கடித்து சாப்பிடக்கூடியப் பொருட்களை சாப்பிட முடியாமல் போவதும், சாதாரண உணவைக் கூட மென்று சாப்பிட முடியாமல் போகும் போதுதான் நாம் பற்களின் அருமையை உணர்வோம்.
அப்படி இல்லாமல், இருக்கும் போதே பற்களை பக்குவமாக பாதுகாப்பது நல்லது. சிலர் வாயைத் திறந்தாலே கப்பென்று ஒரு வாடை அடிக்கும். அவர்கள் சரியாக பல் துலக்காததுதான் அதற்கு காரணம். பற்களை முறையாக பராமரிக்காவிட்டால், பல் சொத்தையாவதோடு பல நோய்களும் தாக்குவதற்கு அடிப்படையாக அமைந்துவிடும்.
குழந்தைப் பருவம் முதலே பற்களை முறையாக சுத்தம் செய்துவர வேண்டும். ஒரு குழந்தை பிறந்த 6 மாதங்களுக்கு பிறகு பற்கள் முளைக்க ஆரம்பிக்கும். இந்த தற்காலிக பற்களை `பால் பற்கள்' என்பார்கள். 21/2 முதல் 3 வயதுக்குள் கிட்டத்தட்ட எல்லா பற்களுமே வளர்ந்திருக்கும்.
இந்த வயதில் உள்ள குழந்தைகளுக்கு புட்டிப்பால் கொடுக்கும் சில தாய்மார்கள், பால் பாட்டிலை குழந்தையின் வாயில் வைத்தபடியே தூங்கச் செய்து விடுவார்கள். இதனால் குழந்தைகளின் பற்களில் அந்தப் பால் படிந்துவிடும். எப்போதும் நம் வாயில் நிரந்தரமாக இருக்கும் ஸ்டிரெப்டோ காகஸ் எனப்படும் பாக்டீரியாக்கள், பற்களில் படிந்திருக்கும் அந்தப் பாலோடு வினை புரிந்து, கேரிஸ் எனப்படும் பல்சொத்தையை ஏற்படுத்தி விடுகின்றன.
குழந்தைகளுக்கு இப்படிப்பட்ட தொந்தரவு ஏற்படாமல் இருக்க பால் குடித்த உடனே கொஞ்சம் தண்ணீர் கொடுத்து குடிக்க வைத்து விடுவது நல்லது.
பால் பற்கள் விழுந்து குழந்தைக்கு நிரந்தரமான பற்கள் வளர ஆரம்பிக்கும் பருவத்திலும் தாய்மார்கள் கவனமாக இருக்க வேண்டும். சில பால் பற்கள் விழாமல் இருக்கும்போதே, அதே இடத்தில் நிரந்தரமான பல் சற்று சாய்வாக முளைக்க ஆரம்பிக்கும். அப்படிப்பட்ட நேரத்தில் பால் பற்களை பல் மருத்துவரிடம் சென்று நீக்கி விடுவது நல்லது. அப்படி நீக்காவிட்டால், பற்களில் அழுக்கு சேர்வது, நாக்குக்கு இடையூறாக பற்கள் வளர்ந்து அதனால் பேச்சுக்கு இடையூறு ஏற்படுவது போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
சிலருக்கு சின்ன வயதிலேயே பற்கள் நீண்டு வளர்வதால் அவர்களது முக அமைப்பே மாறிவிடும். குழந்தைப் பருவத்தில் விரல் சூப்புவதே இதற்கு முக்கிய காரணம். பால் பற்கள் விழுந்து நிரந்தரமான பற்கள் வளரும் பருவத்தில் இந்தப் பழக்கம் தொடரும்போது பற்களின் நேரான வளர்ச்சிக்கு விரல்கள் இடையூறாக இருப்பதால் பற்கள் தங்கள் இயல்பை விட்டு விரல் சூப்பும் நிலைக்கேற்ப நீண்டு வளர ஆரம்பித்து விடுகின்றன. அதனால், 3 முதல் 4 வயது வரை உள்ள குழந்தைகள் விரல் சூப்பினால் பரவாயில்லை. அதற்கு மேல் அந்தப் பழக்கத்தை அனுமதிக்கக் கூடாது.
நம்மில் பலர் பல் துலக்கும்போது இன்னொரு பெரிய தவறையும் தெரியாமல் செய்துவிடுகிறோம். அதாவது, பற்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பல் ஈறுகளுக்கு கொடுக்க மறந்துவிடுகிறோம்.
WD
நமக்கு ஒத்துக் கொள்ளும் பற்பசைகளைப் பயன்படுத்த வேண்டியதும் மிகவும் முக்கியமாகிறது. சில பற்பசைகள் அல்சர் எனப்படும் வயிற்றுப்புண்ணை ஏற்படுத்தும் அளவிற்கு வீரியமிக்கவையாக உள்ளன. எனவே நாம் பயன்படுத்தும் பற்பசைகளும், பல் துலக்கும் பிரஷ்ஷூம் தரமானதாக இருக்க வேண்டியதும் மிகவும் முக்கியம்.
உணவு உண்ட பிறகு வாயை கொப்பளிக்கும் பழக்கத்தையும் குழந்தைகளுக்கு ஏற்படுத்துவதும், அந்த பழக்கம் இல்லாத பெரியவர்கள் அதனை பழக்கிக் கொள்வதும் மிகவும் சிறந்ததாகும்.
No comments:
Post a Comment