Friday, March 5, 2010

கடைசி ஓவரில் வீழ்ந்தது வெ.இண்டீஸ் *ஜிம்பாப்வே "திரில்' வெற்றி

கயானா: 
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், ஜிம்பாப்வே அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் "திரில்' வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள ஜிம்பாப்வே அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி கயானாவில் நடந்தது.
சிபண்டா அபாரம்:"டாஸ்' வென்று முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணிக்கு மசகட்சா (41) நல்ல துவக்கம் கொடுத்தார். அபாரமாக ஆடிய சிபண்டா (95), சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த தைபு (56) அரைசதமடித்தார். மற்ற வீரர்கள் ஓரளவு ரன்கள் சேர்க்க, ஜிம்பாப்வே அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 254 ரன்கள் எடுத்தது.
"டாப்-ஆர்டர்' பலம்:எட்டக்கூடிய இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் கெய்ல் (57), பாரத் (50), சந்தர்பால் (70) உள்ளிட்ட "டாப்-ஆர்டர்' பேட்ஸ்மேன்கள் சூப்பர் துவக்கம் அளித்தனர். "மிடில்-ஆர்டரில்' வந்த வீரர்கள் ஏமாற்ற, கடைசி ஓவரில் வெற்றி பெற 15 ரன்கள் தேவைப்பட்டது.
"திரில்' வெற்றி:மசகட்சா வீசிய கடைசி ஓவரின் முதல் மூன்று பந்தில் மில்லர் 11 ரன்கள் (ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி, ஒரு ரன்) சேர்த்தார். அடுத்து இரண்டு பந்தில் ஸ்மித், பென் அவுட்டானார்கள். கடைசி பந்தில் 4 ரன் தேவைப்பட்ட நிலையில், ரோச் ஒரு ரன் மட்டுமே எடுத்தார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 252 ரன்கள் எடுத்து, 2 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது.
துல்லியமாக பந்துவீசிய மசகட்சா 3 விக்கெட் வீழ்த்தினார். பேட்டிங்கில் அசத்திய சிபண்டா, ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம் ஜிம்பாப்வே அணி கரீபிய மண்ணில், ஒருநாள் போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்து, 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. முன்னதாக நடந்த "டுவென்டி-20' போட்டியிலும் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றது.

No comments:

Post a Comment