என்ற விலையில் நியாயமில்லை. ரூ. 5-க்கு ஒரு லிட்டர் குடிநீர் விற்பனை செய்ய நிறுவனங்கள் முன்வரும். ஏனென்றால், ஒவ்வொரு பாட்டிலின் இலச்சினையும் (பிராண்டு) பயணியின் மனதில் பதிகிறது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிறுவனங்கள் தங்கள் பிராண்டை விளம்பரம் செய்ய தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் செலவிடும் தொகையை ஒப்பிடும்போது, ரயில் பயணிகளுக்காக விலை குறைத்து விற்பது சமூக சேவை மட்டுமல்ல, நிஜமான விளம்பரமும்கூட. ஆகவே, ரயில்வே நிர்வாகம் புதிய குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகள் திறப்பதைக் காட்டிலும், தனியார் குடிநீர் நிறுவனங்களை குறைந்தவிலையில் குடிநீர் விற்க கட்டாயப்படுத்தலாம்.விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் ரூ.150 கோடி வருவாயை ரூ.1000 கோடியாக உயர்த்தப் போகிறோம் என்று ரயில்வே அமைச்சர் கூறியுள்ளார். சாதாரண தனியார் தொலைக்காட்சி நிறுவனம்கூட ரூ. 150 கோடிக்கு அதிகமாக விளம்பரம் மூலம் சம்பாதிக்கும்போது, இந்திய மக்கள் தொகையில் 25 சதவீதம் பேரை தனது நிரந்தர வாடிக்கையாளர்களாகக் கொண்டிருக்கும் ரயில்வே, இத்தனை காலமாக தன் உயரம் என்ன என்பதைச் சரியாக அளக்கவில்லை என்பது வெளிப்படை.மம்தா பானர்ஜி பொறுப்பேற்ற சிறிது காலத்திலேயே, அறிவிக்கப்பட்ட குறைந்தவிலை சிற்றுண்டிகள் இப்போது கிடைப்பதில்லை. மேலும் ரயிலில் தொலைதூரம் பயணம் செய்யும் பயணிகளில் ஒருவர்கூட பரவாயில்லை, சுமார் என்று சொல்லும் தரத்தில்கூட உணவு வகைகள் இல்லை என்றால், ரயில்வே நிர்வாகம் இதைப் பொருட்படுத்தாது என்றால், இக் குறையை யாரிடம் போய்ச் சொல்வது. ஒரு ரயில் எந்த ரயில் நிலையத்துக்கு வந்துள்ளது என்கிற அறிவிப்பு ரயில் பெட்டிகளில் ஒலித்தல் அல்லது பெட்டிகளுக்குள் மின்னோட்டி மூலம் ஆங்கிலம், ஹிந்தி, மாநில மொழியில் ஓடச் செய்தல் ஆகிய சாதாரண அறிவிப்பு புதுமைகள்கூட இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. இது மெட்ரோ ரயிலுக்கு மட்டுமே சொந்தமா என்ன! ரயில் நிலையங்களில் யாருக்குமே புரியாமல் எதிரொலிக்கும் ஒலிபெருக்கி அறிவிப்புகள்தான் இந்த நவீன யுகத்திலும் நீடிக்கின்றன. வடமாநிலங்களில் மூடுபனியால் விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டாலும், விபத்துகள் ஏற்படவில்லை. ஆனால் ரயில் விபத்துகளும் மரணங்களும் ஏற்பட்டன. காரணம், ரயில்வே சிக்னல் நவீனப்படுத்தப்படவில்லை என்பதுதான். ரயில்வே சிக்னல்களை மேம்படுத்தவும் இந்த பட்ஜெட்டில் அதிக கவனம் செலுத்தப்படவில்லை.
No comments:
Post a Comment