உன்னோடு காடொன்றுக்குள்
வழிதவறி அலைந்த கனவை
இப்பொழுதும் நான் கண்டேன்
அடிக்காலில் கூச்சங்கள் காட்டியபடி
நம்மை ஏதேதோ பூச்சிகள் விரட்டித் துரத்தின
நடந்துவந்த சிங்கமொன்று நம்மை
சீட்டு விளையாட வாவென அழைத்தது
உயிர் தேயும் அச்சம் கலைந்த நாம்
வனராசாவின் தாடி பின்னி
சீட்டுகளால் அலங்கரித்து
செல்லமாக விளையாடினோம்
சட்டெனக் காடு
கடலாகிற்று
நாம் மூழ்கிடாவண்ணம்
ஒட்டகச் சிவிங்கிகளிரண்டு நம்மை
தம் நீள் கழுத்திலேற்றிக் கொண்டன
அழுத சிங்கத்தைத் தேற்றி
உலக எல்லை வரை கடலுக்குள்ளால்
சிவிங்கிகளின் கழுத்துக்களைப் பற்றியபடி
நாம் போகத் துவங்கினோம்
கடல் கன்னி நீயென
ஏதோ ஒரு நீரினம் உன்னைச் சொன்னது
என்னைக் குறித்து
என்ன சொன்னதென நினைவில்லை
நாளைய கனவில்
கேட்டுச் சொல்கிறேன்
இப்பொழுது நீ உறங்கு
No comments:
Post a Comment