Monday, March 29, 2010

கணவரின் உதவியால் திண்டுக்கலில் டெபுடி கலெக்டரான இளம்பெண்



திண்டுக்கல் : நகைத் தொழிலாளியை திருமணம் செய்த பெண், கணவரின் தூண்டுதலால் குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று, திண்டுக்கல் மாவட்டத்தில் 'டெபுடி கலெக்டராக' பயிற்சி பெற்று வருகிறார்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியைச் சேர்ந்த நகைத் தொழிலாளி முத்துசாமியின் மகள் துர்காதேவி. ஏழ்மை நிலையிலும் பி.எஸ்சி., படித்த இவருக்கும், அரவக்குறிச்சியைச் சேர்ந்த 10ம் வகுப்பு படித்த நகைத் தொழிலாளி திருமூர்த்திக்கும் 2001ம் ஆண்டு திருமணம் நடந்தது.ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுத துர்காதேவி ஆசைப்பட்ட போது, கணவர் திருமூர்த்தி, மனைவிக்கு ஊக்கம் அளித்தார். குழந்தை பிறந்ததால் உடனடியாக படிப்பை துவங்க முடியவில்லை. குழந்தை சிறிது வளர்ந்த நிலையில், 2004ம் ஆண்டுக்கு பின் படிக்க ஆரம்பித்தார். மனைவிக்கு எந்த பிரச்னையும் வராத அளவு, குழந்தையை வளர்ப்பது உட்பட அத்தனை பொறுப்புகளையும் திருமூர்த்தி ஏற்றுக் கொண்டார். மூன்று முறை ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுதி தோல்வியடைந்த துர்காதேவி, 2006-07ம் ஆண்டு குரூப்-1 தேர்வு எழுதி வெற்றி பெற்றார். தற்போது, திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்த் துறையில் டெபுடி கலெக்டராக பயிற்சி பெற்று வருகிறார்.

இது பற்றி அவர் கூறியதாவது:நான் படித்து டெபுடி கலெக்டராக வந்ததற்கு என் கணவரே முழு காரணம். சென்னையில் தங்கி படித்த போது, பலமுறை நான் மனம் சோர்ந்து வீட்டிற்கு திரும்ப வந்து விடுவேன். அப்போதெல்லாம், 'குழந்தை, குடும்பத்தை நான் கவனித்துக் கொள்கிறேன்; நீ கட்டாயம் படித்து தேர்வு எழுத வேண்டும்' எனக் கூறி ஊக்கப்படுத்தினார். தற்போது நான் ஐ.ஏ.எஸ்., தேர்வை தொடர்ந்து எழுதி வருகிறேன். அதிலும் விரைவில் வெற்றி பெற்று விடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. எடுத்த காரியம் எதையும் முடித்துக் காட்ட வேண்டும் என்பதே என் விருப்பம். படித்து தேர்வு எழுத விரும்பும் பெண்களுக்கு, நான் பயிற்சி அளித்து வருகிறேன். வழிகாட்டுதல் தேவைப்படும் பெண்களுக்கு உதவ தயாராக இருக்கிறேன். இவ்வாறு துர்காதேவி கூறினார்.

No comments:

Post a Comment