Tuesday, February 23, 2010

இப்போதே வெயில் சுட்டெரிப்பது ஏன்


முன்னர் எல்லாம் கோடை காலம் என்றால் ஏப்ரல், மே தான். சில ஆண்டுகளாக மார்ச் துவக்கத்திலேயே கடும் வெயில் அடிக்கிறது. ஆனால் இந்த ஆண்டு எப்போதும் இல்லாத அளவிற்கு பிப்ரவரி இரண்டாம் வாரத்திலேயே கடும் வெப்பம் நிலவுகிறது. மே மாதத்தில் சுடும் சூரியன் இப்போதே சுட்டெரிக்கிறது.

காலை குளிர் இல்லை. மாலை தென்றலும் இல்லை. ஏன் இந்த திடீர் காலநிலை மாற்றம்? "என்ன ஆச்சு பூமிகோளத்திற்கு' என்று நாம் வியக்கிறோம். ""இந்த மாற்றத்திற்கு காரணம் மனிதர்களும், அவர்களின் கண்டுபிடிப்புகளும் தான்,'' என்கிறார் மதுரை விவசாயக் கல்லூரி உழவியல் துறைத் தலைவர் வ. கணேஷ் ராஜா.

அவர் கூறியதாவது:கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் வரை, ஆண்டு வெப்பம் உலகளவில் 0.6 டிகிரி செல்சியஸ் அளவு அதிகரித்தது. தற்போது ஆண்டு தோறும் 0.73 டிகிரி செல்சியஸ் ஆக அதிகரிக்கிறது. கடந்தாண்டு பிப்., 23ல் மதுரையின் வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ். பிப்., 25, 26களில் வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் செல்வதற்கு வாய்ப்புள்ளது. கடந்த ஜனவரியில் பனியின் அடர்த்தி 0.210 மில்லிமீட்டர். தற்போது 0.110 மில்லிமீட்டர் ஆக குறைந்துள்ளது. ஒரு அறையில் நூறு பேர் இருக்கும் போது, மின்விசிறி ஓடினால் ஒருமணி நேரம் உட்காரலாம். மின்விசிறி இல்லாவிட்டால், 10 நிமிடம் கூட இருக்க முடியாது. அறை வெப்பமாகிவிடும். வியர்வை, மயக்கம் ஏற்படும். இதுதான் வெப்பமயமாக்கல். மூச்சு விடும் போது கார்பன் டை ஆக்சைடை, நாம் மட்டும் வெளியிடவில்லை. நெற்பயிரிலிருந்து மீத்தேன், வாகனங்களிலிருந்து கார்பன் மோனோ ஆக்சைடு, பெட்ரோலிய தொழிற்சாலையிலிருந்து நைட்ரஸ் ஆக்சைடு, கார்பன் டை ஆக்சைடு வாயுக்கள் வெளியேறுகின்றன.

மற்ற தொழிற்சாலைகளிலிருந்து சல்பர் டை ஆக்சைடு, கார்பன் டை ஆக்சைடு, புகை மற்றும் மின்சார உற்பத்தியிலிருந்து எல்லாவாயுக்களும் வெளிவருகின்றன. வீடுகளில் ஏ.சி., பிரிட்ஜ் பயன்படுத்தும் போது குளோரோ புளுரோ கார்பன் எனப்படும் பசுமை இல்ல வாயுக்கள் வெளியேறுகின்றன. பத்தாண்டுகளுக்கு முன்புவரை இவ்வளவு வாயுக்கள் இல்லை.சுற்றுப்புறத்தில் சேரும் வாயுக்கள் அனைத்தும் வளிமண்டலத்தில் சேர்ந்து வெப்பமாகிறது. வாயுமண்டலம் வெப்பமாவதால் ஆக்சிஜன் குறையும். ஓசோன் படலம் என்பது சுத்தமான ஆக்சிஜன் நிரம்பியது. வெப்பத்தால், ஓசோன் படலத்தின் அடர்த்தி குறைத்துவிடுகிறது. இதனால் புறஊதா கதிர்கள் நேரடியாக சூரியனிலிருந்து வெளியேறி பூமியைத் தாக்கும்.

தென்துருவ, வடதுருவ பனிக்கட்டிகள், போர்வையாக இருந்து வெப்பத்தை குறைத்து நம்மை காக்கிறது. தொடர்ந்து வெப்பமயமாதலால் பனிக்கட்டிகள் ஆறு சதவீதம் உருகிவிட்டது. ஐஸ்கட்டிகள் உருகினால் ஆறு, கடலில் நீர்மட்டம் உயர்ந்துவிடும். இயற்கை நமக்கு கொடுத்த இருபெரும் பாதுகாப்பு வளையங்களான ஓசோன் படலம், பனிப்பாறை இரண்டையும் நாம் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறோம். சூரியவெப்பத்தின் அளவு ஒரே மாதிரியாக இருந்தால் கூட, சுற்றுப்புறத்தில் வளிமண்டலத்தில் சேரும் வாயுக்களின் அளவு அதிகரிக்கிறது.

இதனால் நாளுக்கு நாள் வெப்பம் அதிகமாகிறது. தற்போது உபயோகிக்கும் பொருட்களிலிருந்து வெளிவரும் வாயு மற்றும் புகையை 40 சதவீதமாக குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அப்படி செய்தால், தற்போதுள்ள வெப்பநிலையையாவது தக்கவைக்கலாம். ஒரு டிகிரி செல்சியஸ் அளவு வெப்பம் அதிகரித்தால், விவசாயத்தில் 40 சதவீத விளைச்சல் குறைந்து விடும். உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய சூழ்நிலையில், அதிக வெப்பநிலையால் உற்பத்தி குறைந்துவிடும் என்று எச்சரிக்கிறார் பேராசிரியர் கணேஷ்ராஜா.

No comments:

Post a Comment