Monday, March 1, 2010

யாருக்காக, இது யாருக்காக?

மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்த பொது நிதிநிலை அறிக்கையை  எல்லோரும் பாராட்டி விட்டார்கள். பிரதமர் மன்மோகன், உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஆகியோரின் மோதிரக் கை குட்டுப் பட்டுவிட்டார் பிரணாப்ஜி. இந்தியத் தொழில்துறைகளும் சளைக்கவில்லை. வெளிப்படையாகவும், கொஞ்சம் வருந்துவதுபோன்ற நடிப்புடனும் பாராட்டவே செய்துள்ளனர். சமநிலை கொண்ட நிதிநிலை அறிக்கை என்றெல்லாம்கூட வர்ணித்து விட்டார்கள். இந்த நிதிநிலை அறிக்கையில் மகிழ்ச்சி அடையாத ஒரே நபர்-திருவாளர் பொதுஜனம் மட்டுமே!பெட்ரோல், டீசல் உற்பத்தி வரி ரூ.1 உயர்த்தப்பட்டுள்ளதால், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.94-ம், டீசல் விலை ரூ.2.76-ம் உயர்ந்துவிட்டது. நள்ளிரவிலேயே அமலுக்கு வந்த இந்த விலை உயர்வைத் தொடர்ந்து, சரக்குகளைக் கொண்டு செல்லும் லாரி வாடகை டன்னுக்கு ரூ.1,000 என்கிற அளவில், அதாவது 10 சதவீதம் உயர்த்தப்பட்டது. நிதிநிலை அறிக்கை வெளியான  மூன்றாம் நாளில் காய்கறி, பழங்கள், பருப்பு, அரிசி மீது அந்த விலை உயர்வு பரவலாக விழுந்தது. இவற்றின் விலை கிலோவுக்கு ரூ.2 முதல் 4 வரை உயர்ந்துவிட்டது. ஆட்டோ கட்டணத்தை வழக்கம்போல அவர்களாகவே உயர்த்திக்கொண்டு விட்டார்கள்.இந்த பட்ஜெட்டினால் பணவீக்கம் ஏற்படாது, விலைகள் உயராது என்றெல்லாம் பிரதமரும் பாராட்டும் நபர்களும் கூறினாலும், ஒவ்வொரு வீட்டிலும் சாதாரணப்  பொருள்களின் விலையேற்றத்தை உடனடியாக உணரத் தொடங்கிவிட்டனர். இதன் தாக்கம் மெல்ல அடுத்த பொருள்களின் மீது விழுவதற்கு இன்னும் சில நாள்கள் ஆகும்.பெட்ரோலியப் பொருள்களின் விலையை உயர்த்த வேண்டும் என்று கிரிட் பாரிக் குழு அளித்த அறிக்கையில் பெட்ரோலுக்கு ரூ.4.94-ம், டீசலுக்கு ரூ.3.20-ம் உயர்த்த வேண்டும் என்று தெரிவித்திருந்தது. தற்போது நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, ஏறக்குறைய இந்தக் குழு திருப்தி அடைகிற அளவுக்கு விலை உயர்வைக்  கொண்டுவந்து நிறுத்திவிட்டார். மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு விலையையும் உயர்த்தினால், அதிருப்தி உச்சகட்டத்துக்கே போய்விடும் என்ற பயத்தின் காரணமாக அதை மட்டும் நிறுத்தி வைத்திருக்கிறது அரசு.பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு வழிவகுத்த மத்திய நிதிநிலை அறிக்கை, பெட்ரோல், டீசலில் ஓடும் கார் தொழிலுக்கும், பெட்ரோலியப் பொருள்கள் சுத்திகரிப்புத் தொழிலுக்கும் காட்டியுள்ள கருணை கடைக்கண் பார்வையைக் காணும்போது, மத்திய அரசின் நோக்கம் அம்பலப்பட்டுப்போகிறது.கார்கள் உற்பத்தி வரி 8 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கார்களின் விலை வகைக்கு ஏற்ப ரூ.6,500 முதல் ரூ.25,000 வரை உயரும் என்று சொல்கிறார்கள். இந்த 10 சதவீத உற்பத்தி வரி பழைய நிலைமைதான். சென்ற ஆண்டு 8 சதவீதமாகக் குறைக்கப்பட்டு, இப்போது மீண்டும் 10 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. கார்களை வாங்குவோர் ஏழைகள் அல்லர். கார்களின் உற்பத்தி வரி 25 சதவீதமாக உயர்ந்தாலும், அதைப் பற்றிக்  கவலைப்படாமல், வாங்குவதற்குக் காத்திருக்க அவர்கள் தயார். ஆனால் அந்தப்  பிரிவினர் மீது வரியை உயர்த்தவில்லை. வரியை உயர்த்தி, அதனால் கார் விற்பனை குறைந்துவிட்டது என்று கார் தயாரிக்கும் நிறுவனங்கள் முதலைக் கண்ணீர் வடிக்குமே! ஏழையின் முதுகு வலிக்கலாம். கார் தயாரிப்பு நிறுவனங்களின் கண்களில் கண்ணீர் வரலாமா? இன்னொரு அதிர்ச்சியையும் தருகிறார்கள். அதாவது சொகுசுக் கார்களின் உற்பத்தி வரி 20 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. சொகுசுக் கார்களின் விலை குறைந்தது ரூ.1 கோடி. அதன் கூடுதல் சொகுசுகளுக்கு ஏற்ப மேலும் விலை கூடும். இதை வாங்குபவர்கள் எல்லோருமே பெரும்பணக்காரர்கள். அரசியல் பெரும்புள்ளிகள். 22 சதவீதம் என்ன, 50 சதவீதம் உற்பத்தி வரி உயர்வு என்றாலும் இவர்கள் வாங்கத்தான் போகிறார்கள். சொகுசுக்குப் பழகிப்போன இவர்களால் எப்படி ஆண்டுதோறும் புதுப்புது சொகுசுக் கார்களை மாற்றாமல் இருக்க முடியும்?கச்சா எண்ணெய் மீது 5 சதவீத இறக்குமதி வரியை அரசு விதித்திருக்கிறது. இதனால் தனியார் நிறுவனங்களான எஸ்ஸôர், ரிலையன்ஸ் நிறுவனங்களின் உற்பத்திச்  செலவு அதிகரிக்கும் என்கிறார்கள். ரிலையன்ஸ் நிறுவனம் மட்டுமே ஆண்டுக்கு 3.3 கோடி டன் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்கிறது. ஆகவே, தற்போதைய வரிவிதிப்பின்படி இந்த நிறுவனத்துக்கு ரூ.5,100 கோடி செலவு ஏற்படும். ஆனால் அதே சமயம், இந்த நிறுவனம் இக் கச்சா எண்ணெய்யை சுத்திகரிப்பு செய்து, அதில் 2.9 கோடி டன் பெட்ரோலியப் பொருளை ஏற்றுமதி செய்யும். ஆனால் அதற்கு வரி செலுத்த வேண்டியிருக்காது. இது எப்படி இருக்கு?செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் இந்த நிதிநிலை அறிக்கை சாதகமாக அமைந்துள்ளது. செல்போன் அனைவருக்கும் தேவையான இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது என்றாலும், மூன்று மாதத்துக்கு ஒரு முறை செல்போனை மாற்றுவோர் உயர் வருவாய்ப் பிரிவினர், மேல்வருமானம் உள்ள அரசு ஊழியர்கள் ஆகியோர்தாம். இவர்களும் அதன் விலையைப் பற்றி கவலைப்படுவதே இல்லை.எந்தெந்தத் தொழில்துறை உற்பத்திக்கு வரவேற்பு இருக்கிறதோ, விலையைப் பற்றி வாங்குவோர் கவலைப்படுவதே இல்லையோ அத்தகைய தொழில்துறைக்கெல்லாம் இந்த நிதிநிலை அறிக்கையில் வரிச்சுமை மிகக் குறைவாக இருக்கிறது. ஆனால், வலி தாங்கிக்கொள்ள முடியாத, ஏற்கெனவே உணவுப் பொருள்களின் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள பொதுஜனத்தின் மீது, பெட்ரோல் விலை உயர்வு என்ற ஒன்றினால் மட்டுமே, மறைமுகமாக அனைத்துச் சுமைகளையும் மேலும் ஏற்றி வைத்துள்ளது இந்த நிதிநிலை அறிக்கை. அதாவது, தனியார் நிறுவனங்களுக்குச் சாதகமாகவும், தனிமனிதனுக்குப் பாதகமாகவும் இருக்கிறது.ரயில் நிதிநிலை அறிக்கையில், பயணிகள், சரக்குகள் கட்டணம் உயர்த்தப்படாததன் அடிப்படை நோக்கமே, உணவுப் பொருள் விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டுக்கு கட்டண உயர்வு வேண்டாமே என்ற இரக்கம்தான். ரயிலின் இரக்கம் நிதியில் இல்லாமல் போனது ஏனோ!பிரணாப் முகர்ஜியின் இந்த நிதிநிலை அறிக்கையைக் கூர்ந்து கவனித்து, படித்து முடிக்கும்போது மனதில் எழும் கேள்வி இதுதான்: யாருக்காக, இந்த நிதிநிலை அறிக்கை யாருக்காக?

No comments:

Post a Comment