Wednesday, February 17, 2010

இரண்டு புதிய ஐ.பி.எல்., அணிகள்! *குறைந்தபட்ச ஏலத் தொகை ரூ. 1100 கோடி

புதுடில்லி: ஐ.பி.எல்., அமைப்பு சார்பில் இரண்டு புதிய அணிகள் வரும் மார்ச் 8ம் தேதி அறிமுகமாக உள்ளன. ஒரு அணிக்கான குறைந்தபட்ச ஏலத் தொகை சுமார் 1100 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியன் பிரிமியர் லீக்(ஐ.பி.எல்.,) சார்பில் "டுவென்டி-20' தொடர் நடத்தப்படுகிறது. மூன்றாவது தொடர் வரும் மார்ச் 12ம் தேதி மும்பையில் துவங்குகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெக்கான் சார்ஜர்ஸ், கோல்கட்டா நைட் ரைடர்ஸ், டில்லி டேர்டெவில்ஸ், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.
புதிய இடங்கள்:தற்போது கூடுதலாக இரு அணிகளை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர் விண்ணப்பங்களை, இந்திய கிரிக்கெட் போர்டு மற்றும் ஐ.பி.எல்., அலுவலகங்களில் இருந்து வரும் 21ம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம். ஒரு அணியின் குறைந்தபட்ச ஏலத் தொகை சுமார் 1100 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இம்முறை, மைதான வசதிகள் கொண்ட ஆமதாபாத், நாக்பூர், கான்பூர், தர்மசாலா(இமாச்சல பிரதேசம்), இந்தூர்(ம.பி.,), கட்டாக்(ஒரிசா), குவாலியர், விசாகப்பட்டனம் ஆகிய இடங்கள் சார்பில் உரிமை கோரலாம். தவிர, மைதான பணிகள் நடந்து கொண்டிருக்கும் ராஜ்கோட், புனே, பரோடா, கொச்சின் ஆகிய இடங்கள் சார்பிலும் ஏலத்தில் கலந்து கொள்ளலாம். புதிதாக 2 அணிகள் சேர்க்கப்படுவதால், வரும் 2011ல் நடக்கும் நான்காவது ஐ.பி.எல்., தொடரில் அணிகளின் எண்ணிக்கை 10 ஆக உயரும்.
இது குறித்து ஐ.பி.எல்., தலைவர் லலித் மோடி கூறுகையில்,""டெண்டர் விண்ணப்பங்கள் வரும் மார்ச் 8ம் தேதி மும்பையில் திறக்கப்படும். அப்போது அதிக தொகை குறிப்பிட்ட இரண்டு புதிய அணிகள் தெரிய வரும். புதிய அணிகளின் உரிமையாளர்கள், நிர்வாகத்தினர், மூன்றாவது ஐ.பி.எல்., தொடரை பார்வையிட அனுமதிக்கப்படுவர். இதன் மூலம் 2011ல் நடக்க உள்ள அடுத்த தொடருக்கு இவர்கள் சிறப்பான முறையில் தயாராகலாம்,''என்றார்.
சர்ச்சை கடந்து...அணிகளின் குறைந்தபட்ச தொகை இம்முறை சுமார் 1100 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஐ.பி.எல்., தொடரின் மவுசு சிறிதும் குறையவில்லை என்பது தெளிவாகிறது. பாகிஸ்தான் வீரர்களை ஏலத்தில் எடுக்காதது, தெலுங்கானா பிரச்னை காரணமாக ஐதராபாத்தில் நடக்க இருந்த போட்டிகள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது போன்ற சர்ச்சைகளை கடந்து சாதிக்கிறது. கடந்த 2008ல் அணிகளின் குறைந்தபட்ச ஏலத் தொகை 230 கோடி ரூபாய் தான். இது, தற்போது நான்கு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. அப்போது "ரிலையன்ஸ்' முகேஷ் அம்பானி சார்பில், மும்பை இந்தியன்ஸ் அணி அதிகபட்சமாக 500 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டது.
கடும் போட்டி:புதிய இரண்டு அணிகளை வாங்க, இம்முறை கடும் போட்டி காணப்படுகிறது. "ஹீரோ ஹோண்டா', "சஹாரா இந்தியா', பூனாவாலா குரூப் நிறுவனங்கள் ஏதாவது ஒரு அணியை ஏலத்தில் எடுக்கலாம். ஆமதாபாத் அணியை வாங்க அனில் அம்பானி ஆர்வமாக உள்ளாராம். தர்மசாலா அணியை ஏலத்தில் எடுக்க, "ஹீரோ ஹோண்டா' நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இப்படி முன்னணி நிறுவனங்கள் போட்டியிடுவதால், ஐ.பி.எல்., அமைப்பு மீண்டும் பண மழையில் நனைய காத்திருக்கிறது.

No comments:

Post a Comment