Monday, February 22, 2010

வரும் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி இருக்கும்: பாதுகாப்புக்கு முக்கியத்துவம்; ஜனாதிபதி உரை



புதுடில்லி : நாட்டில் எல்லை தாண்டிய பயங்கரவாதம் மற்றும் விலைவாசி பிரச்னை பெரும் சவாலாக உள்ளது என்றும், இதனை சமாளிக்க அரசு பெரும் நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் பார்லி., குழு கூட்டு கூட்ட அரங்கில் பேசிய ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் உரை நிகழத்துகையில் குறிப்பிட்டார். முன்னதாக அவர் ராணுவ வீரர்கள் அணிவகுப்பு‌டன் அழைத்து வரப்பட்டார். பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று ( திங்கள்கிழமை) துவங்கியது. இந்த பட்ஜெட் கூட்டத்‌தொடரில் அனைத்துக்கட்சியினரும் , இடையூறு இல்லாமல் ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும், ஒத்துழைப்பு நல்க வேண்டும் என பிரதமர் மன்மோகன்சிங் இன்று பார்லி., வளாகத்தில் நிருபர்களிடம் பேசுகையில் கூறினார்.




முதல்நாளான இன்று இரு சபைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் உரை நிகழ்த்தினார். காலை சரியாக 11.00 மணியளவில் அவர் பேச்சை துவக்கினார். 11. 53 க்கு முடித்தார். தேசிய கீதத்துடன் துவங்கிய கூட்டத்தில் அவர் தொடர்ந்து அரசின் சாதனைகள் மற்றும் எதிர்கொண்டுள்ள பிரச்னைகள் முன்னேற்ற பணிகளுக்கு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.




ஜனாதிபதி பேச்சு முழு விவரம் : நாட்டில் எல்லை தாண்டிய பயங்கரவாதம் , நக்சல்கள் அச்சுறுத்தல் ஆகியன நாட்டில் பெரும் சவாலாக இருக்கிறது. காஷ்மீர் ஊடுருவல் கவலை அளிக்கிறது. இதனை ஒழிக்க முழு மூச்சாக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பிரச்னைகள் சமாளிக்க நாம் நமது படை பலத்தை மேலும் வலுவான நிலைக்கு கொண்டு வரவும், இந்த துறையில் நவீனத்தை புகுத்தவும் கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவோயிஸ்ட் நக்சல்கள் ஆயுதங்களை கீழே போட்டு பேச்சு வார்த்தைக்கு வரவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் உணவு உற்பத்தி பெருக்கிட விவசாயிகளை ஊக்குவித்து வருகிறோம். பருவ மழை பொய்த்து விட்டதால் வேளாண் பொருள் உற்பத்தி குறைந்து விலைவாசி உயர்வு அதிகரித்து விட்டது. இதனை சமாளிக்க வேளாண் உற்பத்தி பெருக்கிட , கிராமப்புற விவசாயிகளுக்கு நலத்திட்டங்கள் மூலம் உதவி செய்யப்படுகிறது. கிராமப்புற வேலை வாய்ப்புகள் பெருக்கப்படும். கோதுமை, சர்க்கரை தேவை சமாளிக்கப்பட்டுள்ளது.




மகளிர் இட ஒதுக்கீடு மசோதா: நடப்பு கூட்டத்தொடரில் மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படும். மேலும் கூடுதலாக 4 தேசிய பாதுகாப்பு படை மையங்கள் துவங்கப்பட்டுள்ளது. உலக அளவில் பிற நாடுகள் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வரும் நேரத்தில் இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளது. பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில் 7. 5 சதமாக இருக்கும். 2011 - 2012 ம் ஆண்டு்க்குள் 9 சதமாக உயரும். உணவு பாதுகாப்பு தொடர்பான கடுமையான சட்டங்கள் விரைவில் அமல்படுத்தப்படும்.




பாகிஸ்தானுடன் அர்த்தமுள்ள நட்பு : இந்தியா , பாகிஸ்தான் உறவுகள் நன்றாக இருக்‌கவே இந்தியா விரும்புகிறது. அதே நேரத்தில் அந்த நட்பு அர்த்தமுள்ளதாக இருக்‌க வேண்டும். சாதி , இன மோதல் வன்முறை ஒழிப்பு தொடர்பான சட்டதிருத்தம் மசோதா கொண்டு வரப்படும். வரும் ஏப்ரல் மாதம் முதல் நாடு முழுவதும் அனைவருக்கும் இலவச கல்வித்திட்டம் கொண்டுவரப்படும்.




சபையை சுமுகமாக நடத்திச் செல்வது குறித்து விவாதிக்க, அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கடந்த சனிக்கிழமை, சபாநாயகர் மீராகுமார் கூட்டியிருந்த போது, அதில் பங்கேற்ற தலைவர்கள் பலர், "விலைவாசி உயர்வு முக்கியமான பிரச்னை. அதுபற்றி பார்லிமென்டில் அவசியம் விவாதிக்க வேண்டும். அதுவும் முதல் வேலை நாளான செவ்வாய்க்கிழமையே விவாதிக்க வேண்டும்' என, தெரிவித்தனர். இல்லையெனில், சபையை சுமுகமாக நடத்த முடியாது என்றும் கூறினர்.




நெருக்கடி: அதனால், இன்று ஜனாதிபதி உரை முடிந்தவுடன், பார்லி., இரு அவைகள் கூடியது சமீபத்தில் மறைந்த நபர்களுக்கு அஞ்சலி‌ தெரிவித்து பி்ன்னர் சபை ஒத்தி வைக்கப்பட்டது. நாளை ( செவ்வாய்கிழமை ) விலைவாசிப் பிரச்னை குறித்த விவாதம், சபையில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது."எந்தப் பிரச்னை குறித்தும் பார்லிமென்டில் விவாதிக்க தயார்' என, பிரதமர் மன்மோகன்சிங் ஏற்கனவே அறிவித்துள்ளதால், அரசும் விலைவாசி உயர்வு தொடர்பாக விவாதம் நடத்த அனுமதிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.




இன்று துவங்கிய பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடரில், வரும் 24ம் தேதி 2010-11ம் ஆண்டிற்கான ரயில்வே பட்ஜெட்டும், 26ம் தேதி பொதுபட்ஜெட்டும் சபையில் தாக்கல் செய்யப்படுகிறது.பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகள் தொடர்பான மானியக் கோரிக்கைகள் பற்றி நிலைக்குழுக்கள் முடிவு எடுப்பதற்காக, மார்ச் 16ம் தேதி ஒத்திவைக்கப்படும் லோக்சபா, ஏப்ரல் 12ம் தேதி மீண்டும் துவங்குகிறது. பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத் தொடர் மே 7ம் தேதி முடிவுக்கு வருகிறது.

No comments:

Post a Comment