Monday, February 22, 2010

'பாஸ்' இருந்தும் பஸ்சில் இருந்து இறக்கிவிடப்படும் பார்வையற்றோர்

சிவகங்கை : கண்பார்வையற்றவர்கள், அவர்களுக்கு வழங்கும் இலவச பஸ்பாசில், பயணம் செய்யும்போது, கோட்டம் மாறி பயணிப்பதாக கூறி, சில கண்டக்டர்கள் நடுவழியில் இறக்கிவிடுகின்றனர்.கண்பார்வையற்றோருக்கு, அரசு வேலை, கல்வி உதவியில் முன்னுரிமை தருகிறது. இவர்கள், பள்ளி, கல்லூரி படிப்பு, வேலைக்காக வெளியூர் செல்ல, பார்வை குறைபாடிற்கு ஏற்ப இலவச பஸ் பாஸ் வழங்கப் பட்டுள்ளது.

இதற்கான கட்டணத்தை அரசு, அந்தந்த கோட்டங்களுக்கு, வழங்கிவிடுகிறது. இவர்கள், அரசு குறிப்பிட்டுள்ள, கோட்ட பஸ்களில் மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என்ற விதிமுறை இருந்தாலும், கண் பார்வையில்லாதவர்கள் இதை கவனிக்க முடியாது. தெரியாமல், பிற கோட்ட பஸ்களில் ஏறிவிட்டால்,கண்டக்டர்கள், அவர்களை டிக்கெட் எடுக்குமாறு தெரிவிக்கின்றனர். எடுக்க தவறினால், நடுவழியில் இறக்கி விடுகின்றனர். இதனால், அவர்கள் நடுவழியில் சிரமப்படுகின்றனர்.

காளயார்கோவில் கர்ணன் (கண்பார்வை அற்றவர்) கூறியதாவது:பஸ் ஸ்டாண்டில் ஏறும் போது, எக்கோட்டத்தை சேர்ந்தவண்டி என்று கேட்டு ஏறலாம். நடுவழியில் நிற்கும் போது எந்த கோட்ட வண்டி என்று எப்படி கேட்டு ஏறுவது. அனைத்து கோட்ட வண்டிகளிலும் செல்ல, அரசு அனுமதி அளிக்கவேண்டும்.

கண்டக்டர் காசிராஜன் (தேனிகோட்டம்) கூறியதாவது:அவர்களுக்கு வழங்கிய பாசில் குறிப்பிட்ட, கோட்ட வண்டிகளில் மட்டமே ஏறவேண்டும். அவர்களின், பயணசெலவை அரசு, குறிப்பிட்ட கோட்டத்திற்கு மட்டும் தான் தரும். மாற்று வண்டியில் ஏறுவதால் டிக்கெட் பரிசோதகர் வரும் போது, நாங்கள் பாதிக்கப்படுவோம்.

துணை பொதுமேலாளர் பாலகிருஷ்ணசாமி கூறியதாவது:கண் பார்வையற்றவர்கள் அந்த மாவட் டத்திற்குள் எந்த கோட்ட வண்டியிலும் பயணம் செய்யலாம். இது போன்று நடுவழியில் இறக்கிவிடும் கண்டக்டர்கள், மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

No comments:

Post a Comment