சென்னை : புதிய அரிசி வரத்து அதிகரித்துள்ளதால் அரிசி விலை கிலோவுக்கு ஐந்து ரூபாய் வரை குறைந்துள்ளது. பொதுமக்கள் சிலர் விவசாயிகளிடம் நேரடியாக நெல் கொள்முதல் செய்து அரவை செய்வதால், அரிசி விலை மந்தமாகி விட்டதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். தமிழக அரிசி ஆலை உரிமையாளர்கள் தஞ்சாவூர், ஈரோடு, ஆந்திரா, கர்நாடகா பகுதியில் இருந்து நெல் வாங்கி வருகின்றனர். கடந்தாண்டு இறுதியில் ஆந்திராவில், 'லெவி' அமல்படுத்தப்பட்டதால் தமிழகத்துக்கு நெல் வரத்து குறைந்து விட்டது. கர்நாடகா பகுதியில் இருந்து மட்டுமே நெல் வரத்தானது. அனைத்து வகை அரிசியும் மூட்டைக்கு 50 முதல் 100 ரூபாய் வரை உயர்ந்தது. தற்போது தமிழகம் முழுவதும் நெல் அறுவடை முடிந்து, நெல் அரவை பணி துவங்கியுள்ளதால் மார்க்கெட்டுக்கு சில வாரங்களாக புது அரிசி வரத்து துவங்கி விட்டது. அரிசி கிலோவுக்கு ஐந்து ரூபாய் வரை குறைந்துள்ளது. பொதுமக்கள் பலர் விவசாயிகளிடம் நேரடியாக நெல் கொள்முதல் செய்து, அரவை செய்வதால் அரிசி விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். நேற்றைய நிலவரப்படி கர்நாடக டீலக்ஸ் பொன்னி பழையது 75 கிலோ மூட்டை 2,600 ரூபாய், புதியது 2,150, பி.பி.டி., பழையது 2,200, புதியது 1,750, அதிசய பொன்னி பழையது 1,750, புதியது 1,500, கோ 36 ரகம் பழையது 1,650, புதியது 1,500, இட்லி அரிசி 1,500, கல்சர் இட்சி அரிசி 1,450 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
மேலும் குறையும் : 'நெல் கொள்முதல் அதிகரித்துள்ளதால், அரிசி விலை வெளி மார்க்கெட்டில் குறையத் துவங்கி உள்ளது. விழுப்புரம், திருவண்ணாமலை உட்பட சில பகுதிகளில், அறுவடை துவங்க உள்ளன. அப்போது, விலை தானாக குறையும்' என, உணவுத்துறை செயலர் சண்முகம் கூறினார். உணவுத்துறை செயலர் சண்முகம், முதல்வரின் செயலர் சுவாமிநாதன் ஆகியோர், தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டத்தில், நெல் கொள்முதல் நிலையங்களை, நேற்று ஆய்வு செய்தனர். உணவுத்துறை செயலர் சண்முகம் கூறியதாவது:
குறுவை பருவத்தில் நெல் கொள்முதல் இல்லை. சம்பாவில், தாமதமாக கொள்முதல் துவங்கினாலும், தற்போது, அதிகளவில் கொள்முதல் நடக்கிறது. தமிழகத்தில் 1, 239 கொள்முதல் நிலையங்களில், இதுவரை, 5.48 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்தாண்டு 16 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகமாக கொள்முதல் ஆகும்பட்சத்தில், இலக்கை கடந்து கொள்முதல் செய்ய வாய்ப்புள்ளது. கொள்முதலாகும் நெல் தஞ்சை, மயிலாடுதுறை, நாகை, கும்பகோணம், நீடாமங்கலம் ஆகிய இடங்களில் இருந்து ரயில் மூலம் அனுப்பப்படுகிறது. பொது வினியோக திட்டத்தக்கு, ஒரு மாதத்துக்கு 3.17 லட்சம் டன் நெல் தேவை. தற்போது, அரசிடம் ஏழு லட்சம் டன் இருப்பு உள்ளது. நெல் கொள்முதல் அதிகரித்துள்ள நிலையில், அரிசி விலை, வெளிமார்க்கெட்டில் குறைய துவங்கியுள்ளது. விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருநெல்வேலி போன்ற பகுதிகளில், சில நாட்களில் அறுவடை துவங்கும். அப்போது, விலை தானாக குறையும். இவ்வாறு சண்முகம் கூறினார்.
No comments:
Post a Comment