Tuesday, March 9, 2010

'தி ஹர்ட் லாக்கர்' படத்துக்கு ஆறு ஆஸ்கர் விருதுகள்

லாஸ் ஏஞ்சல்ஸ் :
ஈராக் போர் தொடர்பான திரைக்கதையை அடிப்படையாக கொண்ட "தி ஹர்ட் லாக்கர்' என்ற படம் ஆறு ஆஸ்கர் விருதுகளை பெற்றுள்ளது. "அவதார்' படத்துக்கு 3 விருதுகள் கிடைத்துள்ளன. உலக அளவில் சிறந்த திரைக்கதை, தொழில்நுட்பம், நடிப்பு, இயக்கம் போன்றவற்றை பாராட்டி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் விழாவில் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்படுகின்றன. நேற்று முன்தினம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா நடந்தது. அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த கேத்ரீன் பிகிலோ(58) என்ற பெண் இயக்குனர் தயாரித்த "தி ஹர்ட் லாக்கர்' என்ற படம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. ஈராக் போரின் போது எதிரிகள் வைத்த வெடிகுண்டுகளை அகற்றும் வீரரின் கதையை அடிப்படையாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டது.


சிறந்த திரைப்படம், திரைக்கதை, சிறந்த இயக்குனர், சிறந்த ஒலிகலவை, ஒலி தொகுப்பு, படத்தொகுப்பு ஆகியவற்றுக்காக இந்த படம் ஆறு ஆஸ்கர் விருதுகளை பெற்றுள்ளது. கேத்ரீனின் முன்னாள் கணவர் ஜேம்ஸ் கேமரூன். இவர் இயக்கிய படம் தான் "அவதார்'. இந்த படத்துக்கு மூன்று விருதுகள் கிடைத்துள்ளன. சிறந்த கேமரா, கலை இயக்கம், விஷுவல் எபெக்ட் ஆகியவற்றுக்காக அவதார் படத்துக்கு மூன்று விருதுகள் தரப்பட்டுள்ளன. "தி கிரேசி ஹார்ட்' படத்தில், கதாநாயகனாக நடித்த ஜெப் ப்ரிட்ஜஸ், சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டார். சிறந்த நடிகைக்கான விருது "தி பிளைன்ட் சைட்' படத்தில் நடித்த சான்ட்ரா புல்லக்குக்கு வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment