Monday, March 15, 2010

பிளஸ் 2 கணிதத்தேர்வில் நூற்றுக்கு நூறு கிடைக்குமா? கேள்வித்தாள் மிகவும் கடினம் என மாணவர்கள் புகார்

சென்னை : பிளஸ் 2 மாணவர்களுக்கு நேற்று நடந்த கணிதப் பாட கேள்வித்தாள், எதிர்பார்த்த வகையில் அமையவில்லை என்று பரவலாக புகார் எழுந்துள்ளது. பத்து மதிப்பெண் கேள்விகள், வழக்கத்திற்கு மாறாக கேட்கப்பட்டதுடன், 10 மதிப்பெண் கேள்விகள் பல, ஆறு மதிப்பெண் பகுதியில் கேட்கப்பட்டுள்ளன. இந்த குளறுபடிகள் காரணமாக, கணிதப் பாடத்தில், "சென்டம்' வாங்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.


கடந்த 1ம் தேதியில் இருந்து, பிளஸ் 2 பொதுத்தேர்வு நடந்து வருகிறது. நேற்று கணிதம் மற்றும் விலங்கியல் தேர்வுகள் நடந்தன. விலங்கியல் தேர்வில் பல கேள்விகள் எளிதாக இருந்ததாகவும், கணிதத் தேர்வு, எதிர்பார்ப்புக்கு மாறாக இருந்ததாகவும் மாணவர்கள் தெரிவித்தனர். மாணவர்கள் கூறும் போது, "பொதுவாக, முந்தைய ஆண்டு தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகளில் பல, மீண்டும் மீண்டும் கேட்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு பெரும்பாலான கேள்விகள், இதுவரை கேட்கப்படாத புதிய கேள்விகளாக இருந்தன. வழக்கமாக கேட்கப்படும் முக்கிய கேள்விகள், இந்த ஆண்டு இடம் பெறவில்லை. இது போன்ற கேள்விகளை எதிர்பார்க்காததால், ஒவ்வொரு கேள்விக்கும் விடையளிக்க அதிக நேரம் செலவிட நேர்ந்தது. குறிப்பாக, 10 மதிப்பெண் கேள்விகள் மிகவும் கடினமாக இருந்தன. இந்த முறை 200க்கு 200 கிடைப்பது மிகவும் சிரமம்' என்றனர். சென்னை மட்டுமில்லாமல், கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களும், இதே கருத்தை தெரிவித்துள்ளனர். இதனால், கணிதப் பாடத்தில் மதிப்பெண்கள் சரியும் என கூறப்படுகிறது.


சென்னையில் அனுபவம் வாய்ந்த கணிதப் பாட ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: கணிதத்தில், 11 பாடங்கள் உள்ளன. தேர்வில், 10 மதிப்பெண் கேள்விகள் மிகவும் முக்கியம். இந்த கேள்விகளைப் பொறுத்தவரை, வழக்கமாக முதல் ஐந்து பாடங்களில் இருந்து ஒரு கேள்வியும், அடுத்த ஆறு பாடங்களில் இருந்து ஒரு கேள்வியும் கேட்கப்படும். இதற்கு தகுந்தாற்போல், மாணவர்கள் முதல் பாதி பகுதியையோ, அல்லது அடுத்த பகுதியையோ படிப்பர். இந்த முறை, முதல் பகுதியில் இருந்து 10 மதிப்பெண் கேள்வி கேட்கவில்லை. இரண்டு கேள்விகள், பிற்பகுதியில் இருந்தே கேட்கப்பட்டுள்ளன. இதனால், மாணவர்கள், "அப்செட்டானது' உண்மை. "இயற்கணிதம்' என்ற பாடத்தில் இருந்து, அதிக மதிப்பெண் கேள்வி ஒவ்வொரு ஆண்டும் கேட்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஆண்டு கேட்கவில்லை. அதேபோல், 10 மதிப்பெண் கேள்விகள் சில, ஆறு மதிப்பெண் பகுதியில் கேட்கப்பட்டுள்ளன. இதனால், மாணவர்களுக்கு நான்கு மதிப்பெண்கள் குறைவதுடன், ஆறு மதிப்பெண்களுக்கு ஏற்ற வகையில் விடை எழுத தெரியாமல், 10 மதிப்பெண்களுக்குரிய பதிலை விரிவாக எழுதியதால் நேரமும் வீணானது. "வகைக்கெழு சமன்பாடுகள்' என்ற பாடத்தில் இருந்து, 10 மதிப்பெண் கேள்வி கேட்கப்படும். இந்த முறை, ஆறு மதிப்பெண் கேள்வி கேட்கப்பட்டுள்ளது.


மொத்தத்தில், மாணவர்கள் எதிர்பார்த்தபடி கேள்விகள் அமையவில்லை. இதனால், ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது, இந்தப் பாடத்தில், "சென்டம்' கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அப்படியே கிடைத்தாலும், "சென்டம்' எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக சரிவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே, கணிதப் பாடத்தில் 33 பேரும், விலங்கியலில் ஏழு மாணவர்களும் முறைகேடுகள் காரணமாக, பறக்கும் படை குழுவினரிடம் சிக்கினர். அதிகபட்சமாக, கடலூர் மாவட்டத்தில் மட்டும் 22 மாணவர்கள் பிடிபட்டுள்ளனர்.


சரியும் "சென்டம்': பிளஸ் 2 கணிதப் பாடத்தில், "சென்டம்' வாங்கும் மாணவர்களின் எண்ணிக்கை, ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வருகிறது. கடந்த 2008 தேர்வு முடிவில், 11 ஆயிரத்து 605 மாணவர்கள், 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றனர். இந்த எண்ணிக்கை, 2009ல் 5,112 ஆக குறைந்துள்ளது. இந்த ஆண்டு தேர்வு கடினம் என்று மாணவர்கள் கூறியிருப்பதால், "சென்டம்' எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டை விட மேலும் குறையுமா என்ற அச்சம் எழுந்துள்ளது.

No comments:

Post a Comment