Friday, February 26, 2010

சச்சினுக்கு "பாரத் ரத்னா' விருது!: கபில் தேவ் வலியுறுத்தல்


புதுடில்லி: சாதனை நாயகன் சச்சினுக்கு, நாட்டின் மிக உயர்ந்த "பாரத் ரத்னா' விருது வழங்க வேண்டுமென, முன்னாள் கேப்டன் கபில் தேவ் வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 31,041 ரன்கள் மற்றும் 93 சதங்கள் அடித்து, சாதனை மன்னனாக திகழ்கிறார் இந்தியாவின் சச்சின். சமீபத்தில் குவாலியரில் நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் இரட்டை சதம் விளாசினார். இதன் மூலம் ஒரு நாள் போட்டிகளில் 200 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார். இதற்கு பல இடங்களில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
கோஹினூர் வைரம்:
சச்சினின் 200 ரன் சாதனை குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் கூறியது:
சச்சின், கிரிக்கெட்டின் கோகினூர் வைரம். இவர் டெஸ்ட், ஒருநாள் மற்றும் "டுவென்டி-20' என அனைத்திலும் வெற்றிகரமாக சாதித்தவர். இவரைப் போன்று, வேறொரு வீரர் இனி வருவது கடினம். இங்கிலாந்தின் நாசர் ஹுசைன் கூறியது போல, பிராட்மேனுடன் மட்டுமல்ல, உலகின் எந்த பேட்ஸ்மேனையும் சச்சினுடன் ஒப்பிட முடியாது.
பேட்டிங்கில் சாதித்து வரும் இவர், பீல்டிங்கில் இப்போது வரையிலும் தன்னை நிரூபித்து வருகிறார். இந்திய துணைக்கண்டத்தில் நடக்கவுள்ள 2011 உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் சச்சின், அதன் பின்பும் இரண்டு ஆண்டுகள் வரை அணியில் நீடிக்கலாம். என்னைப் பொறுத்தவரையில், இந்தியாவின் உயர்ந்த விருதான "பாரத் ரத்னாவை' இவருக்கு வழங்குவது தான் சரியாக இருக்கும் என நினைக்கிறேன்.
இவ்வாறு வடேகர் தெரிவித்தார்.
கபில் தேவ் சம்மதம்:
முன்னாள் இந்திய அணி கேப்டன் கபில் தேவ் கூறுகையில்,"" சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த 21 ஆண்டுகளாக, பல சாதனைகளை படைத்து வருபவர் சச்சின். இவர் "பாரத் ரத்னா' விருதுக்கு தகுதியானவர். சச்சினுக்கு இந்த விருது கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சியடைவோம். ஒருவேளை அடுத்த போட்டியில் இவர் "டக் அவுட்டானால்' கூட, விருது வழங்க வேண்டும் என்றுதான் சொல்வேன். ஏனெனில் ஒரு போட்டியை மட்டும் வைத்து அவரை எடைபோட முடியாது. ஒட்டுமொத்தமாக அவரது சாதனைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்,'' என்றார்.
சச்சினுக்கு முதலிடம்:
 முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர் வெங்சர்க்கார் கூறுகையில்,"" விளையாட்டு வீரர் ஒருவருக்கு "பாரத் ரத்னா' விருது வழங்கப்படும் என்றால் அதனைப் பெற சச்சினைத் தவிர, யாரும் இல்லை. இவருக்கு கட்டாயம் இந்த விருது கொடுக்கவேண்டும்,'' என்றார்.


No comments:

Post a Comment