Sunday, February 21, 2010

கடைசி பந்தில் இந்திய அணி வெற்றி *இளம் வீரர்கள் எழுச்சி


ஜெய்ப்பூர்: நெஞ்சம் படபடத்த ஜெய்ப்பூர் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி ஒரு ரன் வித்தியாசத்தில் "திரில்' வெற்றி பெற்றது. கடைசி பந்து வரை போராடிய தென் ஆப்ரிக்க அணியின் ஆட்டம் வீணானது. சுரேஷ் ரெய்னா, ரவிந்திர ஜடேஜா உள்ளிட்ட இளம் வீரர்களின் அபார ஆட்டம் இந்திய வெற்றிக்கு பக்கபலமாக அமைந்தது.
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி நேற்று ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடந்தது. டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் காலிஸ், பீல்டிங் தேர்வு செய்தார். யுவராஜ், காம்பிர், ஜாகிர், ஹர்பஜன் ஆகிய முன்னணி வீரர்கள் இடம்பெறாத நிலையில், இளம் நட்சத்திரங்களை நம்பி இந்தியா களமிறங்கியது.
சச்சின் பரிதாபம்:இந்திய அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. போட்டியின் இரண்டாவது ஓவரில், பார்னல் பந்தை தட்டி விட்ட சேவக் ஒரு ரன்னுக்காக ஓட தயங்கினார். மறுமுனையில் அவசரப்பட்ட அனுபவ சச்சின்(4) பாதி தூரம் ஓடி வர, பரிதாபமாக ரன் அவுட்டானார். இதற்கு பின் சேவக், தினேஷ் கார்த்திக் இணைந்து அதிரடியாக ஆடினர். ஸ்டைன் பந்தில் ஒரு இமாலய சிக்சர் அடித்தார் சேவக். மறுபக்கம் பார்னல் வீசிய போட்டியின் 8வது ஓவரில் 3 பவுண்டரி விளாசினார் கார்த்திக்.
சேவக் பாவம்:இந்த நேரத்தில் லாங்கிவெல்ட் வீசிய பந்தை நேராக அடித்தார் கார்த்திக். பந்து, லாங்கிவெல்ட்டின் விரல் நுனியில் லேசாக பட்டு "ஸ்டம்ப்சை' சாய்க்க, "கிரீசில்' இருந்து சற்று தூரம் ஓடி வந்த சேவக் 46 ரன்களுக்கு(6 பவுண்டரி, 2 சிக்சர்) துரதிருஷ்டவசமாக ரன் அவுட்டானார். போத்தா சுழலில் ஒரு சிக்சர் அடித்த கார்த்திக் 44 ரன்களுக்கு(5 பவுண்டரி, 1 சிக்சர்) வெளியேறினார். காலிஸ் பந்தில் பொறுப்பற்ற "ஷாட்' அடித்த கேப்டன் தோனி(26) அதிக நேரம் நீடிக்கவில்லை.
ரெய்னா அசத்தல்:பின் விராத் கோஹ்லி, சுரேஷ் ரெய்னா இணைந்து பொறுப்பாக ஆடினர். கோஹ்லி 31 ரன்கள் எடுத்தார். போட்டியின் 39வது ஓவரில் "பேட்டிங் பவர்பிளே' எடுக்கப்பட்டது. இதனை பயன்படுத்திய யூசுப் பதான், பார்னல் பந்தில் ஒரு இமாலய சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை தூக்கி அடிக்க முயன்ற இவர்(18) வீணாக அவுட்டானார். ஒருபக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுபக்கம் அசத்தலாக ஆடிய சுரேஷ் ரெய்னா, தனது 15வது அரைசதம் கடந்தார். இவர் 58 ரன்களுக்கு(6 பவுண்டரி, 1 சிக்சர்), காலிஸ் வேகத்தில் பெவிலியன் திரும்பினார். மந்தமாக ஆடிய ரவிந்திர ஜடேஜாவும்(22), காலிஸ் பந்தில் வெளியேறினார். கடைசி கட்டத்தில் கலக்கிய நெஹ்ரா, லாங்கிவெல்ட் பந்தில் ஒரு "சூப்பர்' சிக்சர் அடித்தார். இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்தது. நெஹ்ரா(16) அவுட்டாகாமல் இருந்தார்.
ஜடேஜா அபாரம்:பின் சவாலான இலக்கை விரட்டிய தென் ஆப்ரிக்க அணி, திணறல் துவக்கம் கண்டது. பிரவீண் குமார் வேகத்தில் போஸ்மென்(29) நடையை கட்டினார். ரவிந்திர ஜடேஜா சுழலில் கிப்ஸ்(27), டிவிலியர்ஸ்(25) வீழ்ந்தனர். அடுத்து வந்த அல்விரோ பீட்டர்சன்(9), மார்கல்(2), பவுச்சர்(5), போத்தா(10) வரிசையாக வெளியேறினர். போராடிய காலிஸ் 89 ரன்களுக்கு(6 பவுண்டரி, 1 சிக்சர்), ஸ்ரீசாந்த் வேகத்தில் போல்டானார்.
பார்னல் மிரட்டல்:இதற்கு பின் பார்னல், ஸ்டைன் இணைந்து அதிரடியாக ரன் சேர்க்க, "டென்ஷன்' ஏற்பட்டது. ஸ்ரீசாந்த் வீசிய 48வது ஓவரில் 3 பவுண்டரி உட்பட 14 ரன் எடுத்தனர். நெஹ்ரா வீசிய போட்டியின் 49வது ஓவரில் பார்னல், ஸ்டைன் தலா ஒரு சிக்சர் அடிக்க, மொத்தம் 16 ரன் எடுக்கப்பட்டது
"திரில்' வெற்றி:கடைசி ஓவரில் 10 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற பரபரப்பான நிலை ஏற்பட்டது. பிரவீண் குமார் பந்துவீசினார். முதல் பந்தில் ஒரு ரன். இரண்டாவது பந்தில் ஸ்டைன்(35) போல்டானார். 3வது பந்தில் ஒரு ரன். 4வது பந்தில் ஒரு ரன். 5வது பந்தில் 3 ரன். பின் வைடு மூலம் ஒரு ரன். 6வது பந்தில் முதல் ரன் எடுக்கப்பட்டது. இரண்டாவது ரன்னுக்காக ஓடிய போது, பார்னல்(49), ரன் அவுட்டாக, தென் ஆப்ரிக்க அணி 50 ஓவரில் 297 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது. "திரில்' வெற்றி பெற்ற இந்திய அணி, தொடரில் 1-0 என்ற முன்னிலை பெற்றது.
 ஆட்ட நாயகன் விருதை காலிஸ் தட்டிச் சென்றார்.


பாக்ஸ் செய்திகள்:
சச்சினுக்கு "வெள்ளி பேட்'
இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதும் இரண்டாவது ஒரு நாள் போட்டி வரும் 24ம் தேதி குவாலியரில் நடக்க உள்ளது. இப்போட்டியின் போது, சர்வதேச கிரிக்கெட்டில் 20 ஆண்டுகளை நிறைவு செய்த இந்தியாவின் சச்சினுக்கு ஒன்றரை கி.கி., எடை கொண்ட "வெள்ளி பேட்' பரிசாக வழங்கப்பட உள்ளது.


"விழாத விக்கெட்'இந்தியா பேட் செய்த போது, கடைசி ஓவரை லாங்கிவெல்ட் அசுரவேகத்தில் வீசினார். "யார்க்கராக' வீசப்பட்ட மூன்றாவது பந்தை நெஹ்ரா அடிக்க தவற, அது "ஆப்ஸ்டம்ப்' மீது பலமாக பட்டுச் சென்றது. ஆனாலும் "பெயில்ஸ்' விழாதது ஆச்சரியமாக இருந்தது. இறுதியில் பந்து, கீப்பரை கடந்து பவுண்டரியாக மாற, இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

காலிஸ் "250'
நேற்று சுரேஷ் ரெய்னாவை வெளியேற்றிய போது, ஒரு நாள் போட்டிகளில் தனது 250வது விக்கெட்டை பெற்றார் தென் ஆப்ரிக்க கேப்டன் காலிஸ். இதன் மூலம் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்கள், 100 "கேட்ச்', மற்றும் 250 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய வீரர் என்ற பெருமை பெற்றார்.
ஸ்கோர் போர்டு
இந்தியா
சேவக்-ரன் அவுட்-(லாங்கிவெல்ட்) 46(37)
சச்சின்-ரன் அவுட்-(கிப்ஸ்/பார்னல்) 4(5)
கார்த்திக்(கே)பீட்டர்சன்(ப)லாங்கிவெல்ட் 44(56)
தோனி(கே)மார்கல்(ப)காலிஸ் 26(29)
கோஹ்லி(கே)கிப்ஸ்(ப)மார்கல் 31(46)
ரெய்னா(கே)பவுச்சர்(ப)காலிஸ் 58(63)
யூசுப்(கே)காலிஸ்(ப)பார்னல் 18(13)
ஜடேஜா(கே)பவுச்சர்(ப)காலிஸ் 22(20)
பிரவீண்-ரன் அவுட்(லாங்கிவெல்ட்) 13(14)
நெஹ்ரா-அவுட் இல்லை- 16(17)
ஸ்ரீசாந்த்-அவுட் இல்லை- 0(0)
உதிரிகள் 20
மொத்தம்(50 ஓவரில் 9 விக்.,) 298
விக்கெட் வீழ்ச்சி: 1-10(சச்சின்), 2-89(சேவக்), 3-116(கார்த்திக்), 4-138(தோனி), 5-204(கோஹ்லி), 6-231(யூசுப்), 7-260(ரெய்னா), 8-274(ஜடேஜா), 9-292(பிரவீண்).
பந்துவீச்சு: ஸ்டைன் 10-1-46-0, பார்னல் 9-0-69-1, லாங்கிவெல்ட் 10-0-48-1, மார்கல் 8-0-59-1, போத்தா 6-0-40-0, காலிஸ் 7-0-29-3.
தென் ஆப்ரிக்காபோஸ்மேன்(ப)பிரவீண் 29(23)
கிப்ஸ்(கே)கோஹ்லி(ப)ஜடேஜா 27(40)
காலிஸ்(ப)ஸ்ரீசாந்த் 89(97)
டி விலியர்ஸ்(ப)ஜடேஜா 25(23)
பீட்டர்சன்-ரன் அவுட்(ஸ்ரீசாந்த்) 9(21)
மார்கல்-எல்.பி.டபிள்யு.,(ப)நெஹ்ரா 2(8)
பவுச்சர்(கே)தோனி(ப)ஸ்ரீசாந்த் 5(9)
போத்தா-எல்.பி.டபிள்யு.,(ப)யூசுப் 10(11)
பார்னல்-ரன் அவுட்- 49(47)
ஸ்டைன்(ப)பிரவீண் 35(19)
லாங்கிவெல்ட்-அவுட் இல்லை- 4(2)
உதிரிகள் 13
மொத்தம் (50 ஓவரில் ஆல் அவுட்) 297
விக்கெட் வீழ்ச்சி: 1-58(போஸ்மேன்), 2-64(கிப்ஸ்), 3-109(டி விலியர்ஸ்), 4-134(பீட்டர்சன்), 5-142(மார்கல்), 6-161(பவுச்சர்), 7-180(போத்தா), 8-225(காலிஸ்), 9-290(ஸ்டைன்), 10-297(பார்னல்).
பந்து வீச்சு: பிரவீண் 8-0-46-2, நெஹ்ரா 10-0-67-1, ஸ்ரீசாந்த் 9-1-74-2, ஜடேஜா 10-2-29-2, யூசுப் பதான் 10-0-51-1, ரெய்னா 3-0-25-0.


No comments:

Post a Comment