Monday, March 1, 2010

பெரியாறு அணையில் பராமரிப்பு: மேலும் ஒரு உரிமை பறிபோனது



கூடலூர் : பெரியாறு அணையில் தமிழக பொதுப்பணித்துறையினர் சார்பாக நடந்து வந்த பராமரிப்பு பணிகளை கேரள போலீசார் தடுத்து நிறுத்தினர். பெரியாறு அணையில் தேங்கியிருக்கும் நீரை தமிழகம் பயன்படுத்திக் கொள்ள ஆண்டுதோறும் குத்தகைத் தொகையாக, இரண்டு லட்சத்து 57 ஆயிரம் ரூபாயை கேரள அரசுக்கு தமிழக அரசு செலுத்தி வருகிறது. இதனால், பெரியாறு அணை பராமரிப்பு தமிழக பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 15 தினங்களாக பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. ஷட்டர் பகுதி, காலரி பகுதிகள் பெயின்ட் அடிக்கும் பணி முடிவடைந்து, பெரியாறு அணையில் வர்ணம் பூசும் பணி நடந்தது. அணைப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள கேரள போலீசார் திடீரென வந்து, தமிழகப்பொதுப்பணித்துறையினர் நடத்தி வர்ணம் பூசும் பணியைத் தடுத்து நிறுத்தினர். "இது வழக்கமான பணிதான்', என தமிழக பொதுப்பணித்துறையினர் கூறியும், "இது கேரள அரசின் உத்தரவு, வேலை எதுவும் செய்யக்கூடாது, கேரள அரசிடம் அனுமதி கடிதம் பெற்று வந்து பணிகளை செய்யுங்கள்', எனக்கூறி பராமரிப்பு பணிகளை செய்ய விடாமல் தடுத்து விட்டனர். இதனால், கேரள போலீசுக்கும், தமிழக பொதுப்பணித்துறையிருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பெரியாறு அணைப்பிரச்னை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடந்து வந்தாலும், கேரள அரசின் கெடுபிடிகள் அரங்கேறிக் கொண்டு உள்ளது.


பெரியாறு அணைக்கு எவ்வித கட்டுபாடும் இன்றி, சென்றுவந்த தமிழகப் பொதுப்பணித்துறையினர், கடந்த சில ஆண்டுகளாக கேரள வனத்துறை அலுவலகத்தில் கையெழுத்து போட்டு விட்டு செல்கின்றனர். இவ்வாறு உரிமைகளை இழந்து வரும் நிலையில், வழக்கமாக செய்து வரும் பராமரிப்பு பணிகளையும் செய்ய, கேரள போலீசார் தடுத்து வருவது மேலும் சிக்கலை உருவாக்கியுள்ளது. ஐந்து மாவட்ட விவசாய சங்க செயலாளர் கே.எம்.அப்பாஸ் கூறுகையில், ""இப்பிரச்னை குறித்து விவசாயிகள் சார்பில் தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்ற பின், போராட்டத்தில் இறங்க உள்ளோம்,' என்றார்.

No comments:

Post a Comment