Wednesday, February 17, 2010

இந்திய வெற்றி இயற்கை கையில்! *மழை தொடர்ந்தால் சிக்கல் *சுழலில் மிஸ்ரா அசத்தல்

கோல்கட்டா: கோல்கட்டா டெஸ்டில் இந்திய அணியின் வெற்றிநடைக்கு இயற்கை சிக்கலை ஏற்படுத்தியது. மழை மற்றும் போதிய வெளிச்சமின்மை காரணமாக நேற்றைய நான்காம் நாள் ஆட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இன்று ஒரு நாள் ஆட்டம் மட்டுமே மீதமுள்ள நிலையில், இந்திய அணி, வருண பகவானின் கருணையை எதிர்நோக்கி உள்ளது.
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. நாக்பூரில் நடந்த முதல் போட்டியில், இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்து 0-1 கணக்கில் பின்தங்கியுள்ளது. இதனை அடுத்து முக்கியமான இரண்டாவது போட்டி, கோல்கட்டாவில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா 296, இந்தியா 643/6 (டிக்ளேர்) ரன்கள் எடுத்தன. 347 ரன்கள் பின்தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்சை துவக்கிய தென் ஆப்ரிக்க அணி, மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்திருந்தது. ஸ்மித் (5), பீட்டர்சன் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.
காலதாமதம்:நேற்று நான்காம் நாள் ஆட்டம் நடந்தது. முன் தினம் இரவு பெய்த மழை காரணமாக மைதானம் ஈரப்பதத்துடன் காணப்பட்டது. இதனால் சுமார் 1 மணி 30 நிமிடம் தாமதமாக ஆட்டம் துவங்கியது. 82 ஓவர்கள் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டது.
மிஸ்ரா மிரட்டல்:ஆடுகளம் சுழலுக்கு ஒத்துழைக்க, ஸ்மித், பீட்டர்சன் துவக்க ஜோடி திணறியது. மிஸ்ரா சுழலில் ஸ்மித் (20) அவுட்டானார். முதல் இன்னிங்சில் சதம் கடந்த பீட்டர்சன், இந்த முறை சோபிக்க வில்லை. வெறும் 21 ரன்களுக்கு ஹர்பஜனிடம் சரணடைந்தார். பின்னர் களமிறங்கிய காலிஸ், ஆம்லாவும் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி 3 வது விக்கெட்டுக்கு 57 ரன்கள் சேர்த்த நிலையில் காலிஸ் (20) அவுட்டானார்.
மீண்டும் தடை: இந்நிலையில் போதிய வெளிச்சமின்மை காரணாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து மழையும் பெய்ய, 4 வது நாள் ஆட்டம் கேள்விக்குறியானது. 1 மணி 30 நிமிடத்துக்கு பின் மழை நிற்க, மீண்டும் ஆட்டம் துவங்கியது. ஆனால் 5 நிமிடங்கள் மட்டுமே நீடித்த ஆட்டம், வெளிச்சமின்மையால் மீண்டும் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து இதே நிலை நீடித்ததால் 4 ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. 35 ஓவர் முடிவில் தென் ஆப்ரிக்க அணி, 3 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்திருந்தது. ஆம்லா (49), பிரின்ஸ் (0) அவுட்டாகாமல் இருந்தனர்.
கிடைக்குமா வெற்றி?: கோல்கட்டா டெஸ்டில் இந்திய அணியின் வெற்றிக்கு மழை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று 34.1 ஓவர் மட்டுமே வீசப்பட்டது. இன்றைய கடைசி நாள் ஆட்டத்தில் இந்திய அணி, தென் ஆப்ரிக்க அணியின் எஞ்சியுள்ள 7 விக்கெட்டுகளை வீழ்த்தி வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஒருவேளை இன்றும் மழை குறுக்கிடும் பட்சத்தில், இப்போட்டி "டிரா' ஆகும். இதனால் நாக்பூரில் நடந்த முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற தென் ஆப்ரிக்க அணி தொடரை கைப்பற்றும் நிலை ஏற்படும். தவிர, டெஸ்ட் அரங்கில் "நம்பர்-1' இடத்தை இந்திய அணி இழக்க நேரிடும்.

ஜாகிர் காயம்நேற்றைய போட்டியின் போது, இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர் கானுக்கு வலது காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. உடனடியாக முதலுதவி எடுத்துக் கொண்டார். இருப்பினும் இன்றைய கடைசி நாள் ஆட்டத்தில் அவர் பங்கேற்பது சந்தேகத்துக்கு இடமாக உள்ளது. இது குறித்து பயிற்சியாளர் கிறிஸ்டன் கூறுகையில்,"" ஜாகிருக்கு லேசான காயம் தான். இருப்பினும் போட்டி துவங்குவதற்கு முன் இறுதி முடிவு செய்யப்படும்,'' என்றார்.

கிறிஸ்டன் குற்றச்சாட்டுகோல்கட்டா டெஸ்ட் மழையால் பாதிக்கப்பட்டதால், அதிக வருத்தத்தில் இருக்கிறார் இந்திய பயிற்சியாளர் கிறிஸ்டன். இது குறித்து அவர் கூறியது:
மழையின் காரணமாக 4 ம் நாள் ஆட்டத்தில் 50 ஓவர் கூட முழுமையாக வீசப்படவில்லை. நேற்று காலை மழை இல்லை. இருப்பினும் மைதானத்தை சரிசெய்ய அதிக காலதாமதம் ஆகி விட்டது. போதிய வசதிகள் இல்லாததே இதற்கு காரணம். இன்றைய கடைசி நாளை, வெற்றிக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது இந்திய அணி. தற்போது தென் ஆப்ரிக்காவின் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி விட்டோம். இன்னும் 7 விக்கெட்டுகள் தான். எங்களுக்கு தேவை 40 முதல் 50 ஓவர்கள் தான். இதற்குள் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி விடுவோம். இவ்வாறு கிறிஸ்டன் தெரிவித்தார்.
* கிறிஸ்டன் குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் கோல்கட்டா மைதான பராமரிப்பாளர் பிரபிர் முகர்ஜி. இது குறித்து அவர் கூறுகையில்,"" நாங்கள் சிறப்பாகவே செயல்பட்டோம். போட்டியை நடத்துவது அம்பயர்கள் மற்றும் போட்டி நடுவர்கள் கையில் தான் உள்ளது,'' என்றார்.

ஆம்லா அசத்தல்தென் ஆப்ரிக்கா வீரர் ஆம்லா, இத்தொடரில் அசத்தி வருகிறார். 2 சதம் உட்பட மொத்தம் 416 ரன்கள் எடுத்துள்ளார். இதன் மூலம் இவ்விரு அணிகளுக்கு இடையே, ஒரே டெஸ்ட் தொடரில் அதிக ரன் சேர்த்த வீரர் என்ற பெருமை பெற்றார். இதற்கு முன் கடந்த 1996-97 ம் ஆண்டு நடந்த டெஸ்ட் தொடரில் அசாருதின் 388 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.
* தென் ஆப்ரிக்கா கேப்டன் ஸ்மித், இந்திய மண்ணில் சொதப்பி உள்ளார். இரண்டு டெஸ்டின், 4 இன்னிங்சிலும் சேர்த்து வெறும் 30 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

காலிஸ் மகிழ்ச்சிநேற்றைய போட்டி மழையால் பாதிக்கப்பட்டது, எங்களுக்கு மகிழ்ச்சி என தென் ஆப்ரிக்காவின் காலிஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,"" நேற்றைய ஆட்டத்தில் எங்களுக்கு இயற்கை கைகொடுத்தது. இன்றும் இயற்கை தென் ஆப்ரிக்காவுக்கு சாதகமாக அமையும் என எதிர்பார்க்கிறேன். 3 விக்கெட்டுகள் தான் வீழ்ந்துள்ளன. ஆம்லா, பிரின்ஸ், டிவிலியர்ஸ், டுமினி ஆகியோர் களத்தில் உள்ளனர். இதனால் கோல்கட்டா போட்டியை "டிரா' செய்ய போராடுவோம்,'' என்றார்.

வானிலை எப்படி? இன்று மழை பெய்ய வாய்ப்பு இல்லை என கோல்கட்டா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் தலைவர் தேவ்நாத் கூறுகையில்,"" இன்று வானிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். மழை பெய்ய வாய்ப்பு இல்லை. அதிகாலை மட்டும் பனிமூட்டம் காணப்படும்,'' என்றார். இதனால் கோல்கட்டா டெஸ்டில் வெற்றியை எட்ட இந்திய அணிக்கு வாய்ப்பு உள்ளது.

No comments:

Post a Comment