Sunday, February 21, 2010
சுட்டி...அறிவுல ரெம்ப கெட்டி
குழந்தைக்கான எல்லா குறும் பும் லுத்தேஷிடம் இருக்கிறது; ஆனால், அதையும் தாண்டி, மழலை மொழியில் அவன் சொல்லும் பல விஷயங்கள் மலைக்க வைக்கின்றன. கையிலே இருக்கும் கொடிகளைக் காட்டி, அது எந்த நாட்டின் கொடி என்று சொல்வதில் லுத்தேஷ் கெட்டிக்காரன்.
உத்தேசமாய் அவனுக்கு எத்தனை வயதிருக்கும் என்று நீங்கள் யோசனையில் இறங்குவது தெரிகிறது. அதிகமில்லை ஜென்டில்மேன், நாலு வயசுதான். "இதிலென்ன பெரிய அதிசயம், இங்கே வாங்க' என்று நம்மை திசை திருப்புகிறாள் சுபஸ்ரீ.இரண்டே முக்கால் வயதே ஆன சுபஸ்ரீ, ஏராளமான நாடுகளின் பெயர்களையும், அந்த நாடுகளின் நாயணத்தின் பெயர்களையும் படபடவென ஒப்பித்து நம்மைப் படபடக்க வைக்கிறாள். இடையே புகுந்து, நாட்டின் பெயரைச் சொல்லிக் கேட்டாலும் நாணயத்தின் பெயர் சொல்லி அசத்துகிறாள்.
இவர்களிருவரும் இப்படி என்றால், 4 வயதுச் சுட்டி சந்தியாவுக்கு இந்தியா குறித்த பல தகவல்களும் அத்துப்படியாய் இருக்கிறது. இந்திய ரூபாய் நோட்டை வைத்து, 25 கேள்விகளை நம்மிடம் கேட்கிறாள். பல கேள்விக்கு நம்மிடம் பதில் இல்லை; அதையும் அவளே சொல்லிக் கொடுக்கிறாள்.காந்தித் தாத்தா பாட்டை அச்சு அசலாய் அழகாகப்பாடுகிறது ஒரு குட்டீஸ்; சாக்லெட் வாங்கித்தர வேண்டுமென்று ஒரு கண்டிஷனுடன். நாலு வயசு சோனி, இந்திய மாநிலங்களையும், தலைநகரங்களையும் சரவெடி பட்டாசு போல நிமிடத்தில் சொல்லி முடிக்கிறாள்.
இத்தனை சுட்டிகளும், பொது அறிவிலே இத்தனை கெட்டியாய் இருப்பது ஏதோ மேல்தட்டுக் குழந் தைகள் படிக்கும் மெட்ரிக் பள்ளியில் இல்லை. உடுமலை பகுதியிலுள்ள அங்கன்வாடி மையங்களில் படிக்கும் குட்டீஸ்கள்தான் இப்படி நம்மை மிரள வைக்கின்றனர்.எங்கோ, ஏதோ ஒரு வேலைக்குப் போயே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிற ஏழைத் தாய்மார்களின் செல்லக்குழந்தைகள் இவர்கள். மண்ணிலே விளையாட விட்டு, இடையே எதையோ சாப்பிடக் கொடுத்து, கொஞ்ச நேரம் தூங்க வைப்பதுதான் இந்த மையங்களின் வேலை என்பது பலரது கருத்து.ஆனால், உடுமலையிலுள்ள அங்கன்வாடி மையங்கள் பலவும், சுத்தம், சுகாதாரம், கல்வி என பல விஷயங்களிலும், நர்சரி பள்ளிகளை சவாலுக்கு அழைக்கின்றன. சிறு வயதிலேயே இவர்களிடம் இத்தனை அறிவை விதைத்து இருப்பது என்பது, சாமானியமான விஷயமில்லை.இவர்களில் பலர் மேதைகளாகவும், அறிஞர்களாகவும், கல்வியாளராகவும் உருவெடுத்தால் அதிலே இந்த அங்கன் வாடி மையங்களுக்கும் முக்கியப் பங்கு இருக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது.
""இங்கே குழந்தைகளிடம் எந்த விஷயத்தையும் கட்டாயமாகத் திணிப்பதே இல்லை. அவர்கள் இங்கே விளையாடலாம், தூங்கலாம், ஒரு குழந்தைக்குரிய வாழ்க்கையை வாழலாம். அதே நேரத்தில், அவர்களுக்கு எதில் ஆர்வம் என்பதை அறிந்து, அதற்கேற்ற விஷயங்களைக் கற்றுத்தரச் சொல்கிறோம். அவர்களுக்குத் தேவையான சத்தான உணவும் தரப்படுகிறது. அதனால்தான், குட்டீஸ்கள் இங்கே வர தினமும் குஷியாகக் கிளம்பி விடுகிறார்கள்,'' என்றார் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கிருஷ்ணவேணி.பல மைல் தூரம் வரிசையில் நின்று, பல ஆயிரம் ரூபாய் பணம் கட்டி, அங்கே இங்கே "ரெகமண்டேஷன்' கடிதம் வாங்கி, பிரமாண்ட கட்டடமுள்ள பள்ளியில் படிக்க வைத்தால்தான் அறிவு வருமா?. இங்கேயும் ஏழை மழலைகள் அறிவிலே அசத்துகின்றன, யாருமே தட்டிக்கொடுக்காவிட்டாலும் கூட.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment