Monday, March 22, 2010

போவது எங்கே? ஆண்டுக்கு 5 ஆயிரம் பேர் மாயம்

பொதுச் சுவர்களில் ஒட்டப்பட்ட சினிமா போஸ்ட்களுக்கு இடையில் Ôகாணவில்லைÕ என்ற விளம்பரப் போஸ்டரையும் காண முடியும். அஞ்சலி போஸ்டர் அளவுக்கு கூட அது நம்மை பாதிப்பதில்லை. படிப்பவர்கள் கூட பத்தாவது நிமிடத்தில் யாரோ எவரோ என்று மறந்து விடுகின்றனர். ஆனால் இது மறக்கவும், மறைக்கவும் வேண்டிய விஷயமா? 
தமிழகத்தில் மட்டும் கடந்த 2009ம் ஆண்டில் 4762 பேர் காணாமல் போயுள்ளனர். நீண்ட தேடலுக்கு பின்னர் அவர்களில் 3600 பேர் மீட்கப்பட்டபோதிலும், இன்னும் 1162 பேர் எங்கிருக்கிறார்கள் என்றும் தெரியவில்லை; என்ன ஆனார்கள் என்றும் தெரியவில்லை. ஏன்? இந்த ஆண்டில் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் மட்டும் காணாமல் போனவர் பட்டியலில் 876 பேர் இடம் பிடித்துள்ளனர். அவர்களில் 488 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். மீதி 388 பேர் எங்கே?
இப்படி மாதத்திற்கு மாதம், ஆண்டுக்கு ஆண்டு காணாமல் போகிறவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க என்ன காரணம்? அவர்களை கண்டுபிடிக்க முடியாமல் போவதற்கு யார் காரணம்? 
ஒருவர் காணாமல் போவதால், அவரது குடும்பம், உறவினர்களின் பதைப்புக்கு அளவுகள் ஏதுமில்லை. அதேபோல் சில Ôகாணவில்லைÕ சம்பவங்களின் பின்னணிகள் பயங்கரமானவை. சமூக சீர்கேடுக்கு வழிவகுப்பவை. பொதுவாக காணவில்லை விவகாரம் இரண்டு வகைப்பட்டது. ஒன்று, அவர்களாகவே விரும்பி காணாமல் போவது. இன்னொன்று, அடுத்தவர்கள் விரும்பாததினால் காணாமல் போவது. முதல் வகையை விட இரண்டாவதின் எண்ணிக்கை அதிகம். அதன் பின்னணி மிகவும் பயங்கரம். 
அவர்களாகவே காணாமல் போகிறவர்களில் காதல், கள்ளக்காதல், ஆன்மிக நாட்டம், கடன், தகராறு, பெற்றோர் அல்லது பிள்ளைகள் புறக்கணிப்பு, தேர்வில் தோல்வி, சினிமா மோகம் என காரணங்களை அடுக்கலாம். 
இனி பிரச்னை இருக்காது என்ற எண்ணம் ஏற்படும்போது வீடு திரும்புகின்றனர். பயம் நீங்காதவர்கள் ஊர் திரும்புவதில்லை. ஓடிச் செல்பவர்கள் இளவயதினராக இருந்தால் காலப்போக்கில் குற்றவாளிகளாக உருவெடுக்கின்றனர். முதியவர்களாக இருந்தால் வேறு வழி, பிச்சைதான். பெண்களாக இருந்தால் நடைபெறும் கொடுமைகள் பட்டியலில் அடங்காது. காதலுக்காக ஓடும் பெண்களுக்கு காதலன் நல்லவனாக கிடைத்தால் பிரச்னை இல்லை. பொல்லாதவனாக இருந்தால் விற்பனை பொருளாகி வீணாகி விடுவதும் உண்டு. 
விரும்பி காணாமல் போகிறவர்களில் 23 முதல் 50 சதவீதத்தினர் ஏதோ ஒரு காலக்கட்டத்தில் சம்பந்தப்பட்டவர்களால் கண்டறியப்படுகின்றனர். மற்றவர்களின் விருப்பத்திற்காக காணமல் போகிறவர்கள், அதாவது கடத்தப்படுகிறவர்கள் திரும்ப கிடைப்பது அரிது. பணம், சொத்து, கள்ளக்காதல், வருமானம், சாதி, அரசியல், மருத்துவம் ஆகிய காரணங்களுக்காக கடத்தப்படுகிறவர்கள் பெரும்பாலும் கொல்லப்படுகின்றனர்.

தமிழகத்தில்...

காணாமல் போனவர் பற்றிய விவரங்களை மாநில அளவில் சேகரித்து, அதுபற்றி அரசு மற்றும் தனியார் ஊடகங்கள் மூலம் வெளியிடும் நடைமுறை தற்போது உள்ளது. தமிழகத்தில் இதுபோன்ற வழக்கு விவரங்களை மாநில கிரைம் பிராஞ்ச் சிஐடி பிரிவுக்கு தரப்பட வேண்டும். அவர்கள் அதை போலீஸ் துறையின் கிரிமினல் இன்டலிஜென்ஸ் கெஜட்டில் வெளியிடுவார்கள். அந்த கெஜட் அனைத்து ஸ்டேஷன்களுக்கும் மட்டுமல்ல. மற்ற மாநில சிஐடி பிரிவுக்கும் அனுப்பப்படுகிறது. போலீஸ் இணையதளத்திலும் இந்த விவரங்கள் படத்துடன் வெளியிடப்படுகிறது. 
காணாமல் போனவர் வழக்குகளில் கண்டுபிடிப்பு விகிதம் அதிகரிப்பதற்கு, போலீஸ் புலன்விசாரணை தான் காரணம் என்பதில்லை. பல வழக்குகளில் கண்டுபிடிப்புக்கு கைகொடுப்பது விளம்பரமாகத்தான் இருக்கிறது. போதுமான விளம்பரம் இல்லாமை, பல பேரை கண்டுபிடிக்க முடியாமல் போனதற்கு முக்கிய காரணம்.

No comments:

Post a Comment