ஆஸ்டின், பிப். 19-
அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலத்தின் தலைநகரான ஆஸ்டின் நகரில் எப்.பி.ஐ. (போலீஸ் அலுவலகம்) அடுத்து 7 மாடி கட்டிடம் உள்ளது. இங்கு வரிவசூலிக்கும் அலுவலகம் உள்ளது. அங்கு நேற்று காலை 9.40 மணியளவில் (இந்திய நேரப்படி இரவு 10 மணி) அந்த கட்டிடத்தின் மீது ஒரு சிறிய விமானம் பறந்து வந்து திடீரென மோதியது. 
இதையடுத்து அந்த விமானம் வெடித்து சிதறியது. இதனால் அந்த கட்டிடம் தீப்பிடித்து எரிந்தது. உடனே தீயணைக்கும் படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். அக்கட்டிடத்தில் இருந்த 200 பேரை பாதுகாப்பு படையினர் வெளியேற்றினார்கள்.  
இச்சம்பவத்தில் அந்த கட்டிடத்தில் இருந்த 2 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். 
அது தீவிரவாதிகளின் தற்கொலை படையினரின் தாக்குதலாக இருக்கலாம் என்று கருதி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் இது தீவிரவாதிகளின் சதிவேலை அல்ல. அந்த கட்டிடத்தின் மீது குட்டிவிமானத்தை மோத விட்டவர் ஒரு கம்ப்யூட்டர் என்ஜினீயர் அவரது பெயர் ஜோசப் ஆண்ட்ருஸ்டேக் (வயது 53) ஆஸ்டின்நகரை சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது.  
விமானத்தை ஓட்டி வந்த இவர் கட்டிடத்தின் மீது மோதிய போது இறந்து விட்டார். 
அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினார்கள். அவரது “வெப்சைட்டில்” ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். அதில், தனக்கும், வரிவசூல் செய்யும் அதிகாரிகளுக்கும் இடையே தகராறு இருந்ததாக தெரிவித்துள்ளார். எனவே, அவர்களை பழிவாங்க இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

No comments:
Post a Comment